(எம்.எப்.எம்.பஸீர்)
கொள்ளுபிட்டி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மொனார்ச் சொகுசு தொடர்மாடி குடியிருப்பின்  மேல் மாடியில் அமைந்துள்ள நீச்சல் தடாகம் அருகே நடாத்தப்பட்ட களியாட்ட நிகழ்வு தொடர்பில்  9 பேரை பொலிசார் கைது செய்துள்ளனர். 6 ஆண்கள் மற்றும் 3 பெண்களே இவ்வாறு கைது செய்யப்பட்டதாக பொலிஸ் பேச்சளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.

இதில் வெளிநாட்டை சேர்ந்த இரு ஆண்களும் ஒரு பெண்ணும் உள்ளடங்குகின்றமை குறிப்பிடதகக்கது. 

 நாட்டில் நிலவும் கொரோனா தொற்றுடன் கூடிய சூழலில், அனைத்து களியாட்டங்களும், தனிமைப்பத்தல் ஒழுங்கு விதிகளின் கீழ் சுகாதார சேவைகள் பணிப்பாளருக்கு உள்ள அதிகாரத்துக்கு அமைய, தனிமைப்படுத்தல் மற்றும் தொற்றுநோய் தடுப்பு சட்டத்தின் விதிகள் பிரகாரம்  விஷேட சுற்றறிக்கை  ஊடாக  தடைச் செய்யப்பட்டுள்ளன. அத்துடன் நாட்டில் பயணக் கட்டுப்பாடும் தொடர்கிறது.

இவ்வாறான நிலையிலேயே குறித்த களியாட்ட நிகழ்வு, தனிமைப்படுத்தல் சட்டத்துக்கு முரணாக நடாத்தப்பட்டுள்ளமை தொடர்பில் கொள்ளுபிட்டி பொலிசாருக்கு அறியக் கிடைத்ததையடுத்து, கொள்ளுபிட்டி பொலிஸ்நிலைய பொறுப்பதிகாரி தலைமையிலான குழுவினர் இந்த ஒன்பது பேரையும் கைது செய்தனர்.

 கொழும்பு மேலதிக நீதிவான் சந்திம லியனகே முன்னிலையில் ஆஜர் செய்யப்பட்ட இவர்கள், தனிமைப்படுத்தல் மற்றும் தொற்றுநோய் தடுப்பு கட்டளை  சட்டத்தின் கீழ் முன் வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் பிணையளிக்க முடியுமான குற்றச்சாட்டுக்கள் என சுட்டிக்காட்டிய நீதிவான் சந்திம லியனகே, அவர்களை தலா 10 இலட்சம் ரூபா பெறுமதியான சொந்த பிணையில் விடுவித்தார்.

 இதன்போது கொள்ளுபிட்டி பொலிசார் அவர்களை தனிமைப்படுத்த உத்தரவொன்றினை கோரிய போதும், நீதிமன்றுக்கு அந்த அதிகாரம் இல்லை என நீதிவான் அறிவித்தார்.

 எவ்வாறாயினும் கொள்ளுபிட்டி  பிரதேசத்தின் பொது சுகாதார பரிசோதகர், குறித்த ஒன்பது பேரையும் 14 நாட்கள் சுய தனிமைப்படுத்தலில் ஈடுபட ஆலோசனை வழங்கியுள்ளதாக பொலிஸார் நீதிமன்றுக்கு அறிவித்தனர்.

 அதன்படி கைது செய்யக்பட்டு பிணையளிக்கப்பட்ட 9 பேரும் வீட்டு தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.