(ஆர்.யசி)
தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருந்து விலகி, ரெலோ மற்றும் புளொட் கட்சிகள் சுயாதீனமாக செயற்பட தீர்மானம் எடுக்கப்பட்டதாக கூறப்படும் கூட்டத்தில் நானும் பங்குபற்றியிருந்தேன், இதன்போது  சுயாதீனமாக  இயங்குவது குறித்த எந்தவித பேச்சுவார்த்தையும் இடம்பெற்றிருக்கவில்லை என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் ஊடகப்பேச்சாளருமான எம்.எ.சுமந்திரன் தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் கூறுகையில்,

தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருந்து விலகி ரெலோ மற்றும் புளொட் கட்சிகள் சுயாதீனமாக செயற்பட எந்த தீர்மானமும் எடுக்கப்படவில்லை. இன்றைய பத்திரிகை ஒன்றில் அந்த செய்தியை பார்த்தேன். சென்ற பாராளுமன்ற அமர்வுக்கு பின்னர் திரு.அடைக்கலநாதன், திரு. சம்பந்தனை சந்தித்து பேசியதாகவும் அச்செய்தியில் கூறப்பட்டுள்ளது. நானும் அந்த கூட்டத்தில் பங்குபற்றியிருந்தேன். திரு. அடைக்கலநாதன்,  சம்பந்தனை சந்திக்க சென்ற போது என்னையும் அழைத்து சென்றிருந்தார். ஆகவே இதில் தனித்து இயங்குவது குறித்த எந்தவித பேச்சுவார்த்தையும் இடம்பெற்றிருக்கவில்லை.

அதேபோல், ரணில் விக்கிரமசிங்க விடயத்தில் ஊடகங்கள் ஏன் இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கின்றது என எனக்கு தெரியவில்லை. ஆனால் எமக்கும் இதற்கும் எந்த தொடர்புகளும் இல்லை. இன்றுள்ள சூழ்நிலையில் முக்கியமான பல விடயங்களை பேசவேண்டியுள்ள ஒரு சூழ்நிலையில் ஒரு தனி நபர் குறித்து அதிக முக்கியத்துவம் கொடுப்பது ஏன் என்ற கேள்வி எழுகின்றது. தமிழ் தேசிய கூட்டமைப்பு ஒருவருக்கு ஆதரவு வழங்குவதால் அவர் எதிர்க்கட்சி தலைவராக வந்துவிட முடியாது. பாராளுமன்றத்தில் எதிர்கட்சியின் பக்கம் அதிக பெரும்பான்மை உள்ளவர்களின் கட்சியின் தலைவரே எதிர்க்கட்சி தலைவராவார். ஐக்கிய தேசிய கட்சிக்கு பெரும்பான்மையான ஆதரவு உள்ளதா அல்லது ஐக்கிய மக்கள் சக்திக்கு பெரும்பான்மையான ஆதரவு உள்ளதா என்பதை பொறுத்தே இந்த விடயங்கள் இடம்பெறும். மற்றைய கட்சிகளுக்கும் இதற்கும் எந்த தொடர்பும் கிடையாது என்றார்.