இஸ்ரேலில் புதிய கூட்டணி அரசாங்கத்திற்கு பாராளுமன்ற வாக்கெடுப்பில் பெரும்பான்மை உறுதிப்படுத்தப்பட்டதால் பெஞ்சமின் நெடன்யாகுவின் 12 வருட ஆட்சி நிறைவுக்கு வந்துள்ளது.

இஸ்ரேலில் புதிய அரசாங்கம் அமைப்பது தொடர்பான அந்நாட்டு பாராளுமன்ற வாக்கெடுப்பு நேற்று இரவு நடைபெற்றது. இந்த வாக்கெடுப்பில் எதிர்க்கட்சி கூட்டணிக்கு 60 வாக்குகளும் பெஞ்சமின் டென்யாகுவின் தரப்புக்கு 59 வாக்குகளும் கிடைத்தன.

இந்நிலையில், எதிர்க்கட்சி கூட்டணி வெற்றியீட்டியுள்ளதையடுத்து இஸ்ரேலின் புதிய பிரதமராக நெப்தலி பென்னட் (Naftali Bennett) பதவியேற்றுள்ளார்.

இதேவேளை, இஸ்ரேலின் பிரதமாராக கடந்த 12 வருட காலமாக இருந்து வந்த 71 வயதான பெஞ்சமின் டென்யாகு மீது எதிர்க்கட்சிகள் ஊழல் குற்றச்சாட்டுகளை சுமத்திவந்தன. 

டென்யாகுவை பிரதமர் பதவியிலிருந்து அகற்றுவதற்கான கூட்டணி அமைக்கும் நடவடிக்கைகைளை, யேஷ் லதிட் கட்சியின் தலைவரும் முன்னாள் நிதியமைச்சருமான யாய்ர் லபிட்  (Yair Lapid) ஆரம்பித்திருந்தார். 

இந்த செயற்பாட்டுக்கு இஸ்ரேலின் முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் நெப்தலி பென்னட் தலைமையிலான யாமினா கட்சி உட்பட 8 கட்சிகள் ஆதரவளித்தன.

இந்தக் கூட்டணியில், 3 வலது சாரி கட்சிகள், 2 இடதுசாரி கட்சிகள் மற்றும் அரபு இஸ்லாமிய கட்சி உட்பட 8 கட்சிகள் இணைந்துள்ளன.

எதிர்வரும் 2023 ஆண்டு செப்டெம்பர் வரை நெப்தலி பென்னட் இஸ்ரேலின் பிரதமராக பதவி வகிப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.