(நா.தனுஜா)
நாடளாவிய ரீதியில் ஒவ்வொரு மாவட்டத்திலும் இனங்காணப்பட்ட 1000 தொற்றாளர்களில் பதிவான மரணங்கள் எத்தகையதாக இருக்கின்றது என்று நோக்கும்போது, காலி மாவட்டத்தில் அதிகளவான தொற்றாளர்கள் பதிவாகியிருப்பதுடன் பதுளை மற்றும் நுவரெலியா மாவட்டங்கள் அதற்கு அடுத்தடுத்த இடங்களில் இருக்கின்றன. எனவே எதிர்வரும் காலங்களில் இம்மாவட்டங்களில் பதிவாகும் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் பட்சத்தில் அவர்களில் மரணிக்கக்கூடியவர்களின் எண்ணிக்கையும் உயர்வடையும் என்று அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் செயற்குழு மற்றும் ஊடகக்குழு உறுப்பினரான வைத்தியநிபுணர் வாசன் ரட்ணசிங்கம் எச்சரித்துள்ளார்.

அவர் மேலும் கூறியதாவது:

கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கும் முகாமைசெய்வதற்கும், தொற்றினால் இடம்பெற்ற மரணங்கள் தொடர்பில் பகுப்பாய்வு செய்வது அவசியமானதாக இருக்கின்றது. அதனடிப்படையிலேயே எந்தெந்த வயதுப்பிரிவினருக்கு, எந்தெந்தப் பிரதேசங்களுக்கு தொற்றுப்பரவல் முகாமைத்துவத்தின் செயற்திறனை மேலும் அதிகரிக்கவேண்டும் என்ற தீர்மானத்தை மேற்கொள்ளமுடியும்.

அதன்படி ஒவ்வொரு மாவட்டத்திலும் இனங்காணப்பட்ட  1000  தொற்றாளர்களில்  இடம்பெற்ற மரணங்கள் எவ்வாறானதாக இருக்கின்றது என்று நோக்கும்போது காலி மாவட்டத்தில் 2.03 சதவீதமாக அது பதிவாகியிருக்கிறது. 

1000 தொற்றாளர்களில் அதிகளவான உயிரிழப்புக்கள் பதிவான மாவட்டமாக காலி மாவட்டம் விளங்குகின்றது. அதனைத்தொடர்ந்து பதுளை, நுவரெலியா ஆகிய மாவட்டங்களிலும் இனங்காணப்பட்ட தொற்றாளர்களில் அதிகளவானோர் உயிரிழந்திருக்கிறார்கள். எனவே இந்த மாவட்டங்களில் அதிகளவான தொற்றாளர்கள் இனங்காணப்படும்போது மேலும் அதிக எண்ணிக்கையான மரணங்கள் இடம்பெறுவதற்கான வாய்ப்புக்கள் உயர்வாக உள்ளன.

 இந்நிலையைக் கருத்திற்கொண்டு தொற்றுநோய்ப்பிரிவானது மரணங்கள் தொடர்பில் உரியவாறான பகுப்பாய்வை மேற்கொண்டு, அதற்கேற்றவாறு தொற்றுப்பரவலையும் மரணங்களையும் கட்டுப்படுத்துவதற்கான உத்திகளைக் கையாளவேண்டும். 

அதுமாத்திரமன்றி சரியான தகவல்களைச் சேகரித்தல், அவற்றை உரியவாறு பகுப்பாய்வு செய்தல் மற்றும் மக்களுக்கு சரியான தகவல்களையும் அறிவுறுத்தல்களையும் வழங்கல் ஆகிய விடயங்களில் தொற்றுநோய்த்தடுப்புப்பிரிவு மேலும் அவதானம் செலுத்தவேண்டும். தொற்றுநோய்த்தடுப்புப்பிரிவிற்கு விசேட வைத்தியநிபுணர்கள் சுமார் 25 பேர் வரையில் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்கள் ஒவ்வொரு மாவட்டங்களுக்கும் சென்று, உண்மையான தகவல்களைச்  சேகரித்து  மக்களுக்கு வழங்கவேண்டிய கடப்பாட்டைக் கொண்டிருக்கின்றார்கள்.

அதேபோன்று பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்படுவதும் அவற்றின் முடிவுகள் வெளியிடப்படுவதும் தொடர்ந்தும் தாமதிக்கப்பட்டு வருகின்றன. அதன்காரணமாக தொற்றாளர்கள் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படுவதும் தாமதிக்கப்படுகின்றது. இந்தத் தரவுகளில் காணப்படும் குறைபாடுகளின் காரணமாகவும் தொற்றுப்பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளைத் திறம்பட முன்னெடுக்கமுடியாதுள்ளது என்றார். 

நாட்டை நீண்டகாலத்திற்கு முடக்கிவைக்க முடியாது. ஆகவே பொதுமக்களின் ஒத்துழைப்பின் ஊடாக மாத்திரமே வைரஸ் பரவலைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவருவதுடன் நாட்டின் செயற்பாடுகளை மீண்டும் முன்னரைப்போன்று ஆரம்பிக்கமுடியும் என்பதைப் புரிந்துகொள்ளவேண்டும் என்று வலியுறுத்தினார்.