ஆர்.ராம்

முல்லைத்தீவு, மாவட்டத்தின் கரைத்துறைப்பற்று பிரதேச செயலாளருக்கு உட்பட்ட பாரம்பரிய எல்லைக் கிராமங்களான கொக்கிளாய், கொக்குத்தொடுவாய், கருநாட்டுக்கேணி மற்றும் திருமலை மாவட்டத்தின் எல்லைக் கிராமமான தென்னைமரவாடி ஆகியவற்றில் செல்வச் செழிப்போடு தமிழ்க் குடும்பங்கள் வாழ்ந்து வந்தமை வரலாறு.

  

அவ்வாறு வாழ்ந்து வந்திருந்த குடும்பங்கள் அனைத்தும், மேலிடத்து உத்தரவில் அப்பகுதியின் நிர்வாக சேவையில் பணியாற்றிக்கொண்டிருந்த அதிகாரிகளின் பணிப்புக்கு அமைவாக 1984ஆம் ஆண்டு டிசம்பர் 22ஆம் திகதியன்று 24 மணித்தியால காலக்கெடுவுடன் பலவந்தமாக வெளியேற்றப்பட்டனர்.

  

அதன் பின்னர் சொல்லெண்ணாத் துன்பங்களுக்கு முகங்கொடுத்தவர்கள் முள்ளிவாய்க்கால் பேரவலத்தினையும் சந்தித்து 2012 ஆம் ஆண்டளவில் இடைத்தங்கல் முகாம்களிலிருந்து தமது பூர்வீக நிலங்களுக்குச் செல்வதற்கு அனுமதி அளிக்கப்பட்டனர்.

  

காடுகளாக மாறியிருந்த பூர்வீக நிலங்களை வாழிடங்களாக மாற்றியவர்கள் தமக்கான தங்குமிடங்களை அரச மற்றும் தன்னார்வு நிறுவனங்களின் உதவிகளுடன் அமைத்துக் கொண்டார்கள்.

  

ஆனால் அவர்களின் வாழ்வாதாரமாக இருக்கும் வேளாண்மை யை முன்னெடுப்பதற்கு தற்போது வரையில் அவர்களுக்கு வாய்ப்புக்கள் ஏற்படவில்லை. ஆகக்குறைந்தது பரம்பரை பரம்பரையாக வேளாண்மை செய்து வந்த வயல் காணிகளினுள் அடியெடுத்து வைப்பதற்கு கூட அனுமதி மறுக்கப்பட்டே உள்ளது.

  

இவ்வாறு, பூர்வீக வாழ்வாதார நிலங்களை பறிகொடுத்தவர்களில் கொக்குத்தொடுவாயைப் பூர்வீகமாகக் கொண்ட 74வயதான விநாசித்தம்பி தம்பாபிள்ளையும் ஒருவராக இருக்கின்றார். அவர் தனது நிலைமைபற்றிக் கூறுகையில், “1984இல, முந்திரிகைக்குளம், ஆமையன்குளம், நாயடிச்சமுறிப்பு, பூமடிக்கண்டல், அடையகர்த்தான், சிவந்தாமுறிப்பு ஆகிய பகுதியில் இருந்த வயல்களில நெல் அறுவடைக்கு தயாராய் இருந்தது.  

அப்போது தான் ஜி.ஏயும், ஏ.ஜி.ஏ.உம் எங்களை அவசரமாய் கிராமத்தை விட்டு வெளியேறச் சொன்னவையள். பத்துப்பதினைந்து நாளில கொண்டு வந்து விடுகிறதாகதான் அவையள் சொன்னவை. ஆனா 27 வருடத்திற்கும் மேல நாங்கள் எங்கட சொந்த இடத்துக்கு வரவே முடியமலிருந்தோம்” என்றார்.

இந்த கட்டுரையை மேலும் வாசிக் https://epaper.virakesari.lk/newspaper/Weekly/weekly-main/2021-06-13#page-14

இதைத் தவிர மேலும் செய்திகள் மற்றும் கட்டுரைகளை வாசிக்க https://bookshelf.encl.lk/.