அமெரிக்க கறுப்பினத்தவர் ஜோர்ஜ் புளொய்ட்  கொலை செய்யப்பட்ட நிகழ்வை உலகிற்கே அடையாளம் காட்டிய 18 வயது இளம்பெண் புலிட்சர் விருதுக்கு தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.

அமெரிக்காவின் மினசோட்டா மாகாணம், மினியாபொலிஸ் நகரில் கடந்த ஆண்டு மே மாதம் 25 ஆம் திகதி 46 வயதுடைய ஜோர்ஜ் புளொய்ட் என்ற கறுப்பினத்தைச் சேர்ந்தவரை பொலிஸார் சந்தேகத்தின் அடிப்படையில் மடக்கிப் பிடித்தனர்.

அப்போது, டெர்ரக் சவுவின் (44) என்ற பொலிஸ், புளொய்டை கீழே தள்ளி அவரது கழுத்தில் காலை வைத்து பலமாக அழுத்தினார். இதில் மூச்சுத்திணறல் ஏற்பட்டு அவர் உயிரிழந்தார்.

இதையடுத்து அமெரிக்க தலைநகர் வொஷிங்டன் உட்பட பல மாகாணங்களில் போராட்டம் வெடித்தது. பல இடங்களில் வன்முறைகள் நடைபெற்றன. 

பொலிஸ் டெரிக் சாவின் மீது கொலை வழக்குப் பதிவுசெய்யப்பட்டது. அவருடன் இருந்த 3 பொலிஸார் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டு அனைவரும் பணி நீக்கம் செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

இதனை காணொளியாக டார்னெல்லா ஃபிரேசியர் என்ற இளம்பெண்  பதிவு செய்தார்.

ஜோர்ஜ் புளொய்டின் கொலை வெளி உலகிற்கு தெரிய அந்த காணொளி தான் மிக முக்கியமான காரணம். உலகம் முழுவதும் பரவிய காணொளியால், இந்த சம்பவத்திற்கு பல்வேறு நாட்டு மக்கள் தங்கள் கண்டனத்தை பதிவு செய்தனர்.

இளம்பெண் டார்னெல்லா பிரேஸரை பாராட்டும் விதமாக அவருக்கு சிறப்பு புலிட்சர் விருது அறிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த ஆண்டு ஸ்பெயின் நாட்டை சேர்ந்த எமிலியோ மொரநாட்டி என்ற புகைப்பட கலைஞர் தனது அற்புதமான படங்கள் மூலம் 2 பிரிவுகளில் புலிட்சர் விருதினை தட்டி சென்றார்.

பல்வேறு மக்கள் போராட்டங்களின் போது எமிலியோ பதிவு செய்த படங்கள் அவருக்கு இரண்டு புலிட்சர் விருதுகளை பெற்று தந்துள்ளன. டானியா லியோன் என்பவருக்கு சிறந்த இசையமைப்பாளருக்கான புலிட்சர் விருது அறிவிக்கப்பட்டு உள்ளது.

சினிமாவுக்கு வழங்கப்படும் ஒஸ்கர் விருதை போல ஊடக, புகைப்பட கலைஞர்களுக்கு வழங்கப்படும் உலகின் மிக உயரிய விருது புலிட்சர் விருது. அமெரிக்கா பத்திரிகையாளர் ஜோசப் புலிட்சர் என்பவரின் பெயரில் 1912 ஆம் ஆண்டு முதல் பத்திரிக்கை, இணைய ஊடகம், இலக்கியம், இசையமைப்பு, நாடகம், ஆகிய துறைகளில் சிறந்து விளங்குவோருக்கு வழங்கப்படுகிறது.