புதிய அச்சிடப்பட்ட ஐக்கிய அரபு இராச்சியத்தில் அடையாள அட்டைக்கு காத்திருப்பவர்கள் மின்னணு முறையில் கைத்தொலைபேசியில் பெற்றுக்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஐக்கிய அரபு இராச்சியத்தில் குடிமக்கள் மற்றும் குடியிருப்பு உரிமை பெற்ற அனைவரும் அமீரக அடையாள அட்டை பெறுவது அவசியமாகும்.

இதில் விசாவிற்கு விண்ணப்பித்து, உடற்தகுதி காணும் மருத்துவ பரிசோதனைகள் நிறைவடைந்த பின்னர் ஐக்கிய அரபு இராச்சிய அடையாள அட்டை தனிநபருக்கு தபால் மூலம் வழங்கப்பட்டு வருகிறது.

மைக்ரோ சிப் பொருத்தப்பட்டுள்ள இந்த அட்டையில் தனிநபர் அடையாளங்கள் அனைத்தும் இடம்பெற்று இருக்கும்.

ஐக்கிய அரபு இராச்சியத்தை சேர்ந்தவர்கள் மற்றும் வெளிநாட்டை சேர்ந்தவர்கள் அனைவருக்கும் இந்த அட்டை வழங்கப்பட்டு வருகிறது.

தற்போது பலர் அமீரக அடையாள அட்டை அச்சிடப்பட்டு கைக்கு கிடைப்பதற்கு தாமதமாகும் காரணத்தால் பல்வேறு செயற்பாடுகளை தவற விடுவதாக புகார் அளித்துள்ளனர்.

இதனை கவனத்தில் கொண்டு தற்போது ஐ.சி.ஏ யூ.ஏ.இ ஸ்மார்ட் என்ற செயலியில் மின்னணு முறையில் கிடைப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த செயலியை ஐ.ஓ.எஸ் மற்றும் அண்ரோய்ட் மென்பொருளுடைய கைத்தொலைபேசியில் இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

பின்னர், அந்த செயலியில் தேவையான தகவல்களை பதிவிட்டு அதன்மூலம் புதிய ஐக்கிய அரபு இராச்சிய அடையாள அட்டையை மின்னணு முறையில் பெறலாம்.

கைத்தொலைபேசியில் தெரியும் ஐக்கிய அரபு இராச்சிய அடையாள அட்டை அச்சிடப்படும் அட்டையைப்போலவே அனைத்து அம்சங்களையும் உடையது ஆகும்.

தேவைப்படும் இடங்களில் கியூ.ஆர் கோட்-ஐ ஸ்கேன் செய்வதன் மூலம் இந்த அட்டையின் தகவல்களை அனைத்து அலுவலக செயல்பாடுகளுக்கும் பயன்படுத்தலாம்.

தற்போது அச்சிடப்படும் ஐக்கிய அரபு இராச்சிய அடையாள அட்டைகள் புதிய வடிவத்தில் புதுப்பொலிவுடன் அச்சிடப்பட்டு வருகிறது.

மேலும் தகவல்களை பாதுகாக்கும் வகையில் உயர் தொழில்நுட்ப உதவியினால் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே புதிய அச்சிடப்பட்ட ஐக்கிய அரபு இராச்சிய அடையாள அட்டைக்கு காத்திருப்பவர்கள் இந்த மின்னணு அடையாள அட்டையை பயன்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.