மட்டக்களப்பு நகர் பகுதியில் உள்ள மதுபானசாலை ஒன்றில் இருந்து மதுபானங்களை விற்பனைக்காக மோட்டர்சைக்கிளில்  எடுத்துச் சென்ற இளைஞர் ஒருவரை 100 மதுபான போத்தல்களுடன் நேற்று சனிக்கிழமை (12) இரவு கைது செய்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

மட்டக்களப்பு மாவட்ட புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த தகவல் ஒன்றின் பிரகாரம் சம்பவதினமான நேற்று இரவு மாவட்ட புலனாய்வு பிரிவினர் பொலிசாருடன் கூளாவடி பிரதேசத்தில் கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர்.

இதன்போது மோட்டர்சைக்கிளில் பயணித்த இளைஞனை பொலிசார் வழிமறித்த போது அவர் மோட்டர்சைக்கிளில் 100 கால் போத்தல் கொண்ட மதுபானங்களை எடுத்துச் சென்ற நிலையில் அவரை கைது செய்ததுடன் 100 போத்தல் மதுபானங்கள் மற்றும் மோட்டர்சைக்கிள் ஒன்றையும் மீட்டுள்ளனர்.

இதில் கைதுசெய்யப்பட்ட கூளாவடி பிரதேசத்தைச் சேர்ந்த 20 வயது இளைஞரை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.