அவுஸ்திரேலிய அணி வீரர் ஸ்டீவ் ஸ்மித், எம். ஆர். எஃப் டயர்ஸ் ஐ.சி.சி. ஆண்கள் டெஸ்ட் துடுப்பாட்ட வீரர் தரவரிசையில் முதலிடத்தை பிடித்துள்ளார். 

சவுத்தாம்ப்டனில் வெள்ளிக்கிழமை ஆரம்பமாகவுள்ள இந்தியாவுக்கு எதிரான ஐ.சி.சி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் தனது அணியை வழிநடத்தவுள்ள நியூசிலாந்து அணித் தலைவர் கேன் வில்லியம்சனிடமிருந்து அவர் முதல் இடத்தை தட்டிப் பறித்துள்ளார்.

லார்ட்ஸில் நடந்த முதல் டெஸ்டில் 13 ஓட்டங்கள் எடுத்த பின்னர் காயம் காரணமாக இங்கிலாந்துக்கு எதிராக எட்ஜ்பாஸ்டனில் நடந்த இரண்டாவது டெஸ்டைத் தவறவிட்ட வில்லியம்சன், ஸ்மித்தின் 891 மதிப்பீட்டு புள்ளிகளுக்கு பின்னால் ஐந்து புள்ளிகள் சரிந்து, பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளார்.

இந்தப் பட்டியலில் அவுஸ்திரேலியாவின் மார்னஸ் லாபுசாக்னே 878 புள்ளிகளுன் மூன்றாம் இடத்திலும், இந்தியாவின் விராட் கோலி 814 புள்ளிகளுடன் நான்காம் இடத்திலும், இங்கிலாந்தின் ஜோ ரூட் 797 புள்ளிகளுடன் ஐந்தாம் இடத்திலும் உள்ளனர்.