(எம்.மனோசித்ரா)
டீசல் மற்றும் மண்ணெண்ணெய் விலை அதிகரித்துள்ளமையினால் பாதிக்கப்பட்டுள்ள மீனவர்களுக்கு சலுகைகளை வழங்குவது தொடர்பில்  ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ  மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடம் கலந்தாலோசித்து உரிய தீர்வினை வழங்குவதாக கிராமிய வீதிகள் மற்றும் ஏனைய  உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க  அமைச்சர் நிமல் லன்சா தெரிவித்தார்.

எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் தீ விபத்தின்  காரணமாக  பாதிக்கப்பட்டுள்ள மீனவ சமூகத்தினருக்காக அரசாங்கம் முன்னெடுத்துள்ள தீர்மானங்கள் குறித்து அம்மக்களை தெளிவுப்படுத்தும் வகையிலேயே விசேட கலந்துரையாடலொன்று நேற்று சனிக்கிழமை நீர்கொழும்பு நகரசபையின் கேட்போர் கூடத்தில் அமைச்சர் டக்ளஸ் தேவாளந்தா தலைமையில் நடைபெற்றது. இதன் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இந்த கலந்துரையாடல் தொடர்பில் அமைச்சின் ஊடகப்பிரிவு மேலும் தெரிவித்துள்ளதாவது :

வத்தளை - பள்ளியவத்தை தொடக்கம் நீர்கொழும்பு - போரதோட்டை வரையான பகுதியிலுள்ள மீனவர்கள் மற்றும் நீர்கொழும்பு களப்பிளை அண்மித்த மீனவர்கள் இந்த கலந்துரையாடலில் கலந்து கொண்டிருந்தனர்.

தற்போது மீன் பிடி செயற்பாடுகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ள வலயங்கள் தவிர்ந்த ஏனைய பகுதிகளில் மீன்பிடி செயற்பாடுகளில்  ஈடுபடுவதில் எவ்வித சிக்கலும் இல்லை. அத்தோடு தடை செய்யப்பட்டுள்ள வலயங்களில் எதிர்வரும் நாட்களில் கட்டம் கட்டமாக மீன் பிடிப்பதற்கு அனுமதி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். எனினும் நீர்கொழும்பு களப்பு பகுதியில் மீன் பிடி செயற்பாடுகளை ஆரம்பிப்பதில் எவ்வித சிக்கலும் இல்லை.

அத்தோடு கப்பலிலிருந்து எண்ணெய் அல்லது இரசாயனங்கள் கடலில் கலக்கவில்லை என்று நாரா நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது. குறிப்பாக சில கடற்பகுதிகளில் மீன் பிடி செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளமையானது பேர்ள் கப்பல் உடைதல் உள்ளிட்ட அபாயங்களிலிருந்து மீனவர்களையும் படகுகளையும் பாதுகாப்பதற்காகவே ஆகும்.

மீன் பிடி செயற்பாடுகளில் சிக்கல் ஏற்படக் கூடாது என்பதற்காக கடற்பிரதேசங்களை தூய்மைப்படுத்தும் செயற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அதற்கமைய நீர்கொழும்பு களப்பு மற்றும் ஹெமில்டன் கால்வாய் ஆகியவற்றை தூய்மைப்படுத்த நடவடிக்கை எடுப்பது குறித்தும் இதன் போது அவதானம் செலுத்தப்பட்டது.

இதன் போது கருத்து தெரிவித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா , கப்பலால் பாதிக்கப்பட்ட மீனவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று மீன கூறியதுடன், இந்த நோக்கத்திற்காக தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்குமாறு ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோர் அறிவுறுத்தியுள்ளனர் என்றும் குறிப்பிட்டார்.