(க.கமலநாதன்)

நாட்டின் முதல் பிரஜை மீது முன்வைக்கப்படும் ஊழல் குற்றச்சாட்டு நாட்டின் புகழுக்கு இழுக்காக அமையும். எனவே நாட்டின் புகழுக்கு இழுக்கை ஏற்படுத்த விரும்பாதவராயின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தானாகவே பதவி விலகியிருக்க வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்தார்.

பாகொடையில் அமைந்துள்ள தூய்மையான நாளைக்கான அமைப்பின் தலைமை அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஊழல் செயற்பாடு தொடர்பில் அவுஸ்திரேலிய ஊடகமொன்று  வெளியிட்ட செய்தி தற்போது நாட்டில் அதிகம் பேசப்பட வேண்டிய விடயமாகும். இருப்பினும் துரதிஷ்டவசமாக அதைப்பற்றி அதிகம் கவனம் செலுத்த வேண்டிய அரசாங்க தரப்பினால் இவ்விடயம் மூடி மறைக்கப்பட்டுள்ளதால்  அதன் உண்மைத்தன்மை மக்களிடத்தில் சென்றடையவில்லை.

அவுஸ்திரேலியர்களுடனான வர்தகச் செயற்பாடுகளின் போது நிதி மோசடி செய்தாக என்மீது குற்றம் சுமத்தினர். என்னால் பாதிக்கப்பட்ட  இருவரும் அவுஸ்திரேலிய பர்த் நகரை சேர்ந்தவர்கள் என்று குறிப்பிடப்பட்டனர். அது போலியான குற்றச்சாட்டு என்பது ஒருபுறமிருக்க தற்போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் விதி விளையாட ஆரம்பித்துள்ளது. அவர் மஹிந்த அரசாங்கத்தில் அமைச்சராக இருந்த போது ஊழல் செயற்பாடொன்றில்  ஈடுபட்டுள்ளதாக கூறும் பத்திரிகையும் பர்த் பகுதியிலிருந்தே வெளியாகின்றமை வேடிக்கையானது. 

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மீது எமது நாட்டிலிருந்து எவரும் சென்று குற்றம் சாட்டவில்லை. மாறாக அந்நாட்டு நிறுவனம் ஒன்று சட்டவிரோதமான முறையில் பிறநாட்டு ஒப்பந்தங்களை பெற்றுக்கொண்டு ஒப்பந்தம் பெறும் நாட்டில் உள்ள அரசியல் தலைவர்களுக்கு லஞ்சம் வழங்கிவந்துள்ளமையினை அவுஸ்திரேலிய பொலிஸார் கண்டுடறிந்துள்ளனர்.  இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வந்திருந்த போதே அவ்வாறானதொரு ஊழல் செயற்பாட்டில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் தொடர்புள்ளதென்பது தெரியவந்துள்ளது.

இது 1.82 மில்லியன் டொலர் பெறுமதியாலான நிதி மோசடி செயற்பாடு. என்பதை உலக வங்கியின் நிதி மோசடி செயற்பாடுகள் தொடர்பில் விசாரணை செய்யும் குழுவும் சுட்டிக்காட்டியுள்ளது. இவ்வாறன தருனத்தில் நான் இந்நாட்டு ஜனாதிபதியாகவிருந்து என்மீது இவ்வாறு குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டிருந்தால் உடனடியாக பதவி விலகியிருப்பேன். காரணம் நாட்டின் முதல் பிரஜையாகவுள்ளவர் மீது ஊழல் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுமாயின் அது எமது நாட்டின் புகழுக்கு இழுக்காக அமையும்.

எவ்வாறாயினும் எமது நாட்டின் மீது பற்றுள்ள ஒரு தலைவராக அவர் இருந்திருப்பாராயின் உடனடியாக பதவி விலகியிருக்க வேண்டும். அவ்வாறு இல்லாவிட்டால் இந்த பாரிய ஊழல் தொடர்பில் விசாரணை செய்ய நம்நாட்டில் உயிர்வாழும் முன்னாள் பிரதம நீதியரசர்கள் சகலரும் அங்கத்துவம் வகிக்கும்  வகையில்  ஜனாதிபதி ஆணைக்குழுவை உருவாக்கி விசாரணைகளை உடனடியாக முன்னெடுக்க வேண்டும்