(நா.தனுஜா)

ஏற்பட்ட தீப்பரவல் அனர்த்தம் காரணமாகப் பாதிப்புக்களை எதிர்கொண்ட போதிலும் அதனைத் தெரியப்படுத்தாத நபர்கள் ,நிறுவனங்கள் அல்லது துறைகள் இருப்பின், அவர்கள் இந்த அனர்த்தத்தினால் ஏற்பட்ட பாதிப்புக்களைத் தமக்குத் தெரியப்படுத்த முடியும் என்று நீதியமைச்சு அறிவித்துள்ளது.

நீதிஅமைச்சு விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு | Virakesari.lk

எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலினால் ஏற்பட்ட சேதத்தை மதிப்பீடு செய்வதற்கு சம்பந்தப்பட்ட பல்வேறு தரப்பினரிடமிருந்தும் தகவல்களைப் பெறல் என்ற தலைப்பில் நீதியமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:

கொழும்புத் துறைமுகத்தை அண்மித்த இலங்கைக் கடற்பரப்பில்வைத்து தீப்பரவலுக்குள்ளான எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலினால் ஏற்பட்ட சேதத்தை மதிப்பீடு செய்வதற்கும் காப்புறுதிப்பணத்தைக் கோருவதற்கான சட்டநடவடிக்கைகளை இலகுபடுத்திக் கொடுப்பதற்குமென ஐந்து உபகுழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன.

காப்புறுதி தொடர்பான உபகுழு, சட்ட நடவடிக்கைகள் தொடர்பான உபகுழு, மீன்பிடித்துறை தொடர்பான உபகுழு, சுற்றுச்சூழல் விவகாரங்கள் தொடர்பான உபகுழு, பொருளாதார விவகாரங்கள் தொடர்பான உபகுழு ஆகியவையே மேற்குறிப்பிட்டவாறு நியமிக்கப்பட்டுள்ள ஐந்து உபகுழுக்களாகும்.

எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் அனர்த்தம் காரணமாக மேற்கூறப்பட்ட பிரிவுகளுக்குப் பொருந்தக்கூடியவாறான சேதங்கள் ஏற்பட்டிருப்பின், அவைதொடர்பில் எந்தவொரு தனிநபரோ அல்லது நிறுவனமோ (சேதம் தொடர்பில் இதுவரையில் அறிக்கைகள் எதனையும் சமர்ப்பித்திருக்காத தரப்பினர்) தமது தகவல்களை அல்லது கருத்துக்களை  reforms@moj.gov.lk என்ற மின்னஞ்சல் முகவரியின் ஊடாகவோ அல்லது 2445447 என்ற தொலைநகல் இலக்கத்தின் ஊடாகவோ இம்மாதம் 21 ஆம் திகதிக்கு முன்னதாக நீதியமைச்சிற்கு அனுப்பிவைக்கமுடியும்.

அவ்வாறு தகவல்களை அனுப்பிவைக்கும்போது அது மேற்கூறப்பட்ட உபகுழுக்களில் எந்தக்குழுவின் கீழ் ஆராயப்பட வேண்டும் என்பதையும் குறிப்பிட்டு அனுப்பிவைக்கவேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.