(எம்.எம்.சில்வெஸ்டர் )
கொரோனா தொற்று அச்சுறுத்தல்  காரணமாக மேல்மாகாண  மாணவர்கள்  9 நாட்கள் மாத்திரமே பாடசாலைக்கு சமூகமளித்துள்ளதாக கல்வி அமைச்சுக்கு அறிக்கையிடப்பட்டுள்ளது.

மார்ச் மாதம் 29 ஆம் திகதி முதல் ஏப்ரல் 9 ஆம் திகதி ஆகிய காலப்பகுதியிலேயே மேல் மாகாண மாணவர்கள் பாடசாலைக்கு சமூகமளித்துள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

"ஏனைய மாகாணங்களில், ஜனவரி மாதம் 11 ஆம் திகதி முதல் ஏப்ரல்  மாதம் 9 ஆம் திகதி வரையான காலப்பகுதிகளிலும், ஏப்ரல் 19 ஆம் திகதி முதல் ஏப்ரல் 23 ஆம் திகதி வரையான காலப்பகுதிகளிலும் பாடசாலைக்கு சென்றுள்ளனர்.

பாடசாலைகளை மீண்டும் ஆரம்பிப்பதற்கு முன்னர்,  கொரோனா வைரஸை தடுப்பதற்காக ஆசிரியர்கள் மற்றும் கல்விசாரா ஊழியர்களுக்கு 279,000 தடுப்பூசிகளும் கல்வி அமைச்சு , பரீட்சைகள் திணைக்களம், இராஜாங்க கல்வி அமைச்சு ஆகியவற்றின் ஊழியர்களுக்கு 2000 தடுப்பூசிகளும் வழங்குவதற்கான அனுமதி பெறப்பட்டுள்ளது.  

மேலும் பாடசாலை மாணவர்களுக்கும் தடுப்பூசியேற்றுவது தொடர்பில் கவனம் செலுத்தியுள்ளோம்.  இதன் முதற்கட்டமாக உயர்தரத்துக்கு தோற்றவுள்ள 202,000 மாணவர்களுக்கு தடுப்பூசியேற்றுவதற்கு சுகாதார சேவை பிரிவினருடனான பேச்சுவார்த்தையின்போது தீர்மானிக்கப்பட்டது.

மேலும், தற்போது ஒன்லைன் மூலமாக கற்றல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் மாணவர்கள் தொடர்புப்படுத்தும் வசதிகள் (சிக்னல்) இல்லாது தவித்து வருகின்றனர். இந்த தொடர்புப்படுத்தும் வசதிகள் இல்லாத பிரதேசங்களை இனங்கண்டு அதற்கான தீர்வுகளை பெற்றுக்கொடுப்பதற்கு  கல்வி அமைச்சு நேரடியாக தலையிட்டு, முறையான திட்டமொன்றை செயற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளது. எந்தவொரு தொலைப்பேசி வலையமைப்பின் ஒன்றின் மூலம் 100 ரூபாவை செலுத்தி 30 ஜிகா பயிட் இணையத்தள  வசதிகளை மாணவர்களுக்கு பெற்றக்கொடுப்பதற்கான பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகின்றோம்"  என்றார்.