(எம்.மனோசித்ரா)

இந்தியா மற்றும் பிரித்தானியாவில் பரவியுள்ள நிலைமாறிய கொரோனா வைரஸ்  நாட்டின் பல பிரதேசங்களிலிருந்து பெற்றுக் கொள்ளப்பட்ட மாதிரிகளில் இனங்காணப்பட்டுள்ளதாக ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் நோயெதிர்ப்பு மற்றும் மூலக்கூறு மருத்துவப் பிரிவின் பணிப்பாளர் பேராசிரியர் சந்திம ஜீவந்தர தெரிவித்தார்.

பிரித்தானியாவில் இனங்காணப்பட்ட பி.1.1.7. வைரஸ் கொழும்பு தேசிய வைத்தியசாலை ஊழியர்களின் மாதிரிகளில் இனங்காணப்பட்டுள்ளதாகவும் , அவர்கள் அனைவரும் தற்போது தொற்றிலிருந்து குணமடைந்துள்ளதோடு அஸ்ட்ராசெனிகா தடுப்பூசியை இரு கட்டடங்களாகவும் பெற்றவர்கள் என்றும் பேராசிரியர் சந்திம ஜீவந்தர சுட்டிக்காட்டினார்.

இலங்கையில் கொரோனா வைரஸ் குறித்த மரபணு பரிசோதனைகள் ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஆய்வு கூடத்தில் முன்னெடுக்கப்பட்ட நிலையில் , அது தொடர்பான அறிக்கை நேற்று புதன்கிழமை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தனவிடம் கையளிக்கப்பட்டது.

குறித்த மரபணு பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள விடயங்கள் தொடர்பில் வினவிய போதே பேராசிரியர் சந்திம ஜீவந்தர இதனைத் தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் ,

வஸ்கடுவையில் பி.1.617.2 (டெல்டா) வைரஸ்

இந்தியாவில் தற்போது பரவிக் கொண்டிருக்கும் பி.1.617.2 (டெல்டா) வைரஸ் வஸ்கடுவ பிரதேசத்தில் தனிமைப்படுத்தல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்ற ஹோட்டலொன்றிலிருந்து பெறப்பட்ட மாதிரியில் இனங்காணப்பட்டுள்ளது. இந்தியாவில் பரவும் நிலைமாறிய இந்த வைரஸ் தொற்றாளர் இலங்கையில் இனங்காணப்பட்டுள்ளமை இது இரண்டாவது தடவையாகும்.

9 பகுதிகளில் பி.1.1.7. வைரஸ்  

இதே போன்று பிரித்தானியாவில் இனங்காணப்பட்ட பி.1.1.7. (அல்பா) வைரஸானது கொழும்பு, மட்டக்களப்பு, திருகோணமலை, குளியாபிட்டி, வாரியபொல, ஹபராதுவ, திஸ்ஸமகாராம, கராப்பிட்டி மற்றும் றாகம ஆகிய பிரதேசங்களிலிருந்து பெற்றுக் கொள்ளப்பட்ட மாதரிகளில் இனங்காணப்பட்டுள்ளது. இந்த வைரஸானது இதுவரையில் இலங்கையில் 80 நபர்களிடமிருந்து பெறப்பட்ட மாதிரிகளில் இனங்காணப்பட்டுள்ளது.

திஸ்ஸமகாராமையில் பி.1.411 வைரஸ்

மேலும் பி.1.411 நிலைமாறிய கொவிட் தொற்றாளர் திஸ்ஸமகாராம பிரதேசத்தில் இனங்காணப்பட்டுள்ளார்.

கொழும்பு தேசிய வைத்தியசாலை ஊழியர்களின் மாதரிகளில் பி.1.1.7 வைரஸ்

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் பணிபுரியும் ஊழியர்களுக்கு முன்னெடுக்கப்பட்ட பரிசோதனைகளில் அவர்களின் மாதிரிகளில் பி.1.1.7 (அல்பா) வைரஸ் இனங்காணப்பட்டுள்ளதோடு , இவர்கள் அனைவரும் கொவிஷீல்ட் தடுப்பூசியினை இரு கட்டங்களாகவும் பெற்றுக்கொண்டவர்களாவர். மேலும் குறித்த ஊழியர்கள் அனைவரும் தற்போது தொற்றிலிருந்து குணமடைந்துள்ளமையும் சுட்டிக்காட்டத்தக்கதாகும் என்றார்.