செ.தேன்மொழி

நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் விசேட சோதனை நடவடிக்கையின் போது ஹெரோயின் போதைப்பொருளுடன் இளைஞர் ஒருவர் உட்பட நால்வர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித்ரோஹண தெரிவித்தார்.

பேலியகொடை பகுதியில் பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற தகவலுக்கமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது ஹெரோயின் போதைப்பொருளுடன் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது கைது செய்யப்பட்ட 35 வயதுடைய சந்தேக நபரிடமிருந்து 13 கிராம் ஹெரோயின் போதைப் பொருள் , 55 000 ரூபாய் பணம் மற்றும் போதைப் பொருட்களின் நிறையை அளவிடுவதற்காக பயன்படுத்தும் மின் தராசு ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளது.

இதேவேளை , 11 கிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் குருணாகல்  பகுதியில் பொலிஸ் போதைப் பொருள் ஒழிப்பு பிரிவினரின் சோதனை நடவடிக்கையின் போது 102 கிராம் ஹெரோயின் போதைப் பொருளுடன் 22 வயதுடைய இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபரான இளைஞனை 7 நாட்கள் தடுப்புக்காவலில் வைத்து விசாரணைக்குட்படுத்த பொலிஸ் போதைப் பொருள் ஒழிப்பு பிரிவினர் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர்.