(எம்.மனோசித்ரா)

பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான வாகன இறக்குமதி தொடர்பில் அமைச்சரவை பத்திரம் சமர்பிக்கப்படுவதற்கு முன்னரே எவ்வாறு கடன் அனுமதி பத்திரம் வழங்கப்பட்டது என்று இலங்கை வங்கி தலைவரிடம் கேள்வியெழுப்பியுள்ள  மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.) , தகவல் அறியும் உரிமை சட்டத்தின் ஊடாக இது தொடர்பான தகவல்களையும் கோரியுள்ளது.

ஜே.வி.பி.யின் மத்திய குழு உறுப்பினர் சட்டத்தரணி சுனில் வடகலவினால் இவ்வாறு தகவல் கோரப்பட்டுள்ளது. இது குறித்து சட்டத்தரணி சுனில் வடகல இலங்கை வங்கி தலைவருக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது :

பாராளுமன்ற உறுப்பினர்களுக்காக இறக்குமதி செய்யப்படவுள்ள வாகனங்களுக்காக கடந்த ஏப்ரல் 22 ஆம் திகதி அல்லது அதனை அண்மித்த தினங்களில் கடன் அனுமதி பத்திரம் வழங்கப்பட்டுள்ளதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. இவ்வாறு கடன் அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சின் செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகள் ஊடகங்களில் வெளியிட்டுள்ள கருத்துக்கள் ஊடாக உறுதிப்படுத்தியுள்ளனர்.

எவ்வாறிருப்பினும் , இவ்வாறு வாகனங்களை இறக்குமதி செய்வதற்காக நிதி அமைச்சர் என்ற ரீதியில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவினால் மே மாதம் 18 ஆம் திகதியே அமைச்சரவை பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இதன் போது வாகன இறக்குமதிக்காக கடன் அனுமதி பத்திரத்தை பெற்றுக் கொள்வதற்கான அமைச்சரவை அனுமதி கோரப்பட்டுள்ளது. அதற்கமைய மே மாதம் 18 ஆம் திகதியே அதற்கான அனுமதியும் கிடைக்கப் பெற்றுள்ளது.

அதன் பின்னர் இவ்வாறு வாகனங்களை இறக்குமதி செய்வது தொடர்பில் மக்கள் மத்தியில் எழுந்த எதிர்ப்புக்களின் காரணமாக மே மாதம் 24 ஆம் திகதி நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் இந்த செயற்பாட்டை இடைநிறுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டது.

மேற்கூறிய காரணிகளுக்கு அமைய வாகன இறக்குமதிக்கு அமைச்சரவை அனுமதி கிடைக்கப் பெறுவதற்கு முன்னரே , இலங்கை வங்கி அதற்கான கடன் அனுமதி பத்திரத்தை வழங்கியுள்ளமை தெளிவாகிறது. மேலும் கடன் அனுமதி பத்திரம் வழங்கப்பட்டுள்ள காலப்பகுதியில் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி ஒழுங்குமுறைகளுக்கு அமைய வாகன இறக்குமதிக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. தற்போது வரையும் நடைமுறையிலுள்ள 2231/18 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானி அறிவிப்பில் இது தொடர்பில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.