(ஆர்.யசி)
எரிபொருள் விலை உயர்த்தப்பட்டமையானது, அமைச்சரவை அனுமதியுடன்  இடம்பெற்ற ஒன்றாகவே இருக்க வேண்டும். ஆகவே எரிபொருள் விலை உயர்வு விடயத்தை சாட்டாக வைத்துக்கொண்டு அரசாங்கத்திற்குள் நிலவும் ஏனைய பிரச்சினைகளை தீர்ப்பதற்கு முயற்சிகள் எடுக்கப்படுவதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எ.சுமந்திரன் தெரிவித்தார். 

தங்களால் ஆட்சியை கொண்டுசெல்ல முடியாத நிலையில் தமக்குள்ளே இருக்கும் பிரச்சினைகளை ஒருவர் தலையில் சுமத்தி நாடகமாடுகின்றனர் என்பது மக்களுக்கு தெளிவாக தெரிகின்றது எனவும் அவர் கூறினார்.

அவர் மேலும் கூறுகையில், உலக சந்தையில் இன்னமும் எரிபொருள் விலை கூடவில்லை, அவ்வாறான நிலையில் இலங்கையில் தமது ஏனைய தேவைகளுக்காக எரிபொருள் விலையை அமைச்சர் கூட்டியுள்ளார். இலங்கையில் எரிபொருள் விலை உயர்வு மக்களை மிக மோசமாக பாதிக்கப்போகின்றது. இதில் கவனிக்கப்பட வேண்டிய விடயம்  என்னவென்றால் விலை அதிகரிக்கப்பட முன்னர் அமைச்சரவை அறிவிப்பின் போது, எரிபொருள் விலையை மாற்றுவதற்கு அமைச்சரவை அனுமதி கொடுத்திருப்பதாக அமைச்சர் கூறியிருந்தார். விலையை மாற்றுவது என்றால் விலை குறைப்பாக  இருக்க முடியாது. ஆகவே விலை உயர்வு என்பது அமைச்சரவை அனுமதியுடன்  இடம்பெற்ற ஒன்றாகவே இருக்க வேண்டும். அவ்வாறு இருக்கையில்  அரசாங்கத்தில் இப்போது பாரிய குத்து வெட்டுகள் இடம்பெற்றுக்கொண்டுள்ளது. ஆகவே எரிபொருள் விடயத்தை சாட்டாக வைத்துக்கொண்டு தமது ஏனைய பிரச்சினைகளை தீர்க்கப்பார்பதாகவே இந்த செயற்பாடுகள்  தென்படுகின்றன.

பிவிதுரு ஹெல உறுமைய ஒரு மோசமான கட்சி, அவர்களுக்கு நாம் வக்காளத்து வாக்கவில்லை. ஆனால் அவர்கள் அரசாங்கத்தில் முக்கியமான நபர்கள், அவர்களுக்கே இந்த நிலையை உருவாக்கும் அளவிற்கு அரசாங்கம் செயற்படுகின்றது. அரசாங்கத்தின் பிரதான கட்சியான பொதுஜன முன்னணியின் செயலாளர் கையொப்பமிட்டு எரிசக்தி அமைச்சரை நீக்குமாறு அறிவித்துள்ளார். செயலாளர் கையொப்பமிட்டாளும்  கட்சியை இயக்குபவர் ஜனாதிபதியின் தம்பியான பசில் ராஜபக்ஷ, ஆகவே அமைச்சரவையில் இருந்து குறித்த அமைச்சரை நீக்குமாறு தம்பி அண்ணனுக்கு கடிதல் எழுதுகின்றார். இந்த செயற்பாடானது தங்களால் ஆளமுடியாத நிலையில் தமக்குள்ளே இருக்கும் பிரச்சினைகளை ஒருவர் தலையில் சுமத்தி நாடகமாடுகின்றனர் என்பது மக்களுக்கு தெளிவாக தெரிகின்றது.

எரிபொருள் உயர்வு மட்டுமல்ல மக்களுக்கு இருக்கும் பிரச்சினை, அனைத்து அத்தியாவசிய பொருட்களின்  விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.  அத்துடன் பயணத்தடை என கூறிக்கொண்டு நாட்கூலி செய்வோரை முடக்கிவிட்டதால் அவர்கள் பசி பட்டினியில் உள்ளனர். அரசாங்க கொடுப்பனவுகள் முறையாக மக்களுக்கு சென்றடையவில்லை. மக்கள் உண்பதற்கு வழியில்லாத நிலையில் உள்ளது, மக்கள் பசி பட்டினியால் இறப்பதை எம்மால் அனுமதிக்க முடியாது என்பதற்காக நாம் பலர் முன்வந்து கஷ்டப்பட்ட பகுதிகளுக்கு நிவாரணங்களை வழங்கி வருகின்றோம். ஆனால் அரசாங்கமே இந்த வேலைகளை செய்ய வேண்டும் எனவும் தெரிவித்தார்.