அரசாங்கம் 49 ரூபாய் இலாபத்திற்கு பெற்றோலை விற்பனை செய்கிறது: சமன் ரத்னப்பிரிய குற்றச்சாட்டு

By J.G.Stephan

16 Jun, 2021 | 06:28 PM
image

(நா.தனுஜா)
உலக சந்தையில் எரிபொருளின் விலையை அடிப்படையாகக்கொண்டு நோக்குகையில், கப்பல் மூலம் இலங்கைக்குக் கொண்டுவரப்பட்டதன் பின்னர் ஒரு லீற்றர் பெற்றோலின் விலை 96 ரூபாவாகவே காணப்படும். அதனுடன் போக்குவரத்துச் செலவுகளையும் சேர்த்தால் பெற்றோல் லீற்றர் ஒன்றின் இறுதிவிலை 108 ரூபாவாகும். ஆனால் அரசாங்கம் 49 ரூபாய் இலாபம் வைத்து பெற்றோலை விற்பனை செய்கின்றது என்று ஐக்கிய தேசியக்கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சமன் ரத்னப்பிரிய சுட்டிக்காட்டினார்.

எரிபொருள் விலையுயர்வு தொடர்பில் கருத்து வெளியிட்ட அவர் மேலும் கூறியதாவது:

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக நாட்டு மக்கள் பல்வேறு நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்துள்ள நிலையில், எரிபொருள் விலையை அதிகரித்து அவர்களை அரசாங்கம் மேலும் பாரிய நெருக்கடிக்குள் தள்ளியிருக்கிறது. இது அரசியல் ரீதியில் அரசாங்கத்தினால் இழைக்கப்பட்ட மிகப்பாரிய தவறாகும். கொவிட் - 19 பரவல் காரணமாக நாளாந்தம் சுமார் 50 - 60 வரையில் உயிரிழப்புக்கள் பதிவாகின்றன. அதேபோன்று 2,500 இற்கும் அதிக எண்ணிக்கையான தொற்றாளர்கள் தினமும் இனங்காணப்படுகின்றார்கள்.

நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டுவரும் பி.சி.ஆர் பரிசோதனைகளின் எண்ணிக்கை குறைவாக இருப்பதன் காரணமாகவே 2500 - 3000 வரையிலான தொற்றாளர்கள் அடையாளம் காணப்படுகின்றார்கள். மாறாக நாளொன்றில்  மேற்கொள்ளப்படும்  பி.சி.ஆர் பரிசோதனைகளின் எண்ணிக்கையை அதிகரித்தால், இனங்காணப்படும் தொற்றாளர்களின் எண்ணிக்கையும் பெருமளவால் அதிகரிக்கும்.

உண்மை நிலைவரம் இவ்வாறிருக்கையில் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டுவரும் நடவடிக்கைகளின் விளைவாக தொற்றாளர்களின் எண்ணிக்கையை சரிவர இனங்காணமுடியவில்லை. அதேபோன்று மக்களின் வாழ்வாதாரம்  முழுமையாகச்  சரிந்துள்ளது. நாடளாவிய ரீதியில் அதிதீவிர பயணக்கட்டுப்பாடு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளமையின் காரணமாக, அன்றாட ஊதியம் பெறுவோர் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு ஏற்கனவே பல்வேறு பிரச்சினைகள் இருக்கும்போது, அவற்றுக்கு மேலாக எரிபொருள் விலையையும் அதிகரித்து மக்கள் மீது பெருஞ்சுமையை சுமத்துவதற்கு அரசாங்கம் ஏன் முற்படுகின்றது? நாட்டுமக்கள் தொடர்பில் சிந்திக்கும் எந்தவொரு அரசாங்கமும் இவ்வாறான நடவடிக்கைகளை மேற்கொள்ளாது என்றார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right