க்ரித்திகா சக்திவேல் 

மூத்தோர் சொல் வார்த்தை அமிர்தம் இது நாமனைவரும் அறிந்த ஒன்று. இதனை நாம் இலகுவாகக் கூறவேண்டும் என்றால் பெரியவர்களை மதித்து நட , பெரியோர் சொல் கேட்டு நட என்று கூறலாம். 

இதன் கருத்தை பார்க்கும் போது இது நடைமுறையில் உள்ளதா என்ற கேள்வியும் எழுகின்றது. இந்த விடயம் நடைமுறையில் இல்லாமல் போய் பல்வேறு வித்தியாசமான கதைகளை எமது சமூகம் எமக்கு காட்டுகிறது.  நவீனமயமாக்கப்பட்ட எமது சமூகம் காட்டும் முக்கிய கதை தான் முதியோர் துஷ்பிரயோகம். 

ஒருவர் எமக்கு உதவி செய்தால் நாம் அவருக்கு நன்றி சொல்கின்றோம். இது இயல்பான ஒன்று. ஆனால் இந்த உலகிற்கு எங்களை அழைத்து வந்து பாதுகாப்பாக வளர்த்து நாட்டிற்கு சிறந்த பிரஜைகளாக்கும் எமது பெற்றோருக்கு நாம் நன்றி சொல்கின்றோமா ? என்றால் ஒவ்வொருவரும் சிந்தித்துதான் பார்க்க வேண்டும். நன்றி சொல்லத் தவறுவதால் தான்  முதியோர் துஷ்பிரயோகம் இடம்பெறுகின்றது. 

எமக்கு அன்பை வழங்கியவர்களுக்கு  நாம் அலட்சியத்தை கைமாறாக வழங்குகின்றோம். இந்த அலட்சியம் காரணமாகவே இன்று முதியோர் இல்லங்கள் உருவாகியுள்ளன.

இதனால் நாம் முதுமை என்பது பற்றி அறிய வேண்டியுள்ளது.  பொதுவாக 60 வயதுக்கு மேற்பட்டோர் முதியோர் என வரையறுக்கப்பட்டாலும் கூட, முதுமை என்பது ஒரு நபரின் பிறப்பிலிருந்து தொடங்குகின்றது என்பர். 

ஒரு குழந்தையானது வளர்ந்து பெரிதாகும் ஒவ்வொரு காலகட்டத்திலும் முதுமை நிகழ்வு ஏற்பட்டுக் கொண்டே இருக்கின்றது. முதுமையையும் இறப்பையும் மனிதன் தன் வாழ்நாளில் தவிர்க்க முடியாததொன்றாகும்.

ஆகவே மூத்த பிரஜைகள் என்று அழைக்கப்படும் முதியோர்களை ஒவ்வொரு சமூகமும் கண்ணியமாகவும், கௌரவமாகவும் நோக்கி அவர்களை மதிக்க வேண்டும். 

கலாச்சார ரீதியில் மாற்றம் அடைந்து வரும் மனிதன் தன் பெற்றோருடனும், முதியோருடனும் பேசும் நேரத்தைக்கூட குறைத்துக் கொண்டே வருகிறான்.

வரலாற்றில் பார்த்தோமேயானால் ஒவ்வொரு சாதனையாளரின் ஆணி வேரில் அவர்களின்  வீட்டு தாத்தா, பாட்டிகளுக்கு மாபெரும் பங்குண்டு.

வயதாக வயதாக முதியோரும் குழந்தைகள் ஆகிறார்கள். ஆகவே தான் முதியோருக்கும் குழந்தைகளுக்கும் இடையில் உள்ள ஈர்ப்பு வித்தியாசமாக உள்ளது. 

எமது குழந்தைகளுக்கு சிறுவர் கதைகள் சொல்லும் இறுவெட்டுக்களை வாங்கி வைத்திருக்கின்றோம். ஆனால் அந்த இறுவெட்டுக்கள் சொல்லும் நன்னெறிக் கதைகளை அந்த குழந்தைகள் காது கொடுத்து கேட்கிறதா இல்லையா என்பதை எல்லாம் அந்த இறுவெட்டு கவனிப்பதில்லை. 

நவீனமான  முறையில் கதைகள்  பேசும் அந்த இறுவெட்டுகள் உணர்வுகள் அறிந்து பேசுவதில்லை. அப்படியென்றால் உணர்வுகள் அறிந்து பேசும் தாத்தா பாட்டிகள் எங்கே ? 

உலகளவில் 60 வயதைக் கடந்த முதியோர்களின் எண்ணிக்கை 1995 ஆம் ஆண்டில் 542 மில்லியனாக இருந்தது. இது 2025 இல் 1.2 பில்லியனாக அதாவது  இரு மடங்காக உயரப்போகிறது. 

உலகளவில் முதியோர்களுக்கு உரிய மரியாதை கிடைப்பதில்லை. இதனால் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும், பாலியல் ரீதியாகவும்  பாதிக்கப்படுகின்றனர்.

ஆகவே தான் முதியவர்களை மரியாதையாக  நடத்தவும்  அவர்களின் அநீதியை நினைவு கூரவும்  ஜூன் 15 ஆம் திகதியை  உலக மூத்தோர் துஷ்பிரயோக விழிப்புணர்வு தினமாக ஐ. நா. பிரகடனப்படுத்தியது.

அதாவது கடந்த 2002 ஆம் ஆண்டு உலக சுகாதார அமைப்பு (WHO) முதியோர்களுக்கு எதிராக நடைபெறக்கூடிய துஷ்பிரயோகங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக ஐ.நா. சர்வதேச அளவில் ஓர் கவனயீர்ப்பை கொண்டுவந்தது. 

இதன் தொடர்ச்சியாக 2006 ஆம் ஆண்டு சர்வதேச முதியோர் துஷ்பிரயோக தடுப்பு வலையமைப்பு (International Network for Prevention of Elder Abuse (INPEA)) ஆரம்பிக்கப்பட்டு  ஜூன் 15 ஆம் திகதியை உலக மூத்தோர் துஷ்பிரயோக விழிப்புணர்வு தினமாக (World Elder Abuse Awareness Day (WEAAD)) ஐ. நா. பிரகடனப்படுத்தியது.

மூத்தோரை அடித்து துன்புறுத்துதல், அவர்களுக்கு தேவையான மருத்துவ சிகிச்சைகளை வழங்க மறுத்தல் போன்றவையே உடல் ரீதியாக நாம் அவர்களுக்கு செய்யும் துஷ்பிரயோகம் ஆகும். 

அவர்களை புறக்கணித்தல்,  அவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்காமல் இருத்தல் மற்றும் மன ரீதியாக அவர்களை துன்புறுத்துதல் போன்றவையே உணர்வு ரீதியான துஷ்பிரயோகம் ஆகும். 

அது மட்டும் அல்லாமல் பொருளாதார ரீதியிலான துஷ்பிரயோகங்களும்  உள்ளன. அவர்களது சேமிப்புக்கள் மற்றும் சொத்துக்களை  அவர்களுக்கு சேர விடாமல் செய்தல் மற்றும் அவர்களுக்கு தேவையான பண உதவிகளை செய்யாதிருத்தல் என்பன பொருளாதார ரீதியில் அவர்களுக்கு ஏற்படும் துஷ்பிரயோகங்கள் ஆகும். 

அவர்களை புறக்கணித்து வீடுகளில் இருந்து விரட்டி வீதிகளில் கைவிடுதல் மற்றும் முதியோர் இல்லங்களில் சேர்த்து விடுதல் போன்றவையும் முதியோர் துஷ்பிரயோகத்தினுள் அடங்கும். 

குறிப்பாக, தற்போது இந்த கொரோனா வைரஸ் பரவும் சூழ்நிலையில் மக்கள் அனைவரும் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கிறார்கள். இதன் காரணமாக குடும்ப வன்முறைகளும் சிறுவர் துஷ்பிரயோகங்களும் குறிப்பாக முதியோர் துஷ்பிரயோகங்களும் பெருமளவில் அதிகரித்து வருகின்றன. 

இதற்கான விழிப்புணர்வினை மக்கள் மத்தியில் ஏற்படுத்தும் முகமாகவே  உலக மூத்தோர் துஷ்பிரயோக விழிப்புணர்வு தினம் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது.

 

ஆகவே இந்த ஆண்டிற்கான தொனிப்பொருளாக  “நீதிக்கான அணுகல்” என்பதை ஐ. நா. தெரிவித்துள்ளது. ஆதாவது இந்த தொனிப் பொருளானது உதவி பெறக்கூடிய வயதானவர்களின் தேவைகளை முழுமையாக நிவர்த்தி செய்வதற்கான முக்கியத்துவத்தை நினைவூட்டுகிறது. 

நீதிக்கான அணுகல், வயதானவர்களின் ஆரோக்கியத்திற்கான உரிமை, போதுமான சமூக பாதுகாப்பு மற்றும் கண்ணியத்துடன் வாழ்வது உள்ளிட்ட அனைத்து மனித உரிமைகளையும் முழுமையாக உள்ளடக்கியுள்ளது.  

  

வயதானவர்களால்  மறுபடியும் இளம் வயதுக்கு வர முடியாது. ஆனால் என்றோ ஒரு நாள் நாம் அவர்களின் வயதிற்கு  செல்லத்தான் போகின்றோம். ஆகவே அவர்களுக்கு முறையாக மதிப்பளித்து, அவர்களை சிறந்த முறையில் அனுசரித்து பேண வேண்டியது நமது கடமையாகும். 

அவர்கள் கடந்த காலத்தின் நினைவுகளை சுமந்து கொண்டு தற்போதைய காலத்தில் வாழும் நடமாடும் புத்தகங்கள். நம்மை நமது சிறுவயதில் பராமரித்த அவர்களை, அவர்களின் முதுமை காலத்தில் நாம் அவர்களை பராமரித்து  காப்பாற்ற வேண்டியது நமது முக்கிய கடமையாகும்.

 எனவே முதியோர்களுக்கு மதிப்பளித்து அவர்களை துஷ்பிரயோகங்களில் இருந்து காத்து அவர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான சூழ்நிலையை ஏற்படுத்துவோம் !