அரசாங்கத்திற்குள்ளேயே சதியா? ஜனாதிபதி, பிரதமரை எதிர்க்கும் அளவிற்கு அதிகாரத்தை கொடுத்தது யார் ?: கம்மன்பில கேள்வி

By J.G.Stephan

14 Jun, 2021 | 10:10 AM
image

(ஆர்.யசி)
ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் செயலாளர் சாகர காரியவசத்தின் உண்மையான நோக்கம் அரசாங்கத்தை பலவீனப்படுத்தி, அரசாங்கத்தின் பங்காளிக்கட்சிகளை இலக்குவைத்து தாக்கி அரசாங்கத்தை நெருக்கடிக்குள் தள்ளுவதா? நாட்டின் தலைவர்கள், கட்சியின் தலைவர்கள் எடுக்கும் தீர்மானத்தை எதிர்க்கும் அளவிற்கு சாகர காரியவசம் அதிகாரமிக்கவராக மாறியது எவ்வாறு, பிரதமரை தனிமைப்படுத்தி சாதிக்க நினைப்பது எதனை? எனவும் அமைச்சர் உதய கம்மன்பில கேள்வி எழுப்பியுள்ளார்.

இது குறித்து அவர் மேலும் கூறுகையில்,

மக்கள் மிகப்பெரிய நெருக்கடிக்கு முகங்கொடுத்துள்ள இந்த சூழலில் எரிபொருள் விலை உயர்த்தப்படக்கூடாது எனவும், இந்த நெருக்கடி நிலைமைகளை உணர்ந்து சரியான தீர்மானங்களை அமைச்சர் எடுக்காது விட்டுள்ளார் எனவும், வேண்டுமென்றே கட்சியையும் தலைவர்களையும் அதிருப்திக்கு உள்ளாக்க இவ்வாறான நடவடிக்கைகளில் ஈடுபட்டாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளதாகவும் எனவே நான் அமைச்சர் பதவியில் இருந்து விலக வேண்டும் எனவும் சாகர காரியவசம் எழுத்துமூலம் அறிவித்துள்ளார். 

இது ஒரு சாதாரண நபராக அவர் முன்வைத்திருந்தால் நான் பொருட்படுத்தாமல் இருந்திருப்பேன். ஆனால் அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதான கட்சியின் செயலாளர் ஒருவர் இந்த கருத்தை முன்வைத்துள்ளமை சாதாரண விடயமல்ல.

நாட்டின் வலுசக்தி நெருக்கடி நிலைமைகள் குறித்து ஆராயும் விதமாக பிரதமர் தலைமையில் அமைச்சரவை உபகுழு நியமிக்கப்பட்டது. இதில் அமைச்சர்களான டக்லஸ் தேவானந்தா, விமல் வீரவன்ச, டலஸ் அழகபெரும, பிரசன்ன ரணதுங்க, ரோஹித அபேகுணவர்தன மற்றும் நான் அங்கம் வகித்தோம். நாம் மூன்று கட்ட பேச்சுவார்த்தைகளை நடத்தி எரிபொருள் விலையில் மாற்றத்தை செய்ய நடவடிக்கை எடுத்து ஜனாதிபதியின் அனுமதியை பெற்றுக்கொள்ள தீர்மானித்தோம். 

ஜனாதிபதியின் அனுமதி கிடைத்தவுடன் வாழ்க்கை செலவு குழுவில் இந்த விடயங்களை கலந்துரையாடி வாழ்க்கை செலவுக்கு குறைந்த அளவிலான தாக்கத்தை ஏற்படுத்தும் மாற்று யோசனைகளை குறித்து ஆராய்ந்து விலை உயர்வுக்கான தீர்மானத்தை எடுத்தோம். இதற்கு பின்னர் நிதி அமைச்சர் என்ற ரீதியில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ விலை உயர்வு குறித்த தனது முழுமையான இணைக்கப்பாட்டு கடிதத்தை  எனக்கு அனுப்பி வைத்தார். ஆகவே ஜனாதிபதியும், பிரதமரும் எடுத்த தீர்மானத்தை அறிவிக்கும் பணியை மாத்திரமே நான் செய்தேன். வரலாற்றில் எரிபொருள் விலை குறித்த அறிவிப்பை நிதி அமைச்சரே செய்வார். முதல் தடவையாக நான் அதனை அறிவித்தேன். ஏனென்றால் ஜனாதிபதியையும், பிரதமரையும் காப்பாற்றவே நான் இந்த அறிவிப்பை வெளியிட்டேன்.

ஆகவே சாகர காரியவசம் யாரை தாக்குகின்றார் என்றால், அவரது கட்சியை உருவாக்கிய ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவையும், அவரது கட்சியின் தலைவர் மஹிந்த ராஜபக் ஷவையுமே தாக்குகின்றார். ஆகவே சாகர காரியவசம் மிகப்பெரிய தவறொன்றை செய்துள்ளார். எனவே நான் இப்போது ஒன்றை கேட்கிறேன், இந்த தவறுக்கு பதவி விலக வேண்டுவது நானா அல்லது சாகர காரியவசமா? பொதுஜன முன்னணியின் சார்பில் இவ்வாறான அறிவிப்பொன்று வெளியிட முன்னர் கட்சிக்குள் கலந்துரையாடல் எதுவும் இடம்பெறவில்லை என கட்சியின் சிருஷ்ட உறுப்பினர்கள் என்னிடம் தெரிவித்தனர். அதேபோல் கட்சியின் தலைவர் மஹிந்த ராஜபக் ஷவிற்கும், தவிசாளர் ஜி.எல். பீரிசுக்கும் இந்த அறிவிப்பு குறித்து தெரியாதென்றே கூறினர். ஆகவே இவ்வாறான அறிவிப்பொன்றை விடுக்க சாகர காரியவசத்திற்கு அனுமதி வழங்கியது யார் என்றே கேள்வியை எழுப்புகின்றேன்.

இந்த அறிவிப்பின் பின்னணி என்ன? இலங்கையின் எரிசக்தி துறையின் நீண்டகால கனவுகளை நனவாக்கும் எமது முயற்சிகளை நிறுத்துவதற்கா அல்லது திருகோணமலை எண்ணெய் குதங்களை மீண்டும் இலங்கைக்கு பெற்றுக்கொள்ள எடுக்கும் பேச்சுவார்த்தையை குழப்பவா,அல்லது  75 ஆண்டுகால பழமையான எண்ணெய் கட்டமைப்பை புதுப்பிக்கும் முயற்சியை குழப்பவா,அல்லது புதிதாக எண்ணெய் குதங்களை உருவாக்கும் முயற்சிகளை நிறுத்தவா, அல்லது வெளிநாட்டு நிறுவனங்கள் மூலமாக முன்னெடுக்கும் எண்ணெய் வியாபாரத்தின் வருவாயில் கிடைக்கும் தரகுப்பணம் கிடைக்காது போகும் என்ற அதிருப்தியிலா, அல்லது ஐந்து சதம் கூட ஊழல் இல்லாது சிறப்பாக இந்த வேலைத்திட்டத்தை முன்னெடுத்து செல்வது தாங்கிக்கொள்ள முடியாது இந்த வேலையை செய்தாரா? என்ற கேள்வியை எழுப்புகிறேன். ஆகவே இந்த விடயங்கள் குறித்து வெளிப்படையாக விவாதிக்க நான் தயாராக உள்ளேன். முடிந்தால் பொது மேடையில் விவாதிக்கலாம் சவாலை ஏற்றுக்கொள்ளுங்கள் என சகரவிடம் கேட்டுக்கொள்கிறேன்.

அதேபோல் நாட்டின் தலைவர்கள், கட்சியின் தலைவர்கள் எடுக்கும் தீர்மானத்திற்கு எதிராக தீர்மானம் எடுக்கும் அளவிற்கு சாகர காரியவசம் அதிகாரமிக்கவராக மாறியது எவ்வாறு? ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் சாகர காரியவசம் என்ற ஒருவரை எவரும் அறிந்திருக்க மாட்டார்கள். அவ்வாறு இருந்தும் ஜனாதிபதி, பிரதமருக்கு சவால் விடுக்கும் அளவிற்கு தைரியம் கிடைத்துள்ளது எவ்வாறு என்பதை ஜனதிபதி ஆணைக்குழு அமைத்தே கண்டறிய வேண்டிவரும்.  இந்த விடயம் குறித்து ஜனாதிபதி,பிரதமருடன் பேசினேன். அவர்களுடன் பேசிய விடயங்களை நான் தெரிவிப்பதை விடவும் அவர்களே இதனை தெரிவிக்க வேண்டும். மஹிந்தவின் புகைப்படம் பதிக்கப்பட்ட கட்சியின் உத்தியோகபூர்வ கடிதத்தில் இது அறிவிக்கப்பட்டுள்ளது என்பதை பிரதமர் அறிந்திருக்கவில்லை என்பதை உறுதியாக என்னால் கூற முடியும். ஆகவே சாகர காரியவசத்தின் உண்மையான நோக்கம் அரசாங்கத்தை பலவீனப்படுத்தி மக்கள் மத்தியில் தவறான நிலைப்பாட்டை உருவாக்குவதா? அரசாங்கத்தின் பங்காளிக்கட்சிகளை தாக்கி அரசாங்கத்தை பலவீனப்படுத்தவா என்ற தொடர் கேள்விகள் எழுகின்றன. இப்போதே நிலைமை இவ்வாறு செல்கின்றது என்றால் எதிர்காலத்தில் என்ன நடக்கும் என தெரியவில்லை. கடந்த 2015 ஆம் ஆண்டில் ஒரு பத்திரிகையில் கேலிச்சித்திரம் ஒன்று பிரசுரிக்கப்பட்டது. அதில் மஹிந்த ராஜபக்ஷ கிழிந்த ஆடைகளுடன் அமர்ந்திருப்பது போன்றும் அவருக்கு இரு பக்கமும் நானும், விமலும் அமர்ந்திருப்பதை போல் வரையப்பட்டது. அதில் நீங்களும் அந்தப்பக்கம் சென்றிருக்கலாமே என அவர் கேட்பதாக எழுதப்பட்டிருந்தது. ஆகவே மஹிந்த அலையை உருவாகிய இருவரையுமே இன்று விரட்டி விரட்டி அடிக்கின்றனர். மஹிந்த ராஜபக்ஷவை நேரடியாக தாக்கமுடியாது என்பதற்காக எம் இருவரையும் பலவீனப்படுத்தி இறுதியாக மஹிந்த ராஜபக்ஷவை தனிமைப்படுத்தவா இந்த முயற்சி எடுக்கப்படுகின்றது. இதில் பின்னணியில் உள்ள சக்தி என்ன, அவர்களின் நோக்கம் என்ன என்பதை தெரிந்துகொள்ள வேண்டும் எனவும் அவர் கூறினார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right