(இராஜதுரை ஹஷான்)

கொவிட்-19 வைரஸ் தாக்கத்தினால் பொருளாதார ரீதியில் பெரும்  நெருக்கடிக்குள்ளாகியுள்ள  மக்களிடமிருந்து  தவணை கடன்களை மீள பெறும் போது அவர்கள் எதிர் கொள்ளும்  பிரச்சினைகளை குறைத்துக் கொள்வதற்கு  தேவையான சிறந்த திட்டங்களை செயற்படுத்துமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ  மத்திய வங்கியின் அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.

தற்போதைய பொருளாதார நிலைமை குறித்து பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிற்கும், மத்திய வங்கியின் அதிகாரிகளுக்கும் இடையிலான பேச்சுவார்த்தை இன்று புதன்கிழமை அலரி மாளிகையில் இடம்பெற்றது. 

இதன் போதே பிரதமர் இவ்வாறு ஆலோசனை வழங்கினார்.

கொவிட்-19 வைரஸ் தாக்கத்திற்கு மத்தியில் தேசிய பொருளாதாரத்தை  சிறந்த முறையில் முன்னெடுத்து செல்லும் செயற்திட்டங்களை மத்திய வங்கியின் அதிகாரிகள் தெளிவுபடுத்திய பிரதமர் , வணிக கடன்களை பெற்றுக் கொண்ட மக்கள் எதிர்க் கொள்ளும் பிரச்சினைகள் குறித்து அதிக கவனம்  செலுத்தினார்.

 வாடிக்கையாளர்களிடமிருந்து தவணை கடன்களை மீள பெற்றுக் கொள்ளும் போது அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை குறைத்துக் கொள்வதற்கு தேவையான சிறந்த திட்டங்களை செயற்படுத்துவது அவசியம் என பிரதமர் மத்திய வங்கியின் அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.

வங்கி மற்றும் நிதி நிறுவனங்களிடமிருந்து  மக்கள் கடன்களை  பெற்றுக் கொள்ள தங்களின் வீட்டின் உறுதிப்பத்திரத்தை பிணை வைக்கிறார்கள்.

சில வேளைகளில்  அவர்களுககு அவர்களின் வீடு இல்லாமல் போகும் சூழல் ஏற்படலாம். இவ்வாறான செயற்பாடுகள்  அவர்களை உளவியல் ரீதியில் பாதிக்க கூடும். ஆகவே இதற்கு  மாற்றீடான வழிமுறைகளை  கைளாளுமாறு பிரதமர் குறிப்பிட்டார்.