(இராஜதுரை ஹஷான்)

சுகாதார பாதுகாப்பு அறிவறுத்தல்களுக்கு அமைய பாடசாலைகளை மீள திறக்க அரசாங்கம் அதிக அக்கறை கொண்டுள்ளது.

பாடசாலைகளை திறப்பதற்கு முன்னர் ஆசிரியர்கள், அதிபர்கள், மற்றும்  பாடசாலை நிர்வாக குழுவினருக்கு  தடுப்பூசிகளை வழங்க  சுமார்  279 020 தடுப்பூசிகளை வழங்குவது அவசியமாகும் என  கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல் பீறிஸ் தெரிவித்தார்.

பாடசாலைகளை மீள திறத்தல் தொடர்பில் கல்வி அமைச்சில் விசேட வைத்திய நிபுணர்களுடன் இன்று இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் போது கல்வி அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

 அவர் மேலும் குறிப்பிடுகையில்,

கொவிட் -19 வைரஸ் தாக்கத்தின் காரணமாக  நாடு தழுவிய ரீதியில்  தற்போது பயணத்தடை அமுல்படுத்தப்பட்டுள்ளது. தற்போதைய சூழ்நிலையில் பாடசாலைகளை மீள திறக்கும் தீர்மானத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும். கொவிட்-19 வைரஸ் தாக்கத்தின் காரணமாக கல்வித்துறை பாரிய சவாலை எதிர்க் கொண்டுள்ளது.

 நிகழ்நிலை முறைமை ஊடாக மாணவர்களின் கற்றல் நடவடிக்கை முழுமையடையாது இருப்பினும் தற்போதைய நெருக்கடியான சூழ்நிலையில் அதனை தவிர்த்து மாற்று நடவடிக்கைகள் ஏதும் கிடையாது.

ஆகவே சுகாதார பாதுகாப்பு அறிவுறுத்தல்களுக்கு அமைய பாடசாலைகளை விரைவில் திறக்க அதிக கவனம் செலுத்தியுள்ளோம்.

பாடசாலைகளை மீள திறப்பதற்கு முன்னர்  பாடசாலை  சேவையாளர்கள், அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள்  ஆகியோருக்கு கொவிட் -19 தடுப்பூசி செலுத்துவது  அவசியமாகும் இதற்கு சுமார் 279 020 தடுப்பூசிகளை பெற்றுக் கொள்வது அவசியமாகும் . இவ்விடயம் குறித்து  சுகாதார அமைச்சுடன் பேச்சுவார்த்தையினை முன்னெடுத்துள்ளோம்.

பாடசாலை மாணவர்களின் போக்குவரத்து நடவடிக்கை தொடர்பில் பிரத்தியேக திட்டங்களை வகுப்பது அவசியமாகும். இதற்கான பேச்சுவார்த்தை போக்குவரத்து  அமைச்சுடன் எதிர்வருமட வாரம் இடம் பெறவுள்ளது. 

போக்குவரத்து சேவையில் சுகாதார பாதுகாப்பு அறிவுறுத்தல்களை கடுமையாக பின்பற்றுவதற்கு  தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கொவிட்-19 வைரஸ் தொற்று மிகவும் குறைவாக  உள்ள பகுதிகளில் உள்ள பாடசாலைகளை மீள திறத்தல் குறித்து சுகாதார தரப்பினருடன் பெச்சுவாரத்தையினை முன்னெடுத்துள்ளோம்.

பாடசாலைகளை திறப்பதற்கு சுகாதார அமைச்சும். சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகமும்  பல  திட்டங்களை முன்னெடுத்துள்ளது.

பாடசாலைகளின் சுகாதர பாதுகாப்பு அறிவுறுத்தல்களை கடுமையான முறையில் பின்பற்றுவது கட்டாயாகும்.. சுகாதார பாதுகாப்பை உறுதிப்படுத்தும் திட்டங்களை வகுக்கும்  பொறுப்பு விசேட வைத்திய நிபுணர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.  சுகாதார தரப்பினரது அனுமதியுடனும், ஆதரவுடனும் பாடசாலைகளை விரைவில் திறக்க எதிர்பார்த்துள்ளோம் என்றார்.