(நா.தனுஜா)

அரசாங்கத்தின் முறையற்ற கொள்கைகள் மற்றும் தவறான செயற்பாடுகளின் விளைவாகவே ஜி.எஸ்.பி வரிச்சலுகையைத் தற்காலிகமான இடைநிறுத்துவதற்கான தீர்மானம் ஐரோப்பிய ஒன்றியப் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டிருக்கிறது.

வெளிநாடுகள் மற்றும் சர்வதேச அமைப்புக்கள் அழுத்தங்களைப் பிரயோகிப்பதற்கு இந்நாட்டின் ஆட்சியாளர்களே வாய்ப்பேற்படுத்திக்கொடுக்கிறார்கள் என்று மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச்செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று சனிக்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துவெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் கூறியதாவது:

தற்போதைய அரசாங்கம் பதவியேற்று ஒருவருடம் மாத்திரமே கடந்துள்ள நிலையில், நாட்டின் அனைத்துத் துறைகளும் வலுவிழந்துள்ளமையைத் தெளிவாக அவதானிக்க முடிகின்றது. அரசாங்கம் அதன் இயலாமையை மறைத்துக்கொள்வதற்கான கொரோனா வைரஸ் பரவல் நெருக்கடியை நன்கு பயன்படுத்திவருகின்றது.

மறுபுறம் நாட்டின் பொருளாதாரம் பாரிய வீழ்ச்சியை எதிர்கொண்டிருக்கும் நிலையில், அதனை சீர்செய்வதற்கு முற்படாமல் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வாகனங்களை இறக்குமதி செய்வதற்காக மென்மேலும் நிதியை வீணடித்துக்கொண்டிருக்கிறார்கள்.

அதேவேளை மனித உரிமைகளை மீறும் செயற்பாடுகளும் அரசாங்கத்தை விமர்சிப்போர்மீது அடக்குமுறைகளைப் பிரயோகிப்பதற்கான நடவடிக்கைகளும் மற்றொரு பக்கத்தில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இலங்கைக்குக் கடந்த காலத்தில் கிடைத்த ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகையும் தற்போது இல்லாமல்போகக்கூடிய நிலையேற்பட்டிருக்கிறது. இலங்கைக்கு வழங்கப்பட்டுவரும் இந்த வரிச்சலுகை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட வேண்டும் என்று ஐரோப்பிய ஒன்றியப் பாராளுமன்றத்தில் தீர்மானமொன்று நிறைவேற்றப்பட்டிருக்கிறது.

சர்வதேச மட்டத்தில் இலங்கை எதிர்கொண்டிருக்கும் பாரிய நெருக்கடியாகவே நாம் இதனைக் கருதுகின்றோம். இவ்வாறான யோசனை நிறைவேற்றப்பட்டதன் பின்னர் ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் எவ்வாறு செயற்படும் என்று தெரியாதபோதிலும், தீர்மானத்திற்கு அமைவாக செயற்படுவதற்கான வாய்ப்புக்கள் உயர்வாகக் காணப்படுகின்றன.

பயங்கரவாதத்தடைச்சட்டம் ஒழிக்கப்படும் என்று வாக்குறுதியளிக்கப்பட்ட போதிலும் அது நடைமுறைப்படுத்தப்படாமை, அதனைப் பயன்படுத்தி அரசாங்கத்திற்கு எதிரானவர்கள் தண்டிக்கப்படுதல், அதிகரித்துவரும் இராணுவமயமாக்கம் ஆகிய மூன்று காரணிகளைக் குறிப்பிட்டே ஐரோப்பிய ஒன்றியப் பாராளுமன்றத்தில் மேற்குறித்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது.

மேற்குலக நாடுகள் தொடர்பில் எமக்குள்ள அபிப்பிராயத்தின்படி, இவ்வாறான மனித உரிமைகள் தொடர்பான விடயங்களைப் பயன்படுத்தி அந்நாடுகள் இலங்கைபோன்ற சிறிய நாடுகள் மீது அழுத்தங்களைப் பிரயோகிப்பதற்கு முற்படுகின்றன என்ற விமர்சனம் எமக்குண்டு. ஆகவே ஐரோப்பிய ஒன்றியம் போன்ற அமைப்புக்களால் முன்னெடுக்கப்படும் அனைத்து நடவடிக்கைகளும் சரியானவை என்று நாம் ஏற்றுக்கொள்ளமாட்டோம். ஆனால் இந்த விடயம் மிகவும் பாரதூரமானது என்றே கருதுகின்றோம்.

ஏனெனில் அரசாங்கத்தின் முறையற்ற கொள்கைகள் மற்றும் தவறான செயற்பாடுகளை முன்னிறுத்தியே இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கின்றது. வெளிநாடுகள் மற்றும் சர்வதேச அமைப்புக்கள் அழுத்தங்களைப் பிரயோகிப்பதற்கு இந்நாட்டின் ஆட்சியாளர்களே வாய்ப்பேற்படுத்திக்கொடுக்கிறார்கள் என்றே நாம் கருதுகின்றோம். ஏற்கனவே வழங்கப்பட்டுவந்த ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகை நிறுத்தப்பட்டிருந்தது.

பின்னர் கடந்த மைத்திரிபால சிறிசேன - ரணில் விக்கிரமசிங்க அரசாங்கம் 'பயங்கரவாதத்தடைச்சட்டம் இல்லாதொழிக்கப்படும்' என்ற உத்தரவாதத்தை வழங்கியதன் ஊடாகவே மீண்டும் அந்த வரிச்சலுகை இலங்கைக்கு வழங்கப்பட்டது. எனினும் இந்தச் சட்டத்தை நீக்கிவிட்டு, இதனையும்விட மோசமான சட்டமொன்றை ரணில் விக்கிரமசிங்க கொண்டுவருவதற்கு முனைந்தார். அதற்கு எதிர்ப்பு வலுவடைந்ததைத் தொடர்ந்து, அந்த நடவடிக்கைகள் கைவிடப்பட்டன.

அதேவேளை பயங்கரவாதத்தடைச்சட்டத்தைப் பயன்படுத்தி அரசாங்க எதிர்ப்பாளர்கள் தண்டிக்கப்படுகின்றார்கள் என்று ஐரோப்பிய ஒன்றியத்தினால் கூறப்பட்டிருப்பதுடன், அதற்கு உதாரணமாக ஹிஜாஸ் ஹிஸ்புல்லா, அஹ்னாப் ஜஸீம் மற்றும் ஷானி அபேசேகர ஆகியோரின் பெயர்களும் குறிப்பிடப்பட்டுள்ளன.

உண்மையில் பயங்கரவாத செயற்பாடுகளைத் தடைசெய்யும் நோக்கில் பயங்கரவாதத்தடைச்சட்டம் கொண்டுவரப்பட்டதன் பின்னரே பயங்கரவாத செயற்பாடுகள் அதிகம் இடம்பெறுகின்றன. ஷானி அபேசேகர பயங்கரவாத செயல்களில் ஈடுபடவில்லை. மாறாக அத்தகைய செயல்களில் ஈடுபடுவோரைக் கண்டறிவதற்கே உதவினார். எனவே அவரையும் தடுப்புக்காவலில் வைத்திருப்பதென்பது, இந்தச் சட்டம் பழிவாங்கல் நோக்கத்திற்காகத் தவறாகவும் பயன்படுத்தப்படுவதை உறுதிசெய்கின்றது.

அடுத்ததாக கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்காகப் பயணக்கட்டுப்பாடு விதிக்கப்பட வேண்டும் என்று சுகாதாரப்பிரிவினர் வலியுறுத்தியிருந்தனர். இருப்பினும் அரசாங்கம் அதனை தனிப்பட்ட நோக்கங்களுக்காகவே பயன்படுத்துகின்றது. பயணக்கட்டுப்பாடுகள் மேலும் ஒருவாரம் நீடிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்ட அதே தினத்தின் நள்ளிரவிலிருந்து எரிபொருள் விலை அதிகரிக்கப்படுகின்றது.

ஏனெனில் பயணக்கட்டுப்பாடு அமுலில் இருக்கும்போது எரிபொருள் விலையதிகரிப்பை எதிர்த்து யாரும் போராடமுடியாது. ஆனால் உண்மையில் அரச, தனியார் நிறுவனங்கள் இயங்குகின்றன. மருந்தகம், உணவகம் உள்ளிட்ட சில கடைகள் திறக்கப்பட்டுள்ளன. சந்தைகளும் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மக்கள் கொள்வனவு செய்யாமல் சந்தைகளைத் திறப்பதால் என்ன பயன்? ஆகவே பயணக்கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருப்பதாகக் கூறப்பட்டாலும், அவை திறம்பட முழுமையாக அமுல்படுத்தப்படவில்லை. எனவே இவையனைத்தும் தமது எதிர்ப்பாளர்களைக் கட்டுப்படுத்துவதற்காகவே அரசாங்கத்தினால் பயன்படுத்தப்படுகின்றது என்று குறிப்பிட்டார்.