(எம்.மனோசித்ரா)
இலங்கையில் நாளாந்தம் கொவிட் தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2,000 ஐ அண்மித்துள்ளது.
தொற்றுக்குள்ளாகி உயிரிழப்பவர்களின் விபரங்கள் நாளாந்தம் அறிவிக்கப்படுகின்ற போதிலும், அவை சுமார் இரண்டு அல்லது மூன்று வாரங்களுக்கு முன்னர் பதிவாகிய மரணங்களாகவே உள்ளது.
ஒரு மரணம் சம்பவித்து 3 வாரங்களின் பின்னரே அதற்கான காரணம் கொவிட் தொற்று என அறிவிக்கப்படுவது மக்கள் மத்தியில் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளதுடன் நாடளாவிய ரீதியிலுள்ள வைத்தியசாலைகளின் பிணவறைகளில் சந்தேகத்திற்கிடமான சடலங்கள் குவிக்கப்பட்டுள்ளன.
இம்மாதம் முதலாம் திகதி முதல் 8 ஆம் திகதிக்கு இடைப்பட்ட ஒரு வார காலத்தில் 426 கொவிட் மரணங்கள் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆனால், இவற்றில் 5 மரணங்கள் மாத்திரமே இம்மாதம் பதிவானவையாகும். அதற்கேற்ப இம்மாதம் முதலாம் திகதி ஒரு மரணமும், 3 ஆம் திகதி மூன்று மரணங்களும், 5 ஆம் திகதி ஒரு மரணமும் என குறித்த 5 கொவிட் மரணங்கள் பதிவாகியுள்ளன. எஞ்சிய 421 கொவிட் மரணங்களும் மே மாதம் 10 ஆம் திகதி முதல் 31 ஆம் திகதி வரை பதிவாகியவையாகும்.
அதற்கேற்ப மே மாதம் 10 ஆம் திகதி உயிரிழந்த நபருக்கு கொவிட் தொற்று ஏற்பட்டுள்ளது என்பது சுமார் ஒரு மாதத்தின் பின்னரே உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
அவ்வாறெனில் தொற்று உறுதிப்படுத்தப்படும் வரை உயிரழிப்பவர்களின் சடலங்களுக்கு என்ன ஆகிறது? வைத்தியசாலைகளில் பிணவறைகளில் வைக்கப்படுகின்றனவா? அல்லது உறவினர்களிடம் கையளிக்கப்படுகின்றனவா?
பி.சி.ஆர். பரிசோதனை முடிவுகள் கிடைக்கும் வரை சடலங்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படுவதில்லை
கொவிட் தொற்றால் உயிரிழப்பவர்கள் தொடர்பான தகவல்கள் சுமார் 3 வாரங்களின் பின்னர் அறிவிக்கப்படுகின்றமையால் எழுந்துள்ள கேள்விகள் குறித்து சுகாதார அமைச்சின் தொற்று நோய் பிரிவின் பணிப்பாளர் விசேட வைத்திய நிபுணர் சுதத் சமரவீரவை தொடர்பு கொண்டு வினவிய போது,
' சடலமொன்றில் பி.சி.ஆர். பரிசோதனை முன்னெடுக்கப்பட்ட பின்னர் அதனை தகனம் செய்வதற்கு அல்லது அடக்கம் செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். அதன் பின்னர் தொற்று உறுதிப்படுத்தப்பட்ட பின்னரே அது குறித்த தகவல்களை வெளியிடுகின்றோம்.
இதன்போது பி.சி.ஆர். அறிக்கை கிடைப்பதற்கு சில நேரங்களில் தாமதங்கள் ஏற்படக்கூடும். எனவே அதுவரையில் சடலங்கள் வைக்கப்பட்டுள்ளனவா? இல்லையா? என்பதை ஸ்திரமாகக் கூற முடியாது. ஆனால் பெரும்பாலான சந்தர்ப்பங்களில் சடலங்களை வைத்திருப்பதில்லை' என்று அவர் பதிலளித்தார்.
சடலங்களுக்கு என்னவாகிறது என்று ஸ்திரமாகக் கூற முடியாது என்பதே தொற்று நோயியல் பிரிவின் பதிலாகவுள்ளது.
சடலங்களை ஒப்படைக்க முடியாது
இந்நிலையில் இவ்விவகாரம் தொடர்பில் இலங்கை வைத்திய ஆய்வுக்கூட நிபுணர் சங்கத்தின் தலைவர் வைத்தியர் ரவி குமுதேஷிடம் வினவிய போது,
' சந்தேகத்திற்கிடமான மரணமொன்று இடம்பெற்றால் பி.சி.ஆர். பரிசோதனையை மேற்கொண்டு அதன் முடிவுகள் கிடைக்கப்பெறும் வரை சடலங்கள் உறவினர்களிடம் ஒப்படைக்க முடியாது. எனவே சடலத்தை பிணவறையில் அல்லது உரிய இடங்களில் வைத்திருக்க வேண்டியேற்படும். தொடர்ச்சியான இவ்வாறான சூழ்நிலை ஏற்படுகிறது.
எனவே இந்த சிக்கலுக்கு காணப்படும் மாற்று வழியாக, பிரதான வைத்தியசாலைகளுக்கு உடனடி பி.சி.ஆர். இயந்திரங்களை வழங்குமாறு நாம் தொடர்ந்தும் சுகாதார அமைச்சிடம் வலியுறுத்தி வருகின்றோம்.
அவ்வாறு வைத்தியசாலைகளுக்கு பி.சி.ஆர். இயந்திரம் வழங்கப்பட்டால் சடலங்களிலிருந்து பெறப்படும் மாதிரிகளை பிரதான ஆய்வுகூடங்களுக்கு அனுப்பாமல் அந்தந்த இடங்களில் பரிசோதனைக்கு உட்படுத்தி தீர்வினைக் காண முடியும்.
எனினும் சுகாதார அமைச்சு அதற்கான நடவடிக்கையை எடுக்காததன் காரணமாக பல இடங்களில் இந்தப் பிரச்சினை காணப்படுகிறது. எவ்வாறிருப்பினும் கொவிட் என்று சந்தேகிக்கப்படும் மரணங்கள் பதிவாகும்போது ஏனையவற்றைப் போன்று குறித்த சடலங்களையும் உறவினர்களிடம் ஒப்படைக்க முடியாது.
இதன் காரணமாகவே பொது மக்களே அசௌகரியங்களுக்கு உள்ளாகின்றனர். எவ்வாறிருப்பினும் உயிரிழந்தவருக்கு கொவிட் தொற்று ஏற்பட்டுள்ளதா? இல்லையா? என்பதை உறுதிப்படுத்தும் வரையில் சடலங்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படுவதில்லை' என்று வைத்தியர் ரவி குமுதேஷ் குறிப்பிட்டார்.
சர்ச்சைக்கான தீர்வு கிடைக்குமா?
கொவிட் சடலங்கள் குறித்த சர்ச்சைக்கு, சம்மந்தப்பட்ட துறையுடன் தொடர்புடைய நிபுணர்களை தொடர்புகொண்ட போதிலும், மாறுபட்ட கருத்துக்களே தெரிவிக்கப்படுகின்றன.
தொற்று நோயியல் பிரிவின் பிரதானி கூறுவதைப் போன்று சடலங்கள் நீண்ட நாட்களுக்கு முன்னர் வைத்திருக்கப்படமாட்டாது என்றால் , பரிசோதனையின் பின்னர் தொற்று உறுதிப்படுத்தப்படும் பட்சத்தில் அது சமூகத்தில் வைரஸ் பரவலை அதிகரிக்கக்கூடிய அபாயத்தை தோற்றுவிக்கும்.
மாறாக இலங்கை வைத்திய ஆய்வுகூட நிபுணர் சங்கம் கூறுவதை அடிப்படையாகக் கொண்டு அவதானித்தால், பிரதான வைத்தியசாலைகளில் சடலங்கள் தேங்கிக் கிடக்கக்கூடிய நிலைமையே ஏற்படும்.
இது மருத்துவ நிர்வாகத்திற்கும் கட்டமைப்பிற்கும் பாரிய நெருக்கடியை ஏற்படுத்தும். எனவே, சடலங்களில் முன்னெடுக்கப்படுகின்ற பி.சி.ஆர். பரிசோதனைகளின் முடிவுகளை துரிதமாக வழங்குவதற்கு உரிய தரப்பினர் நடவடிக்கை எடுப்பதே இந்த சர்ச்சைக்கு முற்று புள்ளி வைக்கும்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM