ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் பான் கீ மூனின் இலங்கை விஜயம் அரசாங்கத்திற்கு சாதகமானது. ஜெனிவா நெருக்கடிகளில் இருந்து நாம் பூரணமாக விடுபட அவரது விஜயம் சாதகமாக அமையும் என அமைச்சரும், அமைச்சரவை பேச்சாளருமான ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.

 தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் சிவில் அமைப்புகளுடனான ஐ.நா செயலாளர் நாயகத்தின் சந்திப்பு அவசியமானது எனவும் அவர் குறிப்பிட்டார். 

எதிர்வரும் 31ஆம் திகதி ஐ.நா செயலாளர் நாயகம் பான் கீ மூன் இலங்கைக்கு வரவுள்ள நிலையில் அவரது விஜயம் நாட்டின் மீதான சர்வதேச அழுத்தங்களுடன் எவ்வாறு தொடர்புபட்டுள்ளன என வினவிய போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில், 

இலங்கை மீதான சர்வதேச அழுத்தங்களை முழுமையாக குறைத்துக்கொள்ளும் நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுத்து வருகின்றது. எனினும் சர்வதேச அழுத்தங்களை பலப்படுத்தி நாட்டில் தொடர்ந்தும் குழப்பகர சூழல் ஒன்றை ஏற்படுத்தவும் ஒரு சாரார் முயற்சித்து வருகின்றனர். தற்போது ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் பான் கீ மூனின் இலங்கைக்கான வருகையும் கூட தமது பக்கம் சார்பாக்கிக்கொள்ள முயற்சித்து வருகின்றனர். எவ்வாறு இருப்பினும் இவர்களது முயற்சிகள் அரசாங்கத்தை அழுத்தத்திற்கு உள்ளாக்காது. அதேபோல் தற்போது அவர் மீண்டும் இலங்கைக்கு வருகின்றமை இலங்கைக்கு சாதகமாக அமையும்.

கடந்த காலங்களில் இருந்த நிலைமைகளை விடவும் இப்போது நாட்டில் ஜனநாயகம் பலமாக அமைந்துள்ளது. வடக்கு மக்களின் நிலைமைகள் பாரிய அளவில் மாற்றம் கண்டுள்ளன. அண்மையில் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர வடக்கிற்கு விஜயம் மேற்கொண்டு தற்போதைய நிலைமைகள் தொடர்பில் கவனம் செலுத்தியுள்ளார். அதேபோல் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் அரசாங்கம் பேச்சுவார்த்தை நடத்தியபோதிலும் வடக்கில் மக்களுக்கான ஜனநாயக நகர்வுகளை கையாள்வது தொடர்பில் அரசாங்கம் வாக்குறுதி வழங்கியுள்ளது. அவ்வாறான நிலையில் தற்போது அவரது விஜயம் சர்வதேச அழுத்தங்களில் இருந்து பூரணமாக நாம் விடுபட வாய்ப்பாக அமையும். 

மேலும் அவரது விஜயத்தின் போது அவர் வடக்கிற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். ஆனால் இந்த நகர்வுகள் வரவேற்கத்தக்கதாகும். அன்று இருந்ததை விடவும் தமிழ் மக்களும் தமிழ் மக்களின் பிரதிநிதிகளும் இன்று இருக்கும் நிலைப்பாடு மாறுபட்ட ஒன்றாகும். ஆகவே அவற்றை தெளிவாக விளங்கிக்கொள்ள சர்வதேச தரப்பினருக்கு நல்லதொரு வாய்ப்பினை நாம் அமைத்துக்கொடுக்க வேண்டும்.

ஆகவே அவரது விஜயத்தை நாம் வரவேற்கின்றோம். அத்துடன் கடந்த ஜெனிவா தொடரின் போது இலங்கை அரசாங்கம் செய்யவேண்டிய சில நகர்வுகள் தொடர்பில் ஆராயப்பட்டது. குறிப்பாக காணாமல்போனோர் தொடர்பில் ஆராயவும் நிரந்தர  நல்லிணக்கம் ஒன்றினை உருவாக்கவும் பலமாக வலியுறுத்தப்பட்டது. அவ்வாறு இருக்கையில் அதற்கான நடவடிக்கைகளை இலங்கை அரசாங்கம் மேற்கொண்டு வருகின்றது. புதிய அரசியல் அமைப்பு மூலமாக நாம்  மேற்கொண்டு வரும் நல்லிணக்க நகர்வுகள் மற்றும் சர்வதேச நாடுகளுடன் நாம் முன்னெடுத்து வரும் நகர்வுகள் என்பன எமக்கு சாதகமாக வாய்ப்புகளை ஏற்படுத்திக்கொடுத்துள்ளன. 

அதேபோல் இவரது வருகை நாட்டின் இறைமையை பாதிக்கும் வகையில் அமையும் எனவும் அவர் சர்வதேச விசாரணைகள் மற்றும் இராணுவ நீதிமன்றம் போன்றவற்றை அமைக்க வலியுறுத்த வருவதாகவும் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றது. எனினும் அவ்வாறான எந்தவொரு நகர்வுகளும் நடைபெறப்போவதில்லை. இலங்கையின் இறைமை பாதிக்கப்பட போவதுமில்லை. எவ்வாறு இருப்பினும் அடுத்த ஆண்டு ஜெனிவா கூட்டத்தொடர் ஆரம்பிக்க முன்னர்  இலங்கை தொடர்பில் மாறுபட்ட கருத்துகளை பலப்படுத்து கடந்த கால அழுத்தங்களில் இருந்து விடுபட இந்த விஜயம் சாதகமாக அமையும்  என்றார்.