(லியோ நிரோஷ தர்ஷன்)

சகல விதமான இனப்பாகுபாடுகளை கையாள்வதில் இலங்கை அண்மைக்காலமாக சாதகமான முன்னேற்றங்களை வெளிப்படுத்தியுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் இனப்பாகுபாட்டை ஒழிப்பது தொடர்பான குழு தெரிவித்துள்ளது.

கடந்த 2 ஆம் திகதி தொடக்கம் 26 ஆம் திகதி வரையிலான அமர்வின் போது கிறீஸ், பிரித்தானியா, பரகுவே, தென்னாபிரிக்கா, லெபனான், உக்ரேன், இலங்கை மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளின் அனைத்துவிதமான இன பாகுபாடுகளை ஒழிப்பதற்கான சர்வதேச சாசனத்தின் முன்னெடுப்புகள் குறித்து அராயப்பட்டது.

இதன்போதே இலங்கை தொடர்பில் குறிப்பிட்டளவில் முன்னேற்றங்களை கண்டறிந்துள்ளதாக அந்த குழு தெரிவித்துள்ளது. அனைத்துவிதமான இன பாகுபாடுகளை ஒழிப்பதற்கான சர்வதேச சாசனத்தினத்தினை உள்நாட்டில் காணப்படக்கூடிய இனப்பாகுபாடுகளை ஒழிப்பதற்காக கையாளுகின்ற திட்டங்கள் அந்தந்த நாடுகளின் அரசாங்கங்களின் பங்களிப்பு குறித்து கூறிய கவனத்தை இந்த குழுவினர் செலுத்தியுள்ளனர். 

இதன் முழுமையான அறிக்கை  வெளியிடப்பட்டுள்ள நிலையில் அது இலங்கையின் சாதகமான முன்னேற்றங்கள் குறித்து குறிப்பிடப்பட்டுள்ளது. எதிர்வரும் நவம்பர் மாதம் இடம்பெறவுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் இனப்பாகுபாட்டை ஒழிப்பது தொடர்பான குழுவின் அமர்வு இடம்பெறவுள்ள நிலையில் அங்கு ஏனைய வேறுசில நாடுகள் தொடர்பிலும் ஆராயப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.