(எம்.எப்.எம்.பஸீர்)

கொழும்பு துறைமுகத்துக்கு வட மேல் திசையில்,  9.5 கடல் மைல் தூரத்தில், கொழும்பு துறைமுகத்துக்குள் நுழையும் நோக்குடன் நங்கூரமிடப்பட்டிருந்த தீ பரவலுக்கு உள்ளான எக்ஸ்பிரஸ் பேர்ள் எனும் சரக்குக் கப்பல், சுமார் 10 கடல் மைல் தூரத்தில் 70 அடி (21 மீற்றர்) ஆழத்தில் தொடர்ந்தும் கடலில் மூழ்கி வருகின்றது. 

இந்நிலையில் குறித்த சரக்கு கப்பலின் தீ பரவல் எவ்வாறு ஏற்பட்டது என்பது தொடர்பில் தீவிர புலன்விசாரணைகள் இடம்பெற்று வரும் நிலையில்,  கப்பலின் கெப்டனான ரஷ்ய பிரஜை இன்று முற்பகல் சி.ஐ.டி. எனும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டார்.

கப்பல் தீ விபத்து தொடர்பில் இடம்பெறும் விசாரணைகளுக்கு அமைய அவரைக் கைது செய்ததாக, சந்தேக நபரான ரஷ்ய நாட்டு பிரஜையான கப்பல் கெப்டனை கொழும்பு மேல் நீதிமன்றில் ஆஜர்படுத்தி சி.ஐ.டி.யினர் மன்றுக்கு அறிவித்தனர்.

இந்நிலையில், குறித்த சந்தேக நபரான கப்பல் கெப்டனை, 2 மில்லியன் ரூபா பெறுமதியான சொந்த பத்திரப் பிணையில் விடுவித்து கொழும்பு பிரதான மேல் நீதிமன்ற நீதிபதி தமித் தொட்டவத்த உத்தரவிட்டார்.

அத்துடன் கப்பல் கெப்டனுக்கு நீதிவான் நீதிமன்றினால் விதிக்கப்பட்டிருந்த வெளிநாட்டு பயணத் தடையை நீடித்த நீதிபதி, கெப்டனின் கடவுச்சீட்டை நீதிமன்றில் சமர்ப்பிக்குமாறும் உத்தரவிட்டார்.

அத்துடன் தற்போது அவர் நாட்டில் தங்கியுள்ள பிரதேசத்திலிருந்து வேறு எங்கேனும் செல்வதாயின் அது தொடர்பிலும் அறிவிக்க வேண்டும் என நீதிபதி அறிவித்தார்.

அதன்படி இந்த விவகாரம் தொடர்பிலான மேலதிக வழக்கு விசாரணைகளை எதிர்வரும்  ஜூலை முதலாம் திகதிக்கு நீதிபதி தமித் தொட்டவத்த ஒத்தி வைத்தார்.

 கடந்த மே 23 ஆம் திகதி சமுத்திர  சூழல் பாதுகாப்பு அதிகார சபை, துறைமுக பொலிசாருக்கு அளித்த  முறைப்பாட்டுக்கு அமைய இந்த விவகாரம் தொடர்பில் பொலிஸ் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டிருந்தன.

இந்நிலையில் குறித்த விடயம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்கும்  பொறுப்பு பொலிஸ் மா அதிபரின் உத்தரவுக்கு அமைய பின்னர் சி.ஐ.டி.யிடம் ஒப்படைக்கப்பட்டது.

இந்நிலையில் சி.ஐ.டி.யின் பணிப்பாளர்  சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர்  ரொஹான் பிரேமரத்னவின் மேற்பார்வையில், உதவி பொலிஸ் அத்தியட்சர் ரொஷான் அபேசிங்கவின் தலைமையில் 10 பேர் கொண்ட குழு விசாரணைக்கு நியமிக்கப்பட்டு விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டன.

இந்நிலையில் கப்பல் கெப்டனின் அலட்சியம் காரணமாக தீ பரவியிருக்கலாம் என விசாரணையாளர்கள் சந்தேகிக்கின்றனர்.

 விசாரணைகலில் வெளிப்படுத்தப்பட்ட தகவல்களுக்கு அமைய இந்த சந்தேகம் மேலெழுந்துள்ள நிலையில், அதனை உறுதி செய்துகொள்ள அரச இரசாயன பகுப்பாய்வாளர் திணைக்களம் தமது பொறுப்பில் எடுத்துள்ள மாதிரிகள் மீதான பரிசோதனைகள் முடிவடைய வேண்டும் என விசாரணைகளுக்கு பொறுப்பான உயர் அதிகாரி ஒருவர் குறிப்பிட்டார்.

இவ்வாறான நிலையிலேயே இன்று முற்பகல், 2008 ஆம் ஆண்டின் 35 ஆம் இலக்க கடல் மாசு தடுப்புச் சட்டத்தின் கீழ் பிரதானமாக இடம்பெறும் இந்த கப்பல் விவகார விசாரணைகளில், கப்பலின் கெப்டன் வெள்ளவத்தை பகுதிக்கு சென்ற சி.ஐ.டி. குழுவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

 2008 ஆம் ஆண்டின் 35 ஆம் இலக்க கடல் மாசு தடுப்பு சட்டத்தின் கீழ் நீதிமன்ற அதிகாரம் மேல் நீதிமன்றுக்கு உள்ள நிலையில், கைது செய்யப்பட்ட சந்தேக நபர் இன்று மாலை கொழும்பு மேல் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டு இவ்வாறு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். 

இது குறித்த மேலதிக விசாரணைகளை சி.ஐ.டி.யினர் முன்னெடுத்துள்ள நிலையில், இவ்வழக்கானது மீள ஜூலை முதலாம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.