பெரும்பாலான பாராளுமன்றங்களிலும், பாராளுமன்றத்துக்குள் சபாநாயகரின் அதிகாரச் சின்னமாகவும் விளங்குவது செங்கோலாகும். 

இலங்கை பாராளுமன்ற பாராம்பரியத்துக்கு அமைய சபை அமர்வொன்று செல்லுபடியாக வேண்டுமாயின் சபாபீடத்துக்குள் செங்கோல் வைக்கப்பட்டிருப்பது அத்தியாவசியமானதாகும்.

பிரித்தானிய பாராளுமன்ற சம்பிரதாயத்துக்கு அமைய தற்பொழுதும் இலங்கை பாராளுமன்றத்தில் அமர்வொன்று உத்தியோகபூர்வமாக ஆரம்பிப்பதற்கு முன்னர் செங்கோலைத் தாங்கியதாக படைக்கலசேவிதர் முன்செல்ல அவரைத் தொடர்ந்து சபாநாயகர், பாராளுமன்ற செயலாளர் நாயகம் உள்ளிட்ட அதிகாரிகள் சபா மண்டபத்துக்குள் நுழைவார்கள். 

சபாபீடத்துக்குள் எடுத்துவரப்படும் செங்கோல் அதற்காக அமைக்கப்பட்டிருக்கும் தாங்கியில் வைக்கப்படுவதும் கட்டாயமாகும். 

நீங்கள் காணும் இந்த செங்கோல் கராட் நிறுவனத்தினால் உருவாக்கப்பட்டு பிரித்தானிய பொதுச் சபையினால் 1949 ஆம் ஆண்டு இலங்கைக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்டது. 

இலங்கை கலாசாரத்தின் அடையாளத்தை செங்கோலில் சேர்த்தவர், குறித்த துறையில் சிறப்புப் பெற்றவரும் அரசாங்கத்தின் அப்போதைய லலித கலைநிலையத்தின் கலாநிதி எஸ்.பி. சார்ள்ஸ் ஆகும்.

அவ்வாறு உருவாக்கப்பட்ட செங்கோல்; 28  இறாத்தல் அல்லது 12.5 கிலோ கிராம் எடையைக் கொண்டிருப்பதுடன், 48 அங்குலம் நீளமுடையது. கலைத்துறையின் அடையாளமான தாமரை இதன் தொனிப்பொருளாக சேர்க்கப்பட்டுள்ளது. வெள்ளி, 18 கரட் தங்கம் மற்றும் நீலமாணிக்கக் கற்கள் என்பவற்றினால் அலங்கரிக்கப்பட்டிருப்பதுடன், இதில் காணப்படும் கருங்காலி மரவேலைப்பாடு 28 அங்குலமாகும்.

அதற்கு மேலே காணப்படுவது பூமியின் நான்கு திசைகளையும் குறிக்கும் வகையில் தாமைரைப் பூவின் வடிவம் கொண்ட வெள்ளி மற்றும் 18 கரட் தங்கத்தினாலான நான்கு செதுக்கல்களாகும். அதனுடன் அருமையான சதுர வடிவ கனவுருவொன்று இணைந்துள்ளது. 

நிலைபேறான தன்மையை குறிக்கும் வகையில் சூரியன் மற்றும் சந்திரன், முன்னோக்கிச் செல்வதை குறிக்கும் வகையில் சக்கரமும் செழிப்பை குறிக்கும் வகையில் கலசமும் அதன் நான்கு பக்ககங்களிலும் செதுக்கப்பட்டுள்ளன.