(எம்.எப்.எம்.பஸீர்)
கைது செய்யும் போது எதற்காக கைது செய்யப்படுகிறார் என தகவல்களை வெளிப்படுத்தாது கைது செய்யப்பட்டதாக கூறப்படும் இலங்கை தகவல் தொழில்நுட்ப சங்கத்தின் தலைவர் என அடையாளப்படுத்தப்படும் ரஜீவ் யசிரு குருவிட்டகே மெதிவ் எனும் இளைஞரை பிணையில் விடுவிக்க கொழும்பு நீதிவான் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது. கொழும்பு பிரதான நீதிவான் புத்திக ஸ்ரீ ராகல இதற்கான உத்தரவை நேற்று பிறப்பித்தார்.

நாட்டிலுள்ள அரச நிறுவனங்களின் உத்தியோகபூர்வ இணையத்தளங்கள், குறிப்பாக ஜனாதிபதி செயலக இணையம்  ஊடுருவப்பட்டுள்ளதாக போலியான தகவலை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்தமைக்காக அவரை கைது செய்ததாக குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் நேற்று முன்தினம்  நீதிமன்றுக்கு அறிவிக்கப்பட்டது.

ஜனாதிபதி செயலகம், வெளிவிவகார அமைச்சு உள்ளிட்ட அரச நிறுவனங்களின் இணையத்தளங்கள் ஊடுருவப்பட்டுள்ளதாக சந்தேகநபரால் தயாரிக்கப்பட்ட அறிக்கை சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டுள்ளதாக அவர்கள் மன்றில் சுட்டிக்காட்டினர்.

எவ்வாறாயினும்  சந்தேக நபரான இளைஞர் சார்பில் ஆஜரான சிரேஷ்ட சட்டத்தரணி திஷ்ய வேரகொட தலைமையில்  டிலான் நாலக, சஞ்ஜய ஆரியதாஸ, மிகார டொஸ் உள்ளிட்ட சட்டத்தரணிகள் அதனை மறுத்தனர்.

 இந்நிலையில், குறித்த வழக்கானது கொழும்பு பிரதான நீதிவான் முன்னிலையிலேயே  எடுத்துக்கொள்ளப்பட வேண்டியது எனவும், அதனால்  அவர் முன்னிலையில் நேற்று சந்தேக நபரை ஆஜர் செய்யுமாறும் நேற்று முன்தினம் கொழும்பு  மேலதிக நீதிவான் , ரஜீந்ர ஜயசூரிய உத்தரவிட்டிருந்தார்.

 அதன்படி நேற்று குறித்த விவகாரம் விசாரணைக்கு வந்தது.  இதன்போது சந்தேக நபரான இளைஞர் சார்பில் ஆஜரான சிரேஷ்ட சட்டத்தரணி  திஷ்ய வேரகொட, அவரை பிணையில் விடுவிக்குமாறு கோரினார்.

 எனினும் சி.ஐ.டி.யின் அதிகாரிகள் அக்கோரிக்கைக்கு கடும் எதிர்ப்பு வெளியிட்டனர்.

 சந்தேக நபர் இணையத்தில் வெளியிட்ட குறித்த தகவல்களால், இலங்கையின் பொருளாதாரத்தை கவிழ்க்கவும், அரசாங்கத்தை அசெளகரியத்துக்குட்படுத்தவும் இரகசிய திட்டம் இருந்ததா என விசாரிக்கப்படுவதாகவும், அதனால் அவரை பிணையில் விடுவித்தால் அந்த விசாரணைகள் பாதிக்கப்படும் எனவும் சி.ஐ.டி.யினர் மன்றுக்கு தெரிவித்தனர்.

 இதன்போது சி.ஐ.டி.யினரிடம் கேள்வி எழுப்பிய பிரதான நீதிவான் புத்திக ஸ்ரீ ராகல,  சந்தேக நபர் ஜனாதிபதி செயலக இணையத்தளத்தினுள்ளோ அல்லது வழக்குடன் தொடர்புடைய ஏனைய இணையத்தயங்கலுக்கோ சட்ட விரோதமாக ஹெக் செய்து நுழைந்துள்ளாரா? அல்லது அவ்விணையத்தள கடவுச் சொற்களை பயன்படுத்தி ஏதும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளாரா என  வினவினார்.

அதற்கு பதிலளித்த சி.ஐ.டி.யினர் இதுவரையிலான விசாரணைகளில் அவ்வாறு தெரியவரவில்லை என குறிப்பிட்டனர். அப்படியானால் ஹெக் செய்யும் அல்லது கடவுச் சொல்லினை  பெற்று  மோசடியான முறையில் அவ்விணையத்தளங்கலுக்குள் நுழையும் செயற்பாடுகளுக்கு அவர் உதவி செய்துள்ளாரா என நீதிவான் கேள்வி எழுப்பினார். அதற்கு சி.ஐ.டி.யினர் பதிலலிக்காது மெளனமாக இருந்தனர்.

 விசாரணைக்கு தொடர்பில்லாத சட்ட  அத்தியாயங்களை இணைத்துக்கொள்வதன்  ஊடாக சி.ஐ.டி. வழக்கினை கூட ஒழுங்காக முன்னெடுத்து செல்ல முடியாது என நீதிவான் சுட்டிக்காட்டினார்.

 இதனையடுத்து வேரு குற்றச்சாட்டுக்களை முன்வைக்கும் வரை சந்தேக நபரை விளக்கமறியலில் வைக்க சி.ஐ.டி.யினர் நீதிமன்றைக் கோரினர்.

 எனினும் நீதிமன்றம் அதனை நிராகரித்தது.

' முன்வைக்கப்பட்டுள்ள விடயங்களுக்கமைய சந்தேக நபருக்கு எதிராக கணினிக் குற்றங்கள் தொடர்பிலான  சட்டத்தின்  கீழ் குற்றம் சுமத்த எந்த சாட்சியங்களும் இல்லை என தெளிவாகிறது.  வேறு குற்றச்சாட்டுக்களை சுமத்தும் வரை சந்தேக நபர் ஒருவரை விளக்கமரியலில் வைக்க முடியாது. எனவே சந்தேக நபரை ஒரு இலட்சம் ரூபா சொந்த பிணையில் செல்ல நீதிமன்றம் அனுமதிக்கிறது.' என பிரதான நீதிவான் புத்திக ஸ்ரீ ராகல அறிவித்தார்.

 இதனையடுத்து இது குறித்த மேலதிக விசாரணைகள் எதிர்வரும் ஜூலை முதலாம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.