எம்.எம்.சில்வெஸ்டர்

ஐரோப்பிய கால்பந்தாட்ட சம்மேளன (யூ.ஈ.எப்.ஏ.)  ஐரோப்பிய கிண்ணம் 2020 கிண்ண கால்பந்தாட்டத் தொடரின் (யுரோப்பியன் சம்பியன்ஷிப்) முதலாவது போட்டியில் இத்தாலி அணி துருக்கி அணியை 3க்கு 0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது.

கொரோனா வைரஸ் அச்சத்தால் பிற்போடப்பட்டிருந்த  ஐரோப்பிய கிண்ணம் 2020 கிண்ண கால்பந்தாட்டத் தொடர் இம்முறை 11 நாடுகளின் 11 நகரங்களில் நடத்தப்படுகின்றது. ஏ,பீ,சீ,டீ,ஈ.எப் என 6 குழுக்களில் தலா 4 அணிகள் அங்கம் வகிக்கும் இத்தொடரில் மொத்தமாக 24 அணிகள் பங்கேற்கின்றன.

குழு A யில் இத்தாலி, சுவிட்ஸர்லாந்து, வேல்ஸ், துருக்கி அணிகளும் , குழு B யில் பெல்ஜியம், பின்லாந்து, டென்மார்க், ரஷ்யா அணிகளும், குழு C யில் ஒஸ்ட்ரியா,நெதர்லாந்து, வட மசடோனியா, உக்ரைன் அணிகளும் இடம்பெறுவகின்றன.

குழு D யில்  குரோஷியா, செக் குடியரசு,  இங்கிலாந்து, ஸ்கொட்லாந்து அணிகளும், குழு E யில் போலாந்து, ஸ்லோவாக்கியா, ஸ்பெய்ன், சுவீடன் அணிகளும் குழு F  இல் பிரான்ஸ், ஜேர்மனி, ஹங்கேரி, போர்த்துக்கல் அணிகளும் அங்கம் வகிக்கின்றன.

துருக்கி மற்றும் இத்தாலி அணிகள் மோதிக்கொண்ட இப்போட்டித் தாெடரின் ஆரம்பப் போட்டி நேற்றைய தினம் இத்தாலியின் ரோம் நகரில் நடைபெற்றது.

பாேட்டியின் முதல் பாதியில் இரண்டு அணிகளாலும் ஒரு கோல்கூட அடிக்கப்படாது நிறைவடைந்தது.  இரண்டாம் பாதியில் அதாவது போட்டியின் 53 ஆவது நிமிடத்தில்  துருக்கியின் மெரி டெமிரால் தவறுதலினால் சொந்த கோல் போடப்படேவ இத்தாலி 1க்கு 0 என்ற கோல் கணக்கில் முன்னிலைப் பெற்றது. இதையடுத்து, இத்தாலியின் சிரோ இம்மோபில் 64 ஆவது நிமிடத்திலும்,  லொரேன்சோ இன்சிங்கே 77 ஆவது நிமிடத்திலும் கோல் அடித்து தமது அணியின் வெற்றிக்கு வழிவகுத்தனர். போட்டியின் முழு நேர முடிவில் இத்தாலி அணி 3க்கு 0 என்ற கோல் கணக்கில் வென்றது.

இன்றைய தினம் மூன்று போட்டிகள் நடைபெறவுள்ளன. மாலை 6.30 மணிக்கு இடம்பெறும் முதல் போட்டியில் வேல்ஸ் அணி சுவிட்ஸர்லாந்து அணியையும், இரவு 9.30 மணிக்கு நடைபெறும் பாேட்டியில் டென்மார்க் அணி பின்லாந்து அணியையும் எதிர்த்தாடவுள்ளன. இதேவேளை, பெல்ஜியம் மற்றும் ரஷ்ய அணிகள் விளையாடும் பாேட்டி நள்ளிரவு 12.30 மணிக்கு ஆரம்பமாகும்.