உண்மையான சமாதானம் தமிழருக்கு சுதந்திரம் அளிப்பதே : 1969 ஆம் ஆண்டு "வீரகேசரிக்கு" அளித்த பேட்டியில் தந்தை செல்வா

By Digital Desk 2

15 Jun, 2021 | 03:09 PM
image

ம.ரூபன்

இனப்பிரச்சினைக்கு எப்போது தீர்வு காணப்படும், யார் தீர்ப்பது, இந்த ஆட்சியில் அது நிறைவேறுமா என்றெல்லாம் தமிழர்கள் எதிர்பார்த்திருக்கின்றனர்.

"இலங்கைத் தமிழருக்கும், தமிழ் பிரதேசத்துக்கும் சுதந்திரம் அளிப்பதே உண்மையான சமாதானத்தை ஏற்படுத்துவதற்கான ஒரே சிறந்த வழி என்பதை இலங்கை அரசு உணரும் ஒரு காலம் வரும்" என்று தமிழரசு கட்சியின் தலைவர் தந்தை எஸ்.ஜே.வி.செல்வநாயகம் 1969 ஆம் ஆண்டு "வீரகேசரிக்கு" அளித்த பேட்டியில் குறிப்பிட்டிருந்ததார்.

"இப்போது உள்ள கோலத்தில் சிங்கள மக்கள் எமக்கு சுயாதீனம் (சுதந்திரம்) அளிப்பதற்கு தயாராக இல்லை என்பதையும் அவர் சுட்டிக்காட்டியிருந்தார். வீரகேசரியின் மூத்த ஊடகவியலாளர் கார்மேகத்துக்கு அளித்துள்ள பேட்டியில் தந்தை செல்வா இவ்வாறு தெரிவித்திருந்தார்.

யுத்தம் ஆரம்பிப்பதற்கு 50 ஆண்டுகளுக்கு முன்னரே தமிழரசுக் கட்சியினரின் சாத்வீகப் போராட்டத்தின் போதே தந்தை செல்வநாயகம் தமிழருக்கு சுதந்திரம் அளிப்பதற்கு சிங்கள மக்கள் தயாராக இல்லை என்று  கூறியுள்ளதை இன்றும் ஆட்சியாளர்களின் நடவடிக்கைகளில் காணமுடிகிறது.

1956 இல் பிரதமர் பண்டாரநாயக்காவினால் தனிச் சிங்களச் சட்டம் கொண்டுவரப்படுவதற்கு  முன்பிருந்தே இனவாதக் கருத்துக்களை சிங்களவர்கள் மத்தியில் பரப்புரை செய்யத் தொடங்கினார்கள்.

யுத்தம் ஆரம்பித்ததும் சமாதானத்துக்கான யுத்தம் !  இங்கு இனப்பிரச்சினை இல்லை  ! பயங்கரவாத பிரச்சினையே! பயங்கரவாதத்துக்கு எதிரான போ ர்! யுத்தம் முடிந்தாலே உண்மையான சமாதானம் நிலவும்! போர் என்றால் போர்! சமாதானம் என்றால் சமாதானம்! என்று பல கருத்துக்களை சிங்கள ஆட்சியாளர்கள் தெற்கிலும், வெளிநாடுகளிலும் கூறிவந்தனர்.

யுத்தம் 2009 ஆம் ஆண்டு மே மாதம் 19 ஆம் திகதியில் முடிவடைந்து பன்னிரண்டு வருடங்களாகியும் இனப்பிரச்சினைக்கான தீர்வையும் உண்மையான சமாதானத்தையும் இன்னும் காணமுடியவில்லை.

1960 ஆம் ஆண்டு மார்ச் மாதம் நடந்த தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சியை அதன் சிம்மாசனப்பிரசங்கத்தை எதிர்த்து வாக்களித்து தமிழரசுக்கட்சி கவிழ்த்தது.

ஆனால் 1965 இல் தேர்தலின் பின்பு ஐக்கிய தேசிய கட்சி  தேசிய அரசை  அமைப்பதற்கு தமிழரசுக்கட்சி ஆதரவளித்து தமிழரசுக்கட்சியின் சார்பில் முன்னாள் சொலிசிஸ்டர் ஜெனரல் மு.திருச்செல்வம் (கியூ.சி) உள்ளூராட்சி அமைச்சரானார்.

1969 இல் திருகோணமலை கோணேஸ்வர ஆலயப்பிரதேசத்தை புனிதப்பிரதேசமாக மாற்றுவதற்கு அமைச்சர் திருச்செல்வம் எடுத்த நடவடிக்கை சில பௌத்த பிக்குகளின் எதிர்ப்பால் கைவிடப்பட்டது.

இதனால் அவர் தமது அமைச்சுப் பதவியை இராஜினாமா செய்திருந்தார். தமிழரசுக்கட்சியும்  தேசிய அரசுக்கான ஆதரவை  விலக்கிக் கொண்டது. அதன் பின்பே இப்பேட்டியை தந்தை செல்வநாயகம் வீரகேசரிக்கு அளித்தார்.

"1965 இல் தேசிய அரசாங்கத்தை அமைக்க உதவிய தமிழரசுக்கட்சி, அதில் இருந்து விலகுவது என 1969 யாழ்ப்பாணம் உடுவிலில் ஏப்ரல் மாதம்  13 ஆம் திகதி  நடைபெற்ற தமிழரசு கட்சியின் தேசிய மாநாட்டில் முடிவு எடுக்கப்பட்டது." 

கடந்த நான்காண்டு காலத்தில் உரிமைப்போரை பற்றி சிந்திக்காது, தனிப்பட்ட சலுகைகளை பெறுவதிலேயே நாட்டம் கொண்டோம்.

இதனால்,மீண்டும் தமிழ் மக்களை போராட்டப் பாதையில் திசை திருப்ப சிரமப்படவேண்டிய நிலை வரும். நமது பாதை கரடு முரடானது என்பதை நாம் மகிழ்ச்சியுடனும், நம்பிக்கையுடனும் கடந்து செல்ல வேண்டும். தமிழ் மக்களின் சுதந்திரம் என்பது மிக அருமை யானது. அதனைப் பெற்றுக் கொள்வது சுலபம் அல்ல.

கடந்த நான்கு வருட கால சீவியம், தமிழ் மக்களுக்கு ஒற்றையாட்சி முறையில் சுதந்திரம் இல்லை என்று துலாம்பரமாக உணர்த்திவிட்டது. எமது இலக்காகிய சமஷ்டி முறையான அரசியல் தான் எமக்கு சுயாதீனம் கொடுக்கும். அதனை ஈற்றில் அடைந்தே தீருவோம். அதற்காக என்ன துன்பங்கள் அடைய நேரிடும் என்பதை இப்போது விபரமாக கூறமுடியாது எனவும் அப்பேட்டியில் தந்தை செல்வநாயகம் குறிப்பிட்டார்.

அவர் மேலும் அப்பேட்டியில் தெரிவிக்கையில்,

எம் மக்களின் உரிமைகள் சிலவற்றை சட்டபூர்வமாக நிலை நாட்டவும், சிங்களக் குடியேற்றத்தால் ஏற்பட்டுள்ள ஆபத்தை குறைக்கவும், சிறிமா- சாஸ்திரி ஒப்பந்தத்தில் உள்ள ஆட்சேபத்துக்குரிய அம்சங்களை நீக்கவும், தமிழ் அரச ஊழியர்களின் பிரச்சினைகளை ஓரளவு தீர்க்கவும், நாம் அரசில் அங்கம் வகித்தது ஓரளவுக்கு உதவியது.

எனினும் சிங்கள அரசியல் வாதிகளும், அவர்களின் கட்சிகளும் சம்மதிக்கமாட்டார்கள் என்பது கடந்த நான்காண்டு கால அனுபவத்தில் உறுதியானது. இக்காலத்தில் உரிமைப்போரை பற்றி சிந்திக்காது தனிப்பட்ட சலுகைகளைப் பெறுவதிலேயே தமிழரசுக்கட்சி நாட்டம் கொண்டது.

இதனால், மீண்டும் எமது போராட்டப்பாதையில் மக்களை திசை திருப்ப சிரமப்படவேண்டி வரும். ( 2015 இல் கடந்த நல்லாட்சியிலும் தமிழரசுக்கட்சி ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆதரவளித்திருந்தது இங்கு சுட்டிக்காட்ட வேண்டும்)

1969 ஆம் ஆண்டு "வீரகேசரிக்கு" அளித்த பேட்டியில்,

இந்த அரசு மாறி வேறு அரசு பதவிக்கு வந்தால் தமிழ் மக்களுக்கு சுயாதீனம் கிடைத்து விடுமா?

இலங்கை இப்போது இருக்கும் கோலத்தில் சிங்கள மக்கள் யாரும் எமக்கு சுயாதீனம் கொடுக்க ஆயத்தமாக இல்லை.

தமிழர் சுயாதீனம் எப்படி ஏற்பட முடியும் என்று நினைக்கிறீர்கள்? 

1947 க்கு முன்பு தன்னிடம் அடிமையாக இருந்த நாடுகளுக்கு பிரித்தானிய ஏகாதபத்தியம் சுதந்திரம் கொடுத்து விலகிக்கொள்ளும் என எவரும் எதிர்பார்க்கவில்லை. ஆனால், தனது சுயவிருப்பத்தின் அடிப்படையில் இந்த நாடுகளின் மக்களுக்கு சுதந்திரத்தை கொடுத்து விலகிக்கொண்டது.

உதரணமாக அயர்லாந்து தேசத்தை பிரிட்டன் பல நூற்றாண்டுகளாக அடிமைப்படுத்தி ஆட்சி செய்து வந்தது. அயர்லாந்து மக்கள் தமது சுய ஆளுகையைக்கோரி நின்றனர். இறுதியில், முதலாவது உலக யுத்தம் முடிந்ததும், அயர்லாந்துக்கு பிரிட்டன் சுதந்திரம் வழங்கியது.

தமிழ் மக்களின் கோரிக்கைகளுக்கு ஆட்சியாளர்கள் விட்டுக்கொடுக்க நேரிடும் என நம்புகிறீர்களா? 

உலகில் என்னென்ன மாற்றங்கள் வரக்கூடும் எனக்கூறமுடியாது. இறுதியில், இலங்கை அரசாங்கமே தமிழப்பிரதேசத்திற்கு சுதந்திரம் அளிப்பதே, அப்பிரதேச மக்களுக்கும், ஏனையோருக்கும் உண்மையான சமாதானத்தை ஏற்படுத்தக்கூடிய ஒரே வழி என்பதை உணரக்கூடும்.

அந்த நாள் வரும் வரையும், நாம் பொறுமை இழக்காமலும், எமது இலக்கை கைவிடாமலும் இருக்க வேண்டும். எமது நிலைமையை தீர்மானிக்கும் பொறுப்பை மக்களிடம் விட்டுவிடுவோம். விரைவில் தேர்தல் வரும். அப்போது பாராளுமன்றத்தில் சுயேச்சையாக இயங்கும் ஒரு கட்சியாக செயல்பட அனுமதிக்குமாறு தமிழ் மக்களிடம் கேட்போம்.

அவர்களின் தீர்ப்பின்படியே இயங்குவோம். ( 1970 தேர்தலில் சுதந்திரக்கட்சி ஆட்சிக்கு வந்தது. 1972 புதிய அரசியலமைப்பை கொண்டுவந்தது.)

மாவட்ட சபை இலட்சியத்தை கைவிட்டு விட்டீர்களா? 

இலங்கையில் உள்ளாட்சி ஜனநாயகம் நிலைக்க வேண்டும் என்றால் மாவட்ட சபைகள் மசோதாவைப் போன்றதொரு சட்டம் வகுக்கப்பட வேண்டும். இல்லையேல், ஆங்கிலேயர் ஆட்சியில் நடைபெற்றது போல கச்சேரிகள் நடைபெற வேண்டும். கச்சேரி  நிர்வாக முறைகள் ஜனநாயக முறைக்கு ஏற்றதில்லை என்று டாக்டர் என்.எம்.பெரேரா போன்ற இடதுசாரித் தலைவர்களே கூறியுள்ளனர்.

எனவே கச்சேரி முறை ஒழிந்து , உள்ளாட்சி மாவட்ட சபைகள் கச்சேரிகள் செய்த வேலைகளைச் செய்ய வேண்டும்.உள்ளாட்சி மாவட்ட சபைகள் என நான் கூறுவது இப்போது இருக்கும் ஸ்தல ஸ்தாபனங்கள் ( உள்ளூராட்சி மன்றங்கள்) அல்ல.

இவை பொதுவாகவே சுகாதாரம், போக்குவரத்து முதலியவற்றை மட்டுமே கவனிக்கும். ஆகவே உள்ளாட்சி சபைகள் மத்திய அரசின் கடமைகளை அந்தந்த பிரதேசங்களிலேயே பொறுப்பேற்றுச் செய்யும்.

மலையக மக்களின் நிலைமை இப்போதிருப்பது போல இருக்கமாட்டாது. அவையும் மாற்றமடைமடையவே செய்யும். அந்த மக்களை வடக்கு, கிழக்கில் வந்து குடியேறும் படி அழைப்போம்.

இவ்வாறு அந்த பேட்டியில் தந்தை செல்வா பதில் வழங்கியுள்ளார்.

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right