(எம்.எம்.சில்வெஸ்டர்)

இலங்கை கிரிக்கெட் அணி வீரர்களான ஷெஹான் ஜயசூரிய மற்றும்  அமில அபோன்ஸோ ஆகிய இருவரும் இலங்கை கிரிக்கெட்டிலிருந்து விலகிக்கொண்டு ஐக்கிய அமெரிக்க கிரிக்கெட் கழகங்களில் விளையாடவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இலங்கை கிரிக்கெட்  அணியின் சகலதுறை வீரரான 29 வயதான ஷெஹான் ஜயசூரிய 2015 ஆம் ஆண்டு ஒகஸ்ட் மாதத்திலும், 28 வயதாகும் இடதுகை சுழற்பந்துவீச்சாளரான அமில அபோன்ஸோ 2016 ஆம் ஆண்டு ஒகஸ்ட் மாதத்திலும் சர்வதேச கிரிக்கெட்  அரங்கில் கால் பதித்தனர். 

இந்நிலையில், இவர்கள் இருவருக்கும் இலங்கை கிரிக்கெட் அணியில் தொடர்ந்து வாய்ப்புக்கள் கிடைக்காததால் இலங்கை கிரிக்கெட் அணியிலிருந்து விலகி, ஐக்கிய அமெரிக்காவில் முதல் முறையாக நடைபெறவுள்ள 'மைனர் கிரிக்கெட் லீக்கில்  (MINOR CRICKET LEAGUE) பங்கேற்கவுள்ளனர்.  இப்போட்டித் தொடர் எதிர்வரும் ஜூலை 31 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.

ஷெஹான் ஜயசூரிய சிலிக்கன் வெலி ஸ்ட்ரைக்கர்ஸ் (SILICON VALLEY STRIKERS) அணிக்காகவும், அமில அபோன்ஸோ  அட்லாண்டா பயர் (ATLANTA FIRE) அணிக்காகவும் விளையாடவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இவ்விருவரும் மொரட்டுவை புனித செபஸ்தியார் கல்லூரியின் பழைய மாணவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.