(எம்.மனோசித்ரா)

எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டுள்ளமையால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிதி நிவாரணத்தை வழங்குமாறு ஐக்கிய தேசிய கட்சி வலியுறுத்தியுள்ளது.

ஐக்கிய தேசிய கட்சியின் பிரதி தலைவர் ருவன் விஜேவர்தன இதனைத் தெரிவித்துள்ளார்.  

அறிக்கையொன்றை வெளியிட்டு இதனை தெரிவித்துள்ள அவர் அதில் மேலும் கூறியுள்ளதாவது :

கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு எரிபொருள் விலை அதிகரிப்பானது பாரிய சுமையாக அமைந்துள்ளது. உலக சந்தையில் எரிபொருள் விலை மாற்றங்கள் ஏற்படும் போது இலங்கையில் அதன் விலையை முகாமைத்துவம் செய்வதற்காக எரிபொருள் சூத்திரம் அறிமுகப்படுத்தப்பட்டது.

எவ்வாறிருப்பினும் கடந்த ஆண்டு எரிபொருள் விலை பாரியளவில் வீழ்ச்சியடைந்தது. எனினும் இலங்கையில் அதன் விலை குறைக்கப்படவில்லை.

உலக சந்தையில் எரிபொருள் விலை வீழ்ச்சியடைந்தமையால் கடந்த ஆண்டு அரசாங்கத்திற்கு 1.3 பில்லியன் டொலர் இலாபம் கிடைக்கப் பெற்றுள்ளது. எனினும் இதன் பயன் மக்களை சென்றடையவில்லை.

தற்போது கொவிட் தொற்றினால் மக்கள் பாரிய பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்துள்ளனர். எனவே கடந்த ஆண்டு பெற்றுக் கொண்ட இலாபத்தின் மூலம் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணம் வழங்குமாறு அரசாங்கத்தை வலியுறுத்துகின்றோம்.