(எம்.எம்.சில்வெஸ்டர் )

தற்போது நாட்டில் நிலவுகின்ற கொரோனா தொற்று அச்சுறுத்தல் காரணமாக போட்டிகளில் பங்கேற்க முடியாத காரணத்தினால் டோக்கியோ ஒலிம்பிக் அடைவு மட்டத்தை எட்ட முடியாது போயுள்ள இலங்கை வீர, வீராங்கனைகளை கஸகஸ்தான் மற்றும் இந்தியாவில் நடைபெறவுள்ள மெய்வல்லுநர் போட்டிகளில் பங்கேற்கச் செய்வதற்கு முயற்சித்து வருவதாக இலங்கை மெய்வல்லுநர் சங்கத் தலைவர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் பாலித்த பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். 

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக வீசா மற்றும் விமான பயணச் சீட்டுக்களை ஒதுக்கிக்கொள்வது கடினமாகக் காணப்பட்டிருந்தபோதிலும், டோக்கியோ ஒலிம்பிக்கான அடைவு மட்டத்தை அண்மித்து செல்வதற்கான வாய்ப்பு எதிர்வரும் 29 ஆம் திகதியுடன் முடிவடைகிறது. 

ஆகவே, எப்படியாவது  கஸகஸ்தான்  மற்றும் இந்தியா ஆகிய நாடுகளில் நடைபெறுகின்ற மெய்வல்லுநர் போட்டிகளில் அடைவு மட்டத்தை அண்மித்துள்ள எமது வீர, வீராங்கனைகளை பங்கேற்ற செய்வதற்கான முயற்சிகளை எடுத்து வருகிறேன் என  இலங்கை மெய்வல்லுநர் சங்கத் தலைவர் மேலும் தெரிவித்தார்.

"இலங்கை மெய்வல்லுநர் வீர, வீராங்கனைகளில் டோக்கியோ ஒலிம்பிக்குக்கான தகுதியை பெற்றுக்கொள்வதற்கான தரவரிசைப்படுத்தலின்படி,  3000 மீற்றர் தடைத்தாண்டல் ஓட்ட வீராங்கனை நிலானி ரட்நாயக்க உயர் நிலையில் உள்ளார்.  குறித்த தரவரிசையில் நிலானி ரட்நாயக்க 37 ஆவது இடத்தில் உள்ளதால் (தரவரிசையில் முதல் 45 பேருக்கு வாய்ப்பு) டோக்கியோ ஒலிம்பிக்கில் பங்கேற்பது உறுதி.

டோக்கியோ ஒலிம்பிக் தகுதிக்கான தரவரிசையின்படி, ஈட்டி எறிதல் வீரர் சுமேத ரணசிங்க, 400 மீற்றர் ஓட்ட வீராங்கனை நதீஷா ராமநாயக்க, 800 மீற்றர் ஓட்ட வீராங்கனை நிமாலி லியனராச்சி, அமெரிக்காவில் வசித்துவரும் உஷான் திவங்க, இத்தாலியில் வசித்துவரும் யுப்புன் அபேகோன் ஆகியோர் டோக்கியோ ஒலிம்பிக்குக்கான அடைவு மட்டத்தை ‍ அண்மித்தவர்களாவர். வார இறுதியில் 100 மீற்றர் ஓட்ட வீரரரான யுப்புன் அபேகோன், ஐரோப்பிய போட்டிகளில் பங்கேற்கவுள்ளதுடன், ஏனைய வீர, வீராங்கனைகள் மற்றும் 400 மீற்றர் ஓட்ட வீரரான காலிங்க குமார உள்ளிட்ட அணியொன்றை கஸகஸ்தான் போட்டித் தொடர் மற்றும் இந்தியாவின் பட்டியாவில் நடைபெறுகின்ற போட்டித் தொடர்களில் பங்கேற்க செய்வதே எமது பிரதான முயற்சியாகும். 

‍ஒலிம்பிக் தகுதிக்கான தரவரிசையில் 51 ஆவது இடத்தில் காணப்படும் ஊஷான் திவங்க, அண்மையில் 2.30 மீற்றர் உயரத்தை பாய்ந்துள்ளார். அவர் ஒலிம்பிக்  தகுதியை பெறுவதாயின்  2.33 மீற்றர் உயரத்தை பாய வேண்டும் அல்லது தரவரிசையில் 32 இடங்களுக்குள் வரவேண்டும்.  ஆண்களுக்கான 100 மீற்றர் தூரத்தை 10.09 செக்கன்களில் ஓடிமுடித்துள்ள யுப்புன் அபேகோன், ஒலிம்பிக் தகுதிக்கான தரவரிசையில்  65 ஆவது இடத்தில் உள்ளார். ஒலிம்பிக்கில் தகுதி பெறுவதாயின் முதல்  56 இடங்களுக்குள் வரவேண்டும் அல்லது போட்டித் தூரத்தை 10.05 செக்கன்களில் ஓடி முடிக்க வேண்டும்.

2016 ரியோ ஒலிம்பிக்கில் பங்கேற்ற ஈட்டி எறிதல் வீரரான சுமேத ரணசிங்க தற்போது 43 ஆவது இடத்தில் உள்ளார். அவர் டோக்கியோ ஒலிம்பிக்குக்கு தகுதி  பெறுவதாயின்,  85 மீற்றர் தூரத்துக்கு ஈட்டி எறிய வேண்டும் அல்லது 32 ஆவது இடத்துக்குள் வரவேண்டும். இதேவேளை, 800 மீற்றர் ஓட்ட வீராங்கனை நிமாலி லியனாராச்சி, 400 மீற்றர் ஓட்ட வீராங்கனை நதீஷா ராமநாயக்க  இருவரும்  ஒலிம்பிக் தகுதியை பெறும் தரவரிசையில் முதல் 48 இடங்களுக்குள் வரவேண்டும்"  என்றார்.

கொவிட் அச்சுறுத்தல் காரணமாக நாட்டில் பயணக்கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், வி‍ளையாட்டுத்துறை அமைச்சரின் அனுமதியுடனும் சுகாதார வழிமுறைகளை பின்பற்றி 99 ஆவது  தேசிய மெய்வல்லுநர் போட்டி கடந்த மே மாதத்தில் நடத்தப்பட்டிருந்த து. எனினும், ம‍‍ழை மற்றும் கடும் காற்று ஆகிய அசாதாரண காலநிலையுடன் போட்டியை நடத்தப்பட்டிருந்ததால், வீர வீராங்கனைகளால்  சிறந்த ஆற்றல் பெறுபேறுகளை வெளிப்படுத்த முடியாது போனதாக மெய்வல்லுநர் விமர்சகர்கள் கருதுகின்றனர்.