(நா.தனுஜா)

பொலிஸாரால் நிரூபிக்கமுடியாத குற்றத்திற்கான சிறையில் அடைத்துவைக்கப்பட்டிருந்த சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் ஷானி அபேசேகரவும் உதவிப் பொலிஸ் பரிசோதகர் மென்டிஸும் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளமை ஆறுதலையும் நம்பிக்கையையும் அளித்தாலும் அவர்களது பாதுகாப்புத்தொடர்பான அச்சத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது என்று படுகொலைசெய்யப்பட்ட ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்கவின் மகள் அகிம்சா விக்கிரமதுங்க தெரிவித்துள்ளார்.

சிறிசேனவும் ரணிலும் எனது தந்தை படுகொலைசெய்யப்பட்டமை குறித்த விசாரணைகளை  குழப்பினார்கள் - லசந்தவின் மகள் | Virakesari.lk

இதுகுறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் செய்திருக்கும் பதிவிலேயே அகிம்சா விக்கிரமதுங்க மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். 

அதில் அவர் மேலும் கூறியிருப்பதாவது:

பொலிஸாரால் நிரூபிக்கமுடியாத குற்றத்திற்காக இலங்கையின் மிகச்சிறந்த குற்றவிசாரணை அதிகாரியான ஷானி அபேசேகர சுமார் ஒருவருடகாலம் சிறையில் அடைத்துவைக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் ஷானி அபேசேகரவையும் உதவி பொலிஸ் பரிசோதகர் மென்டிஸையும் பிணையில் விடுதலை செய்வதற்கு மேன்முறையீட்டு நீதிமன்றத்தினால் மேற்கொள்ளப்பட்டிருக்கும் தீர்மானம் மனஆறுதலையும் நம்பிக்கையையும் விதைத்தாலும், அவர்களின் பாதுகாப்புத்தொடர்பில் மேலும் அச்சத்தை ஏற்படுத்துகின்றது.

ஷானி அபேசேகர மற்றும் அவரின் கீழ் பணியாற்றிய குற்றப்புலனாய்வுப்பிரிவு அதிகாரிகளால் அச்சமின்றி முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் காரணமாகவே எனது தந்தை லசந்த விக்கிரமதுங்கவிற்கும் வன்முறைகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் என்ன நேர்ந்தது என்பதை அறிந்துகொள்ள முடிந்தது.

இந்த அதிகாரிகள் அவர்களது தைரியமான செயற்பாடுகளின் காரணமாக பல்வேறு துன்பங்களுக்கு முகங்கொடுத்துள்ளனர்.

இத்தகைய துன்புறுத்தல்களை முறியடிப்பதற்காகப் பயணிக்கவேண்டியுள்ள நீண்ட பாதையில், ஷானி அபேசேகரவின் விடுதலை என்பது முதற்படி மாத்திரமேயாகும்.

வேறு எந்தவொரு தரப்பினரும் பதிலளிக்க முன்வராத சந்தர்ப்பத்தில், நீதியைப் பெறுவதற்கான எனது பிரார்த்தனைகளுக்கு ஷானி அபேசேகரவும் அவரது அதிகாரிகளும் பதில் வழங்கினார்கள்.

வரலாற்றின் வளைவுகள் அவர்களுக்கான நீதியை உறுதிசெய்வதை நோக்கி நகர்த்திச்செல்லும் என்று முன்னெப்போதையும் விட இப்போது அதிகமான நம்புகின்றேன் என்று குறிப்பிட்டுள்ளார்.