(நா.தனுஜா)
ஊழலுக்கு எதிரான போராட்டம் வெறும் வார்த்தைகளுக்கு அப்பால் மாத்திரமின்றி நடைமுறையிலும் செயற்பட வேண்டும். இருப்பினும் ஊழல் பரிவர்த்தனைகள் அல்லது செயற்பாடுகள் இரகசியமாக செயற்பட அல்லது வளர அனுமதிப்பதானது குறித்த இலக்கை அடைவதற்கான பாரிய சவாலாக அமையும் என்று ட்ரான்ஸ்பேரன்ஸி இன்டர்நெஷனல் அமைப்பு தெரிவித்துள்ளது.

இது குறித்து ட்ரான்ஸ்பேரன்ஸி இன்டர்நெஷனல் அமைப்பினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:

ஊழலுக்கு எதிரான ஐ.நா பொதுச்சபையின் முதலாவது சிறப்பு அமர்வு நியூயோர்க் நகரில் ஜூன் 2 - 4 ஆம் திகதிவரை நடைபெற்றது. குறித்த நிகழ்வின் போது, உலகநாடுகள் அனைத்தும் ஒன்றிணைந்து சர்வதேச ஒத்துழைப்பை வலுப்படுத்தல், ஊழலைத் தடுத்தல் மற்றும் அதற்கு எதிராக செயற்படல் தொடர்பில் காணப்படும் சவால்கள் மற்றும் நடவடிக்கைகள் தொடர்பாக கலந்துரையாடின.  

ஐ.நா அங்கத்துவ நாடுகளுக்கிடையே இடம்பெற்ற பல மாதகாலப் பேச்சுவார்த்தைகளுக்கு பின்னர் ஏற்றுக்கொண்ட அரசியல் பிரகடனமே இந்த சிறப்பு அமர்வின் ஓர் முக்கிய விளைவாகும். இறுதிப் பயனடையும் உரிமம் கொண்ட கம்பனிகளின் வெளிப்படைத்தன்மையை மேம்படுத்தல் மற்றும் கொள்கைகள் மற்றும் அவற்றை நடைமுறைப்படுத்தல் போன்றவற்றின் முக்கியத்துவத்தினை இப்பிரகடனம் அங்கீகரிக்கின்றது.

இந்த அரசியல் பிரகடனத்தின் மூலம், ஊழல் செயற்பாடுகளுக்கு எதிராக சட்டங்களை நடைமுறைப்படுத்துதல் மற்றும் முறைகேடுகளை வெளிப்படுத்துவோரின் பாதுகாப்பினை உறுதி செய்தல் ஆகிய விடயங்கள் தொடர்பில் அங்கத்துவ நாடுகள் உறுதிப்பாட்டைக் கொண்டிருக்கின்றன. மேலும் ஊழலுக்கு எதிரான செயற்பாட்டில் சர்வதேச ஒத்துழைப்பு, தொழிநுட்ப உதவி மற்றும் தகவல் பரிமாற்றம் போன்றவற்றிற்கு ஆதரவளித்து மேம்படுத்தவும் மற்றும் பயனுள்ள சொத்து மீட்புச் செயல்முறையினை இலகுபடுத்தவும் குறித்த நாடுகள் உறுதிபூண்டுள்ளன.

குறித்த சிறப்பு அமர்வில், இலங்கை சார்பில் நிரந்தர விதிவிடப்பிரதிநிதியான மொஹான் பீரிஸ் கலந்துகொண்டார். இந்த அமர்வின் இறுதி நாளில் உரையாற்றிய அவர், ஊழலைக் கட்டுப்படுத்தும் முயற்சியில் ஊடகங்கள், சிவில் சமூகம் மற்றும் தனியார் துறையினரின் ஈடுபாடு மற்றும் சர்வதேச ஒத்துழைப்பின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். மேலும் தற்போதைய ஆட்சியில் ஊழலுக்கு எதிரான முயற்சிகளுக்கு குற்றத்தினால் பெறப்பட்ட சொத்துக்கள் உள்ளடக்கிய வரைவுச் சட்டமானது மேலும் வலுசேர்க்கும் என அவர் தெரிவித்தார்.