வீ.பிரியதர்சன்

'' பண்பாட்டு தொடர்பை பேணுவது நல்லிணக்கத்திற்கு வழி" அந்த பௌத்த கோவிலின் வாசலில் இந்துக்கள் வழிபடும் பிள்ளையார் அமர்ந்திருக்கிறார். ஒவ்வொருநாளும் மாலை 7மணிக்கு தேங்காய் உடைத்து பிள்ளையாருக்கு பூசைகள் நடக்கின்றன. மக்களும் குவிந்து நின்று வழிபடுகிறார்கள். இந்தப் பூசைகளை நடத்தி வைப்பது பௌத்த பிக்கு ஒருவர்.

காக்கைதீவு போதிராஜராம விகாரையில் நாளாந்தம் காணக்கூடிய காட்சி இது. இந்த விகாரையின் விகாராதிபதியான 35 வயதான அரியதேரரே இந்துக்களையும் பௌத்தர்களையும் ஒன்றாக ஒரு இடத்தில் இணைவதை உற்சாகப்படுத்துகிறார்.

''காக்கைதீவு என்பது ஒட்டுமொத்த நாட்டிற்குமே முன்னுதாரணமாக இருக்கும் பிரதேசமாகும். எமது விகாரையில் விநாயகரின் உருவச்சிலையை பிரதிஷ்டை செய்து இங்கு இந்துக்களும் வழிபடுவதற்கான வாய்ப்பை ஏற்படுத்தியிருக்கிறோம். இவ்வாறு இப்பிரதேசத்தில் நாமனைவரும் அந்நியோன்யத்துடன் செயற்பட்டு வருகின்றோம். இங்கு விகாரைக்கு இந்துக்கள் வருகை தருவார்கள். அதேபோன்று கோவிலுக்கும் பௌத்தர்கள் செல்வார்கள் என்கிறார்” அவர்.

பல்லின மக்கள் ஒன்றாக வாழும் காக்கைதீவுப் பிரதேசத்தில் கிறிஸ்தவ தேவாலயம், இந்துக்கோயில், பௌத்த விகாரை, இஸ்லாமிய பள்ளிவாசல் ஆகியன குறைவற்றிருக்கின்றன. மதவழிபாட்டு தலங்களில் நடைபெறும் வருடாந்த உற்சவங்களில் எல்லா இன மக்களும் கூடுவதை காணமுடியும். குறிப்பாக இந்த காக்கைதீவு போதிராஜராம விகாரை பற்றி மக்கள் அறிந்திருக்கிறார்கள்.

“ நான் 1985 ஆம் ஆண்டிலிருந்து இந்த காக்கைதீவு பிரதேசத்தில் வாழ்ந்து வருகின்றேன். இங்கு ஒரு அரசமரம் தான் இருந்தது. அந்த அரச மரத்திற்கு இங்கு இருந்த காவலாளி ஒருவர் தினமும் தீபம்  ஏற்றிக்கொண்டிருந்தார். சிலகாலத்தின் பின்னர் எனது கணவரான சரத் ராஜபக்ஷவும் மேலும் சில பௌத்தர்களான புதுசிங்க, கொடிக்கார, எல்லாவல, சுவர்ணா ராஜபக்ஷ மற்றும் மேலும் சிலர் ஒன்றிணைந்து சுவரொன்றை நிர்மாணித்து இதனை சிறிய விகாரை ஆக்கினோம். இங்குள்ள அனைவரும் ஒன்றிணைந்து விகாரைக்கு தேவையான நடவடிக்கைகளை முன்னெடுத்து வந்தோம். அதில் இந்துக்கள், கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர் என தமிழர்கள் பலரின் உதவி இந்த விகாரைக்குக் கிடைத்தது. அதன் பின்னர் ஒவ்வொரு குடும்பமும் திட்டமிட்டு, போயா தினங்களில் மாத்திரம் பூஜை வழிபாடுகளை நடத்திவந்தோம். அநேகமாக காலையில் தமிழர்களே தானம் வழங்குவதற்கு அவசியமானவற்றைச் செய்வார்கள். விகாரைக்குரிய பூஜைகளை முன்னின்று நடத்துவதற்கு பௌத்தர்கள் இல்லாவிட்டால், தமிழர்களும் இணைந்து அவற்றை நடத்துவார்கள். விகாரையில் சிரமதானமோ அல்லது துப்பரவுப் பணிகளோ செய்யவேண்டும் என்றால் இங்குள்ள முஸ்லிம்களும் எம்முடன் இணைந்து செயற்படுவார்கள். இங்கு இன, மத ரீதியாக எப்போதும் எந்தவொரு பிரச்சினைகளும் தோன்றியதில்லை” என்கிறார் 58 வயதான தீபா ராஜபக்ஷ.

தமிழர்களையும் உள்ளடக்கிய சங்கம் ஒன்றை அமைத்து அதனூடாக பல்வேறு சமூக மதப் பணிகளை, வேலைத்திட்டங்களை முன்னெடுத்ததாக தீபா ராஜபக்ஷ கூறுகிறார். ஆரம்பத்தில் தேரர் எவரும் இல்லாத நிலையில் தாமாகவே வழிபட்டு வந்த இந்த விகாரைக்கு பின்னாளில்தான் சில அரசியல்வாதிகளின் உதவியுடன் தேரரொருவரை நியமித்ததாக கூறுகிறார். அவ்வாறு வந்தவர்களில் ஒருவர் தான் அரியதேரர்.

“ நான் பௌத்தன் என்றோ அல்லது இந்து, முஸ்லிம், கிறிஸ்தவன் என்றோ அடையாளப்படுத்தி அந்த பட்டியலுக்குள் மாத்திரம் அடங்கி வாழும் சமூகத்திலிருந்து விலகி, அந்த மதங்களின் மூலம் போதிக்கப்படும் கருணை, அன்பு, பிறருக்கு உதவுதல் போன்ற நற்குணங்களை ஒவ்வொருவரும் தமக்குள் மேம்படுத்திக்கொண்டால் அந்த சமூகம் மிகவும் சிறந்ததாக மாற்றமடையும்.” என்கிறர் அரியதேரர்.

ஒரே தொழில்துறைகளில் இருக்கும் மக்கள் தாமாகவே ஒன்றாக இணைந்தது அமைதியான வாழ்வு வாழ்கின்றபோது மதங்கள் தமக்கான நிறுவனங்களை நிறுவி மதபிரிவினையை ஏற்படுத்துகின்றனர் என்ற கருத்தும் சில மக்களிடம் உண்டு. அந்த கருத்துக்கு இடமளிக்காதவகையில் இந்த விகாரையும் இங்கு வரும் தேரர்களும் நடந்துகொள்வது இன சௌஜன்யத்தை பேணுவதாக உள்ளது.

நான் அதிகளவில் தமிழர்களுடனேயே பழகுகின்றேன். எனக்கு மிகவும் குறைவான எண்ணிக்கையிலேயே பௌத்த சிங்கள நண்பர்கள் இருக்கின்றார்கள். அதேவேளை கோவில்களில் விசேட உற்சவங்களின் போது நாம் அவற்றில் கலந்துகொள்வோம். இந்து கடவுள்களில் நம்பிக்கை உள்ளது. நான் தொடர்ச்சியாக கதிர்காமம் சென்றுவருகின்றேன். பிள்ளைகள் கல்வியில் சிறந்து விளங்க வேண்டும் என்று நாம் விநாயகரையே வழிபடுவோம்.” என்கிறார் காக்கைதீவில் வாழும் 61வயதான ரூபசிங்க ஆராச்சிக்கே நிரூபா குமுதினி.

பொட்டு வைத்து நன்றாக தமிழ் பேசும் நிருபா குமுதினி தமிழர் ஒருவரை மணம்செய்து அங்கு வாழ்பவர்.

“ எனக்கு 3 பிள்ளைகள் உள்ளனர். நான் காக்கை தீவில் சுமார் 33 வருடங்களுக்கு மேல் வாழ்ந்து வருகிறேன். அந்தக் காலத்தில் இருந்து இன்று வரை இங்குள்ளவர்கள் எந்த பிரச்சினை வந்தாலும் அனைவரும்சேர்ந்திருந்தே அதனை எதிர்ப்போம். அதில் வெற்றிகொள்வோம். இங்கு எவரும் உயர்ந்தவர்கள் தாழ்ந்தவர்கள் என்ற வேறுபாடுகள் கிடையாது. நான் விகாரைக்கும் செல்வேன். இந்து கோவிலுக்கும் செல்வேன். ஆனால் என்னுடைய பிள்ளைகள் 3 பேரும் தமிழில் தான் படித்தார்கள். இந்து மதத்தையே பின்பற்றுகின்றனர். ஆனால் அவர்களுக்கு சிங்கள மொழியும் பரீட்சயமானது. அத்துடன் பௌத்த மத கலாச்சாரங்களையம் அவர்கள் புரிந்து வைத்துள்ளனர்.” என்கிறார் பெருமிதத்துடன்.  நிருபா குமுதினியின் கணவரும் இரு இனங்களுடனும் சௌஜன்யமாக வாழும் ஒருவராக இருக்கிறார்.

“ மதங்கள் அனைத்தும் ஒரு குறிக்கோளையே சொல்கின்றன. இந்த விகாரையில் பிள்ளையார் சிலை வைத்து வழிபடுகின்றோம். அத்துடன் அங்கு உள்ளே வேறு இந்து கடவுளர்களும் உள்ளனர்.” என்கிறார் நிருபா குமுதினியின் கணவர்.

அதேபோன்று காக்கைதீவில் மக்களை முன்னிறுத்தி செயற்படுகின்ற பல்வேறு நலனோம்பு அமைப்புக்கள் உள்ளன. அனைத்து இனங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளன.

இங்கு இருக்கின்ற மக்கள் அனைவரையும் உள்ளகப்படுத்துவதற்காக மட்டும் விகாரையில் பிள்ளையாரை வைக்கவில்லை. இந்து மதத்திற்கும் பௌத்தத்திற்கும் உள்ள தொன்மையான தொடர்பும் அதற்கு காரணம் என்பதை தேரர் சுட்டுகிறார்.

“ இவ்விரு மதங்களுக்குமிடையில் வரலாற்றுக்காலத்தில் இருந்தே மிகவும் அந்நியோன்யமான தொடர்பு இருந்து வந்திருக்கிறது. புத்தபெருமான் பரிநிர்வாணமடைந்த புனித இடம் தான் இலங்கை. அதனைத்தொடர்ந்து இலங்கை பல்வேறு தனித்துவமான விடயங்களுக்கு முக்கியத்துவம் பெற்றது. புத்தபெருமான் ஓர் இந்துவாக இருந்தபோதிலும், பின்னர் அவர் பௌத்தத்தைத் தழுவினார்.” என்று மதங்களின் வரலாற்று சௌஜன்யத்தை கூறுகிறார் தேரர்.

இந்த விடயம் தொடர்பில் விரிவான விளக்கத்தை தேரரிடம் கேட்டபோது,

“பௌத்த மதத்திற்கும் இந்து மதத்திற்கும் வரலாற்றுக் காலத்தில் இருந்த மிக நெருக்கமான தொடர்புகளையே எமது பௌத்த விகாரையில் நாம் வணங்கும் இந்து தெய்வங்கள் பறைசாற்றி நின்கின்றன. இலங்கை மக்களிடையே இந்துமதமும் பௌத்தமதமும் பெரும் வழக்கில் இருந்த மதங்களாகும். பௌத்த தமிழர்களும் இருந்திருக்கிறார்கள்.

மதத்தினூடாக இனம் பிரிக்கப்பட்டிருக்கவில்லை. மொழியினூடாகதான் பிரிந்து நின்றது. இவ்விரு மத மக்கள் தமக்கிடையே மிக நெருங்கிய தொடர்புடையவர்களாக காலந்தோறும் இருந்து வருகின்றனர். பின்னாளில் இது இனரீதியான மதப்பிணைப்பாக மாறி நோக்கப்பட்டது. பல்வேறு காரணங்களால் இவ்விரு இனமக்களும் முரண்பாடுகளைச் சந்தித்த போதிலும் இவர்களது பண்பாட்டுக் கலப்பு என்பது தவிர்க்க முடியாததொன்றாகவே இருந்து வந்துள்ளது.” என்கிறார் தேரர்.

இந்து மதத்திற்கும் பௌத்தத்திற்குமான தொடர்பை இவ்வாறு விளக்கினார்.

“ இந்திய தேசத்தின் அசோக மன்னரின் புத்திரர் அரஹந்த் மஹிந்தா தேரரினதும் சங்கமித்தையினதும் வருகையின் பின்னர் இலங்கையில் கலை, கலாசாரம், மொழி, என அனைத்திலும் பெரும் எழுச்சி ஏற்பட்டது.

இவர் ஒரு இந்துவாக பிறந்து இருந்தாலும் பௌத்தத்தை பின்பற்றியவர். பௌத்த தர்மத்தின் உண்மையான சிந்தனைகளை போதித்து இலங்கையில் பெரும் சேவையாற்றினார். அநுராதபுர காலம் மற்றும் பொலன்னறுவைக் காலம் ஆகிய காலப்பகுதிகளை எடுத்துக்கொண்டால் தென் இந்தியாவிலிருந்து பல படையெடுப்புகள் இடம்பெற்றிருந்த அன்றைய காலப்பகுதியில் இலங்கையில் இந்து மதமும் வியாபித்திருந்து. எனவே இந்த பிரதேசத்தில் நாம் வாழும் போது பௌத்த விகாரைகளில் இந்து கடவுள்களை வைத்து வழிபடவும் அதன் போதனைகளை கற்பிக்கவும் வேண்டும்.

குறிப்பாக இந்துக்கள் விரும்பி நம்பிக்கையோடு வழிபடும் பிள்ளையாரை விகாரைகளில் முன் பக்கத்தில் வைத்து இந்து மற்றும் பௌத்த மக்களுக்கு வழிபடுவதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்தி கொடுத்துள்ளோம்.“ என வரலாற்று தொடர்ச்சியை எடுத்துச்செல்லும் ஒருவராக தன்னை முன்னிறுத்தினார்.

உண்மையில் இந்துமதம் பிறந்த இடம் என வர்ணிக்கப்படும் நேபாளத்தில் பௌத்த விகாரைகளுக்கு சென்றால், இந்துக்கடவுளும் இணைந்து இருப்பதைக் காணலாம். பண்பாட்டு தொடர்ச்சி அழியாமல் பேணப்படுவது என்பது அனைவரையும் இணைத்து செல்லும் ஒரு உத்தியாவும் இருக்கும்.

“இதன் ஊடாக மத நல்லிணக்கத்தை ஏற்படுத்தவே முற்படுகின்றோம். மத நல்லிணக்கம், இன நல்லிணக்கம் இல்லாவிடின் மனிதர்களால் மேம்பட இயலாது. எனவே எதிர்கால சவால்களை எதிர்கொள்ள மனிதர்களாகிய நாம் மேம்பட வேண்டும். இதற்கு நல்லிணக்கம் என்பது அத்தியாவசியமாகின்றது. எனவே நீண்ட வரலாற்றை கொண்ட இரு மத உறவுகள் ஊடாக புரிதலை ஏற்படுத்துவோம்” என நம்பிக்கையுடன் கூறுகிறார் அரிய தேரர்.

ஆம் வரலாற்று உண்மைகள் அரசியல் மயப்படுத்தலால் திரிபடைந்ததும் அரசியல்  அதிகாரம், வாக்கு சேகரிப்பால் இரு இனங்களும் வெவ்வேறு திசைகளில் பயணிக்கின்றன. இந்த திசைகளை மாற்ற மதங்களால் முடியும் என்பதை இந்த சிறிய தீவான காக்கை தீவு காட்டிநிற்கிறது.