(எம்.மனோசித்ரா)

ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்தனவை குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகுமாறு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

நாளை வியாழக்கிழமை காலை 10 மணிக்கு அவர் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகவுள்ளார்.

கொவிட் விவகாரம் அரசாங்கத்தின் முதன்மை வியாபாரம் - காவிந்த | Virakesari.lk

இது குறித்து பாராளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்தன தெரிவிக்கையில்,

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களின் பின்னர் பொருளாதாரம் உள்ளிட்ட சகல துறைகளிலும் அரசாங்கம் பாரியளவில் வீழ்ச்சியடைந்து கொண்டிருக்கிறது.

எனவே உயிரத்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடையவர்களுக்கு எதிராக துரிதமாக சட்டத்தை நடைமுறைப்படுத்துமாறு அரசாங்கத்தை வலியுறுத்துகின்றோம்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் பரிந்துரைகளை துரிதமாக நடைமுறைப்படுத்துமாறும் கேட்டுக் கொள்கின்றோம்.

வழக்கு தாக்கல் செய்வதற்கு உகந்த ஆவணங்கள் இந்த அரசாங்கத்தினால் சட்டமா அதிபருக்கு வழங்கப்படவில்லை. உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்கும் வரை இந்த அரசாங்கத்தால் முன்னேற முடியாது.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு நியாயத்தை பெற்றுக் கொடுக்குமாறு முன்வைக்கப்பட்ட கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை.

எனினும் உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடையவர்கள் அரசாங்கத்தினுள் இருப்பதாக அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். இது தொடர்பில் நாம் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடளித்துள்ளேன்.

இது தொடர்பில் விசாரணைகளை முன்னெடுப்பதற்காகவே குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகுமாறு எமக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்க்கட்சி என்ற ரீதியில் நாம் எமது கடமைகளை நிறைவேற்றுவோம். அதே போன்று அரசாங்கம் அதன் கடமையை நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்துகின்றோம் என்றார்.