(இராஜதுரை ஹஷான்)
நாட்டு மக்கள் பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ள  வேளையில்  எரிபொருள்  விலையினை அதிகரித்துள்ளமை ஏற்றுக் கொள்ள முடியாது.  மக்களின் தரப்பில் இருந்தே பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் செயற்பட்டுள்ளார்.

எனவே, எரிபொருள் விலையேற்றம் குறித்து ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தையினை முன்னெடுக்கவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் அருந்திக பெர்னான்டோ தெரிவித்தார். சாகர காரியவசம், உதய கம்மன்பில ஆகியோரின் கருத்து முரண்பாடுகள் அரசாங்கத்தை ஒருபோதும் பலவீனப்படுத்தாது எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இது குறித்து அவர் மேலும் குறிப்பிடுகையில்,

கொவிட் -19 வைரஸ் தாக்கத்தை கருத்திற் கொண்டு நாடு தழுவிய ரீதியில்  பயணத்தடை அமுல்படுத்தப்பட்டுள்ளது. பொருளாதார ரீதியில்  பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு  நிவாரணம் வழங்கும் நடவடிக்கை தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளது.

கொழும்பு துறைமுகத்தின் தீ விபத்துக்குள்ளான எம். வி. எக்பிரஸ் பேர்ள் கப்பலினால்  கடல்வளம் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளன. கடல்வாழ் உயிரினங்கள்  இறந்து கரையொதுங்குவதை நாளாந்தம் அவதானிக்க முடிகிறது.  ஏற்பட்டுள்ள பேரிழப்பினை நட்டஈட்டால் மாத்திரம் ஈடு செய்ய முடியாது. மறுபுறம் விவசாயத்திற்கு தேவையான உரம் தொடர்பில் முரண்பாடுகள் தோற்றம் பெற்றுள்ளன.

இரசாயன உரம் உடல் ஆரோக்கியத்திற்கும், மண்வளத்திற்கும் கேடு விளைவிக்கும் என்பதை தெரிந்தும் அதனை தொடர்ந்து பயன்படுத்த முடியாது. தூரநோக்கு கொள்கைக்கு அமையவே இரசாயன உரம் இறக்குமதி தடை செய்யப்பட்டது. இதனால் சிறுபோக உற்பத்திக்கு தேவையான உர விநியோகத்தில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

தேசிய மட்டத்தில் சேதன உர உற்பத்திக்கான நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளன.  ஆகவே பெரும்போக உற்பத்திக்கு தேவையான சேதன உரத்தை எவ்வித தட்டுப்பாடுமின்றி விநியோகிக்க முடியும்.  இவ்வாறான பல சவால்களை அரசாங்கம் தற்போது எதிர்கொண்டுள்ளது.

 நாட்டு மக்கள் பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ள வேளையில்  எரிபொருள்  விலையினை அதிகரித்துள்ளமை ஏற்றுக் கொள்ள முடியாது. எரிபொருள் விலையேற்றத்தின் காரணமாக மீன்பிடி கைத்தொழிலாளர்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளார்கள். எனவே விலையேற்றம் மீள் பரிசீலனை செய்யப்பட  வேண்டும். இவ்விடயம் குறித்து ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தையினை முன்னெடுக்கவுள்ளோம் என்றார்.