(எம்.எப்.எம்.பஸீர்)

இலங்கையின் மேற்கு மற்றும் தெற்கு கடற் கரை ஓரங்களில் தொடர்ச்சியாக இறந்த கடல் வாழ் உயிரினங்களின் உடலங்கள் கரை ஒதுங்கி வரும் நிலையில், நேற்றுடன் நிறைவடைந்த இரு வாரங்களில் இவ்வாறு   கரை ஒதுங்கிய 23  கடலாமைகள், 5 டொல்பின் மீன்களின்  உடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களம் தெரிவித்தது.

இதில் குறிப்பாக இலங்கைக்கே உரித்தான கடலாமைகளும் உள்ளடங்குவதாக அத்திணைக்களம் தெரிவித்தது.

கற்பிட்டி தொடக்கம் ஹம்பாந்தோட்டை வரையான கரையோர பகுதிகளில் உயிரிழந்த கடலாமைகள் கரையொதுங்கியுள்ள நிலையில், இவை பதிவான எண்ணிக்கை மட்டுமே என வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களத்தின் பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டார்.

கரையொதுங்கிய கடலாமைகள் தொடர்பில்  வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களம் விஷேட விசாரணைகளை  முன்னெடுத்துள்ளதாக அட்த்திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம்  சந்தன சூரிய பண்டார கூறினார்.

கடந்த இரு நாட்களில் காலி முகத்திடல், கொள்ளுபிட்டி, தெஹிவளை அகைய கடற்பரப்புக்களில் சுமார் 4 கடலாமைகள் இறந்த நிலையில் கரையொதுங்கியுள்ள நிலையிலேயே அது தொடர்பில் வினவிய போது அவர் மேற்படி விடயத்தை வெளிப்படுத்தினார்.

எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலில் ஏர்பட்ட தீ பரவல் காரணமாக கடலில் கலந்த பல தொன் நிறைக் கொண்ட இரசாயனங்கள் காரணமாக இவ்வாறு கடல் வாழ் உயிரினங்கள் இறந்து கரை ஒதுங்குகின்றனவா என அவ்வந்த பகுதிகளின் வன ஜீவராசிகள் திணைக்களம் ஊடாக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இதில் குறிப்பாக கரை ஒதுங்கிய உயிரிழங்களின் மாதிரிகளை பேராதனை பல்கலைக் கழகத்தின் மிருக வைத்திய பீடத்துக்கும் அத்திட்டிய மிருக வைத்திய பகுப்பாய்வு நிலையத்துக்கும் அனுப்பி இரசாயனத் தாக்கம் தொடர்பில் உறுதிப்படுத்த வன ஜீவராசிகள் அலுவலகம் நடவடிக்கை எடுத்துள்ளது. எனினும் இதுவரை கடலாமைகளின் உயிரிழப்புக்கு என்ன காரணம் என கண்டறியப்படவில்லை.

இதேவேளை, கிளிநொச்சி வலைப்பாடு கடற்கரையில் உருக்குலைந்த நிலையில் ஆமை ஒன்று நேற்று கரையொதுங்கியிருந்தது. அந்த ஆமையின் உடலை கிளிநொச்சி வன ஜீவராசிகள் திணைக்களத்தினர் கொண்டு சென்றுள்ளனர்.

இவ்வாறான பின்னணியில்  கடலாமைகளின் உடற் பாகங்கள் மேலதிக ஆய்வுக்காக அரச இரசாயன பகுப்பயவுத் திணைக்களத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் அரச இரசாயன பகுப்பாய்வுத் திணைக்கள அதிகாரிகளை தொடர்பு கொண்டு கேட்ட போது, தொடர்ச்சியாக பல கடலாமைளின் உடற் பகுதிகள் கிடைக்கப் பெற்று வருவதாகவும் அவற்றை பகுப்பாய்வு செய்ய சிறப்பு குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாகவும்  அத்திணைக்களத்தின் உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.