எம்.நேசமணி
நாட்டில் தீவிரமடையும் கொரோனா தாக்கத்தை கட்டுப்படுத்தும் முகமாகவே பயணக்கட்டுப்பாடு அமுல்படுத்தப்பட்டது. ஆனால் பயணத்தடை அமுலில் இருந்தபோதும் கொரோனா வைரஸ் தொற்றோ அல்லது அதனால் ஏற்படும் மரணங்களோ குறைந்த பாடில்லை.
நாளொன்றிற்கான கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை இரண்டாயிரத்தையும் தாண்டியுள்ளதுடன் மரணவீதங்களும் அதிகரித்தவண்ணமேயுள்ளது.
அதன் விளைவாகவே அரசாங்கம் பயணக்கட்டுப்பாட்டை நீக்காது நீட்டித்துள்ளது. அத்தோடு நாளொன்றிற்கான கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை ஆயிரத்தைவிட குறையும் பட்சத்திலேயே நாட்டை முழுமையாக திறக்க முடியும் எனவும் தெரிவித்துள்ளது.
நிலைமை இவ்வாறிருக்க தடுப்பூசி ஏற்றும் வேலைத்திட்டமும் வேகமெடுக்கத் தொடங்கியுள்ளது. வேதனை என்னவென்றால் அவ்வேலைத்திட்டம் எதற்காக முன்னெடுக்கப்படுகிறதோ அதனை மறந்து மக்கள் முண்டியடித்து சண்டைபிடித்துக்கொண்டு தடுப்பூசியை ஏற்றிக்கொள்ள முயல்வதுதான்.
கடந்த காலங்களில் தடுப்பூசி ஏற்றப்பட்ட பல்வேறு பகுதிகளில் அவ்வாறு பொறுப்பற்ற செயற்பாடுகளை காணமுடிந்தது. அதேபோன்று தடுப்பூசி ஏற்றப்படும் செயற்பாடுகளின்போதும் திட்டமிடப்படாத சில செயற்பாடுகள் இடம்பெறுவதும்கூட கொரோனா தடுப்பு வேலைத்திட்டத்தின் குறைபாடாக அமைந்துள்ளது.
அதாவது இந்திய அரசாங்கத்தால் இலவசமாக வழங்கப்பட்ட அஸ்ட்ராசெனேக்கா தடுப்பூசியை இலங்கை முறையாக திட்டமிட்டு ஏற்றவில்லை. அதனால் அந்த தடுப்பூசியின் முதல் டோஸ் போடப்பட்ட பலருக்கு இன்னும் அடுத்த டோஸ் போடப்படவில்லை.
இவ்வாறான செயற்பாடுகளை நீக்கி முறையான செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும். பயணக்கட்டுப்பாட்டு விடயமும் அப்படித்தான். உண்மையிலேயே இரண்டு அல்லது மூன்று வாரங்கள் ஏற்கனவே நாட்டை முழுமையாக முடக்கியிருந்தால் அது நல்ல பயனைத் தந்திருக்கும். மாறாக பயணக்கட்டுப்பாடு அறிமுகப்படுத்தப்பட்டாலும் அது முழுமையான பலனைத் தந்ததாக தெரியவில்லை. எனவே, அது தொடர்பில் அரசாங்கம் அவதானம் செலுத்தவேண்டும்.
அதேபோன்று பொது மக்களும் கொரோனா தொற்றின் பாரதூரத்தை உணர்ந்து மிகுந்த பொறுப்புடன் செயற்பட வேண்டும். சிலர் தேவையற்ற வகையில் பயணங்கள் செல்ல முற்படுகின்றனர். சிலர் கொண்டாட்டங்களில் ஈடுபடுகின்றனர் இன்னும் சிலர் வெளியில் லெல்லும்போது முறையாக முகக்கவசம் அணிவதில்லை. இவ்வாறான செயற்பாடுகளை உடனடியாக மக்கள் கைவிட வேண்டும்.
கொரோனாவை கட்டுப்படுத்துவது அரசாங்கத்தின் பொறுப்பு. அது நமது பொறுப்பல்ல என்ற மனநிலை மாற வேண்டும். நாட்டின் பிரஜையான அனைவருக்கும் கொரோனாவை கட்டுப்படுத்துவதில் பங்குண்டு என்பதை மறந்துவிடக்கூடாது. வீடுகளிலும், நிறுவனங்களிலும் ஏன் பொது இடங்களிலும் கூட சுகாதார நடைமுறைகளை பின்பற்ற வேண்டும்.
அவ்வாறு அனைவரும் பொறுப்புடன் சிந்தித்து செயற்பட்டால் மாத்திரமே இந்த கொடிய கொரோனாவை கட்டுப்படுத்த முடியும். மாறாக பயணக்கட்டுப்பாட்டை விதிப்பதால் மாத்திரம் அதனை நிறைவேற்ற முடியாது.
கடந்த வருடம் ஒக்டோபர் மாதத்திலிருந்து இதுவரையான காலப்பகுதியில் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் 26,920 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவர்களுக்கு எதிராக வழக்கும் தொடரப்பட்டுள்ளது. எனவே இந்த நிலைமை மாற்றமடையவேண்டும். இவ்வாறு பொறுப்பற்ற வகையில் பொதுமக்கள் செயற்படுவதன் காரணமாகவே பயணக்கட்டுப்பாடு நீடிக்கப்பட்டுள்ளது என்பதையும் கவனத்திற் கொள்ளவேண்டும்.
நாடு இயல்பு நிலைக்கு மாறினால் எல்லேருக்கும் பயனுள்ளதாய் இருக்கும். அதற்கு இந்த கொரோனா வைரஸின் தாக்கத்தை கட்டுப்படுத்த வேண்டும். அதற்காகவே அரசாங்கம் பல்வேறு வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருகிறது. குறிப்பாக தற்போது அமுல்படுத்தப்பட்டிருக்கும் பயணக்கட்டுப்பாடும் அவ்வாறானதொரு வேலைத்திட்டமே.
ஆனால் இந்த பயணக்கட்டுப்பாடு என்பது பயனுள்ளதாக அமைந்ததா? என்பது கேள்விக்குறியே.
இந்தியா போன்ற நாடுகளில் கொரோனா தாக்கம் கோரத்தாண்டவமாடியது. தொற்றாளர்களின் எண்ணிக்கை நாளொன்றிற்கு மூன்று இலட்சங்களை தாண்டியிருந்தது. அதேபோன்றே மரணங்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக் காணப்பட்டது. குறிப்பாக மக்கள் வீதிகளில் மயங்கி வீழ்ந்து மரணித்த சம்பவங்களும் ஏறாளம் பதிவாகியிருந்தன.
அங்கு கட்டுப்பாடுகள் அதாவது ஊரடங்கு சட்டம் அமுல் படுத்தப்பட்டதை தொடர்ந்து கொரோனா தொற்றாளர்கள் மற்றும் மரணங்கள் போன்றன குறையத் தொடங்கியது.
ஆனால் இலங்கையில் பயணக்கட்டுப்பாடு அமுலில் இருந்தபோதும் கொரோனாவின் தாக்கம் குறைந்தபாடில்லை. இதன் மூலம் என்ன புலனாகிறது என்றால் இந்த பயணக்கட்டுப்பாடு போதிய பயனை தரவில்லை என்பதுதான்.
இந்தியாவில் மூன்று இலட்சம்வரை காணப்பட்ட நாள் ஒன்றுக்கான கொரோனாத் தொற்றானது தற்போது ஒரு இலட்சத்தைவிட குறைந்துள்ளதை காணமுடிகிறது. எனவே இலங்கையில் இந்த பயணக்கட்டுப்பாடு என்ற முறையை கொஞ்சம் மாற்றியமைத்து கொரோனா கட்டுப்பாட்டு வேலைத்திட்டத்தை துரிதப்படுத்த வேண்டும்.
இலங்கையை பொறுத்தவரை இந்தியாவை போன்று பாரதூரமான நிலைமை ஏற்படவில்லை. ஆனால் அவ்வாறான ஒரு நிலைமை ஏற்பட்டுவிட இடமளிக்கக்கூடாது. முன்பை விட அதிக அவதானத்துடனும் பொறுப்புடனும் அனைவரும் இருக்கவேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது.
இலங்கையில் கொரோனா வைரஸ் தாக்கம் ஆரம்பத்தில் ஓரளவு குறைவாக காணப்பட்டாலும் பின்பு அதன் தாக்கம் படிப்படியாக அதிகரிக்கத் தொடங்கியது. நேற்றைய தினம் மாத்திரம் இலங்கையில் 2700 க்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியதுடன் 67 பேர் மரணித்துள்ளனர்.
ஆரம்பத்தில் மரணங்களின் எண்ணிக்கை சற்று குறைவாக காணப்பட்டாலும் அண்மைக் காலமாக மரண வீதம் அதிகரித்து வருவதை காணமுடிகிறது.
இலங்கையில் கொரோனா தாக்கத்தால் இதுவரை 1,910 மரணங்கள் சம்பவித்துள்ளதாகவும் இரண்டு இலட்சத்துக்கும் அதிகமானோர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியிருப்பதாகவும் சுகாதார அமைச்சின் தகவல்கள் குறிப்பிடுகின்றன.
இந்த தரவுகளின்படி பார்க்கின்றபோது, தற்போது கொரோனா பரவல் தீவிரமடைந்து வருவதை தெளிவாக உணர்ந்துகொள்ள முடிகிறது.
கொரோனா வைரஸ் தாக்கம் இலங்கையில் பரவத்தொடங்கி ஆரம்ப காலத்தில் மக்களிடையே காணப்பட்ட அச்சநிலை மற்றும் அவதானம் போன்றவற்றை தற்போது காணமுடியாதுள்ளது. ஆனால் ஒரு சிலர் பொறுப்பற்ற வகையில் செயற்படுகின்றனர்.
இப்படியே அவதானம் குறைவாக இருந்தால் எதிர்காலத்தில் நிலைமை இன்னும் மோசமாகலாம். அதனை கருத்திற்கொண்டே அரசாங்கம் பயணத்தடையை அமுல்படுத்தியுள்ளது.
அரசாங்கம் பயணத்தடையினை மேலும் பலப்படுத்தி தொடர்ந்து முன்னெடுக்க வேண்டும் எனவும் இல்லையேல் நிலைமை மிகவும் மோசமடையும் எனவும் சுகாதார தரப்பினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இதேவேளை நாட்டின் பொருளாதார நிலைமைகளை கருத்திற்கொண்டு தற்போது பிறப்பிக்கப்பட்டுள்ள பயணக்கட்டுப்பாட்டை எதிர்வரும் 14 ஆம் திகதியுடன் தளர்த்தகூடிய சாத்தியக்கூறுகள் உள்ளதாவென ஆராயுமாறு அரசாங்கம் வலியுறுத்தியுள்ளது.
அரசாங்கத்தின் இந்த யோசனைக்கு கடும் எதிர்ப்பு தோன்றியுள்ளது. அதாவது நாட்டின் பொருளாதாரத்தைவிட மக்களின் உயிர் மேலானது எனவும் அதனை கருத்திற்கொண்டு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படவேண்டும் எனவும் சுகாதார தரப்பினர் கொவிட் செயலணியிடம் தெரிவித்துள்ளனர்.
தடுப்பூசி வழங்கும் செயற்பாடுகள் மற்றும் கட்டுப்பாடுகள் போன்றவற்றை கடுமையாக்குதல் போன்ற செயற்பாடுகளை முன்னெடுப்பதன் மூலமே தொற்றாளர்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த முடியும் எனவும் அப்படி கட்டுபாடுடன் செயற்படாவிட்டால் தொற்றாளர்களின் எண்ணிக்கையுடன் மரணங்களின் எண்ணிக்கையும் மேலும் அதிகரிப்பதை தவிர்க்க முடியாது எனவும் சுகாதார தரப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
சித்திரை புதுவருடத்துக்கு முன்னர் நாட்டின் பொது போக்குவரத்தை எடுத்துக்கொண்டால் மிகவும் மோசமாகவே காணப்பட்டது. சுகாதார நடைமுறைகள் மற்றும் சமூக இடைவெளி போன்றவற்றைக்கூட பொதுமக்கள் முறையாக பின்பற்றாத ஒரு நிலைமைதான் அப்போது காணப்பட்டது. விசேடமாக காலை மற்றும் மாலை வேளைகளில் பஸ்களிலும் புகையிரதத்திலும் மிகுந்த நெறிசலாக பயணிகள் செல்வதை பார்க்ககூடியதாக இருந்தது.
சித்திரைப் புத்தாண்டு காலப்பகுதியில் நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும் மக்கள் சுற்றுலா பயணங்களை மேற்கொண்டனர். அதன்போது கொரோனாவின் பாரதூரத்தை உணராமல் அவதானமற்று செயற்பட்டனர்.
அதன் விளைவாகவே இன்று கொரோனா வைரஸின் தாக்கம் தீவிரமடைந்துள்ளது என்பதை மறந்துவிடக்கூடாது. எனவே இனியும் அவ்வாறு செயற்படாது, அரசாங்கம் விடுக்கும் கட்டுப்பாடுகளையும் சுகாதார நடைமுறைகளையும் பொதுமக்கள் கட்டாயம் பின்பற்றவேண்டும்.
தற்போது மீண்டும் விமான நிலையம் திறக்கப்பட்டுள்ளன. எனவே வெளிநாட்டு விமானங்கள் நமது நாட்டிற்குள் வரத்தொடங்கியுள்ளது. விமான நிலையங்களில் முறையான சுகாதார பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்ற வேண்டும் இல்லையேல் நிலைமை மேலும் மோசமடைவதற்கான வாய்ப்புக்கள் அதிகம் காணப்படுகின்றன.
வெளிநாடுகளில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள் மற்றம் முக்கிய பிரமுகர்களின் வருகை போன்ற விடயத்தில் சரியான பாதுகாப்பு நடைமுறைகளையும் முறையான திட்டங்களையும் முன்னெடுக்கவேண்டும்.
மாறாக இந்த விடயத்தில் அசமந்தமாக இருந்துவிடக்கூடாது. அதேபோன்று நாட்டில் தற்போது அமுலில் இருக்கும் பயணக்கட்டுப்பாடு எதிர்வரும் 14 ஆம் திகதியுடன் தளர்த்தப்படலாம் அல்லது மேலும் நீடிக்களாம். எவ்வாறாயினும் பொதுமக்களாகிய நாம் பொறுப்புடன் நடந்துகொள்ளவேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM