செ.தேன்மொழி

கடவத்தை பகுதியில் தனிமைப்படுத்தல் சட்டவிதிகளுக்கு புறம்பாக மதுபான விற்பனையில் ஈடுபட்டதாக சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

சந்தேக நபருக்கு எதிராக தனிமைப்படுத்தல் மற்றும் நோய்த்தடுப்பு சட்டவிதிகள் மற்றும் மதுபான கட்டளைச் சட்டத்தின் கீழும் சட்டநடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித்ரோஹண தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது,

களனி குற்றப்புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது , கடவத்தை பகுதியில் தனிமைப்படுத்தல் சட்டவிதிகளுக்கு புறம்பாக மதுபான விற்பனையில் ஈடுபட்ட சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

வத்தளை பகுதியைச் சேர்ந்த 42 வயதுடைய நபரொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

அவரிடமிருந்து 32 மதுபான போத்தல்களும் , 276 பியர் போத்தல்களும் , 77 700 ரூபாய் பணம் மற்றும் வேறு வகை மதுபான போத்தல்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.

போக்குவரத்து கட்டுப்பாடு அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில் , விருந்துபசாரங்கள் மற்றும் கொண்டாட்டங்களை நடத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் , சந்தேக நபர் விருந்துபசார நிகழ்வுகளுக்கு வழங்கும் நோக்கத்திலேயே இவ்வாறு மதுபான போத்தல்களை வைத்திருந்துள்ளதுடன் , அதனை அதிகூடிய விலைக்கு விற்பனை செய்ய எதிர்ப்பார்த்திருந்ததாகவும் தெரியவந்துள்ளது.

சந்தேக நபருக்கு எதிராக மதுபான கட்டளைச் சட்டம் மற்றும் தனிமைப்படுத்தல் மற்றும் நோய் தடுப்பு சட்டவிதிகளுக்கு கீழும் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.