(எம்.மனோசித்ரா)
அமைச்சரவையில் எரிபொருள் விலையேற்றம் தொடர்பான  சர்ச்சை குறித்து பேசப்படவில்லை. எனினும் துறைசார் அமைச்சர் விரைவில் இவ்விடயம் தொடர்பில் தெளிவுபடுத்துவார் என்று அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.

இன்று செவ்வாய்கிழமை நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

உலக சந்தையில் எரிபொருள் விலை வீழ்ச்சியடைந்த போது இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கு  கிடைக்கப்பெறும் இலாபத்தைக் கொண்டு நிதியமொன்றை அமைப்பது குறித்து கலந்துரையாடப்பட்ட  உண்மையாகும். எனினும் எரிபொருள் விலை குறித்த பிரச்சினை அண்மையில் உருவானதல்ல.

எவ்வாறிருப்பினும் இது தொடர்பில் விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் விரைவில் தெளிவுபடுத்துவார். இதன் போது பெற்றோலிய கூட்டுத்தாபனம் அடைந்துள்ள நஷ்டம், நஷ்டத்துடன் எதிர்காலத்தில்  முன்னெடுத்து செல்லக் கூடிய வேலைத்திட்டங்கள் யாவை என்பது தொடர்பிலும் அறிவிக்கப்படும்.

நிதியம் என்பது இதன் ஒரு பகுதி மாத்திரமேயாகும். கடந்த 10 - 15 ஆண்டுகள் நஷ்டத்தில் இயங்குகின்ற பெற்றோலிய கூட்டுத்தாபனத்தை சுமார் ஒரு வருட நிதியத்தினால் மாத்திரம் நிவர்த்தி செய்து விட முடியாது.

அமைச்சரவையின் பிரதானியாக  ஜனாதிபதியே செயற்படுவார். எனினும் சில தவிர்க்க முடியாத காரணிகளால் திங்களன்று அவர் அமைச்சரவை கூட்டத்திற்கு சமூகமளிக்காமையால் , பிரதமர் தலைமையில் இவ்வார அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இதன் போது எரிபொருள் விலை தொடர்பில் எவ்வித விடயமும் கலந்துரையாடப்படவில்லை என்றார்.