(ஆர்.யசி)

கொவிட் -19 வைரஸ் மரணங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளமை உண்மையே, ஆனால் இது ஒரே நாளில் பதிவான மரணங்களாக கணக்கிடக்கூடாது. 

இறுதியாக பதிவான 67 மரணங்களும் கடந்த இருவாரகாலத்தில் ஏற்பட்டது என்கிறார் சுகாதார பணிப்பாளர் அசேல குணவர்தன. 

வைத்தியசாலைகளில் போதிய இடவசதி இல்லாதமை மற்றும் கொவிட் நோயாளர்களை உடனடியாக சிகிச்சையளிக்க முடியாதமையே கொவிட் மரணங்கள் அதிகரிக்க காரணம் என்பதை சுகாதார பணியகம் கண்டறிந்துள்ளதாகவும் அவர் கூறினார்.

கடந்த சில தினங்களாக நாட்டில் கொவிட் மரணங்கள் அதிகரித்துள்ள நிலையில் சுகாதார பணியகம் இது குறித்து மேற்கொண்டுள்ள ஆய்வுகள் மற்றும் கொவிட் மரணங்கள் அதிகரிக்க எதுவான காரணிகள் குறித்தும் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறினார். 

அவர் மேலும் கூறுகையில்,

கொவிட் வைரஸ் பரவல் குறித்த தரவுகள் எமக்கு நாளாந்தம் கிடைத்து வருகின்றன. எனினும் வாராந்த ஆய்வுகளையே நாம் முன்னெடுத்து வருகின்றோம். 

ஏனெனில் தரவுகள் பல்வேறு வழிமுறைகளில் எமக்கு கிடைக்கின்றன, எமக்கு கிடைக்கும் ஒவ்வொரு தரவுகளுக்கு இடையில் முரண்பாடுகள், பொருந்தா தன்மைகள் காணப்படுகின்றன. எனினும் அனைத்தையும் ஒப்பிட்டு இறுதியாக எடுக்கும் பொதுவான ஒரு தரவையே  ஊடகங்களுக்கு வெளியிடுகின்றோம். 

ஆகவே வாராந்த தரவுகளையே எம்மால் வெளிப்படுத்த முடியும். இதில் சில குறைபாடுகள், காலதாமதங்கள் ஏற்படுவதை நாம் மறுக்கவில்லை.

மரணங்களை பொறுத்தவரையில் நாளாந்தம் பதிவாகும் மரணங்களை விடவும் வாராந்தம் பதிவாகும் மரணங்களை கொண்டே நாம் தீர்மானம் எடுக்கின்றோம். 

எவ்வாறு இருப்பினும் நாளாந்த மரண வீதமானது அதிகரித்துள்ளது. அதனை நாம் ஏற்றுக்கொள்கின்றோம். நாளுக்கு நாள் இது உயர்வை காட்டுகின்றது என்பதை எம்மால் மறுக்க முடித்து. 

இதனை சுகாதார நிபுணர்கள் தொடர்ச்சியாக எமக்கு வலியுறுத்தி வருகின்றனர். அதனையும் நாம் வெளிப்படையாக கூறியாக வேண்டும். ஆனால் பரவலை கட்டுப்படுத்தும் செயற்பாடுகளில் பலவீனத்தன்மை இருப்பதாக கூறுவதை எம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது.

 எம்மாலான சகல விதத்திலும் பரவலை கட்டுப்படுத்தும் வேலைத்திட்டத்தை முன்னெடுகின்றோம்.

வைரஸ் பரவலை கட்டுப்படுத்த பி.சி.ஆர் பரிசோதனை அதிகரிக்க கூறுகின்றனர். ஆனால் அதனை எம்மால் செய்ய முடியாது. அதற்கான வசதிகள் எம்மிடத்தில் இல்லை. 

இயந்திரங்களை  பெற்றுக்கொள்ள அளவுக்கு அதிகமான நிதி தேவைப்படுகின்றது. அதேபோல் நோயாளர்களை விரைவாக வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல முடித்தமை மற்றும் வைத்தியசாலைகளில் உள்ள இட பற்றாக்குறை என்பவற்றின் காரணமாகவே மரணங்களின் எண்ணிக்கை அதிகரிக்க பிரதான காரணமாக கருதப்படுகின்றது. தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பின் விளைவுகளே இவை அனைத்தும் எனவும் அவர் கூறினார்.