வேல் தர்மா

விலைவாசி ஏற்றம் என்பது எல்லா அரசுகளையும் திணறடிக்கும். விலைவாசி ஏற்றத்தால் தேர்தலில் தோற்கடிக்கப்பட்ட பல சம்பவங்கள் உலகெங்கும் நடப்பதுண்டு. பொதுவான விலைவாசி ஏற்றத்தை பொருளியலாளர்கள் பணவீக்கம் என அழைப்பர். 

2008 ஆம் ஆண்டு நடந்த உலகப் பொருளாதார பிரச்சனைக்குப் பின்னர் பொருளாதாரத்தை தூண்டுவதற்கு பல நாடுகள் முயன்றபோது போதிய பணவீக்கம் இல்லாததால் பொருளாதார வளர்ச்சி ஏற்படவில்லை. 

ஜப்பான், அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் பொருட்களின் விலைகள் வீழ்ச்சியடைந்து பணவீக்கம் எதிர்மறையாகியது. ஒரு குறித்த விலையில் விற்பனை செய்யலாம் என எதிர்பார்த்து பொருட்களை உற்பத்தி செய்தவர்கள் ஏமாற்றமடைந்தனர். அதனால் உற்பத்தி வீழ்ச்சி ஏற்பட்டதால் பொருளாதரம் வளர்ச்சியடையவில்லை. 

விலைவாசி ஏற்றம் ஓரளவு அவசியம்

விலைகள் அதிகரித்து பணவீக்கம் உருவானால் பொருளாதாரம் வளர்ச்சியடையும். ஐரோப்பிய ஒன்றியம் இரண்டு விழுக்காட்டிலும் குறைந்த பணவீக்கம் இருப்பதை அனுமதிக்கின்றது. பல நாடுகள் இரண்டு விழுக்காடு பணவீக்கம் அவசியம் எனக் கருதுகின்றன. 

ஜப்பானிலும் ஐரோப்பிய ஒன்றியத்திலும் பணவீக்கம் எதிர்மறையானபோது அவை தமது வட்டி விழுக்காட்டையும் எதிர்மறையாக்கியது. குறைவான வட்டி வீதம் இருக்கும்போது மக்கள் சேமிப்பை நிறுத்தி விட்டு அதிக அன்றாடப் பாவனைப் பொருட்களையும் நீண்டகாலப் பாவனைப் பொருட்களையும் வாங்குவார்கள். அதனால் உற்பத்தி அதிகரித்து பொருளாதாரம் வளர்ச்சியடையும். 

பணவீக்க பட்டறிவு

சென்ற நூற்றாண்டின் அறுபதுகளிலும் எழுபதுகளிலும் உலகெங்கும் ஏற்பட்ட உயர்வான பணவீக்கம் பலரும் வைத்திருந்த சொத்துக்களின் பெறுமதிகளை குறைத்தது. பணவீக்கத்தை குறைக்க அரசுகள் வட்டி விழுக்காட்டை அதிகரித்தன. அதனால் முதலீட்டாளர்கள் அரச கடன் முறிகளிலும் வங்கிகளின் நிலையான வைப்புக்களிலும் முதலிட்டனர். அதனால் பங்குகளின் விலைகள் பெரும் வீழ்ச்சியைக் கண்டன. உற்பத்தித் துறையில் முதலீடுகளும் குறைந்தன. பொதுவாக அரசுகள் தங்கள் வரவுக்கு அதிகமாக செலவு செய்யும்போது பணவீக்கம் ஏற்படும். அதனால் அரச நிதிக் கட்டுப்பாட்டில் அதிக கவனம் செலுத்தப்பட்டது.

2008 ஆம் ஆண்டின் பின்னர் ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சி

2008 ஆம் ஆண்டு உலகெங்கும் பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்டபோது அரசுகள் பெருமளவு நிதியை அளவுசார் தளர்ச்சி (Quantitative Easing) மூலம் வங்கிகளின் கைகளில் கொடுத்தன. வங்கிகள் அவற்றை குறைந்த வட்டிக்கு உற்பத்தித் துறைக்கு கடன் கொடுத்தன. அதனால் உற்பத்தி அதிகரித்து பொருளாதார வளர்ச்சி ஏற்பட்டது. 

அதனால் ஜப்பானைத் தவிர பல முன்னணி நாடுகள் பொருளாதாரப் பின்னடைவில் இருந்து தப்பித்துக் கொண்டன. உற்பத்தித்துறை வேலைவாய்ப்பை அதிகரித்தது. வேலை பெற்றவர்கள் பொருட்களை வாங்க, உற்பத்தி மேலும் அதிகரித்து பொருளாதர வளர்ச்சி ஏற்பட்டது. 2008 ஆம் ஆண்டின் பின்னர் செய்த அளவுசார் தளர்ச்சி எதிர்பார்த்த நன்மையைத் தர எதிர்பார்த்ததிலும் அதிக காலம் எடுத்தது. ஆனால் பணவீக்கம் ஒரு பிரச்சனையாக அமையவில்லை. 

பெருந்தொற்றுக்கு பின்னரான பொருளாதார வீழ்ச்சி

2019 ஆம் ஆண்டின் இறுதியில் சீனாவிலும் 2020 ஆம் ஆண்டில் உலகெங்கிலும் பரவிய கொவிட்-19 என்னும் பெருந்தொற்று நோயால் உலகப் பொருளாதாரம் முன்பு எப்போதும் இல்லாத அளவு வீழ்ச்சியை சடுதியாகக் கண்டது. பெருமளவு உற்பத்தி நிறுவனங்கள் மூடப்பட்டன. அதில் பணிபுரிந்தவர்களின் வருமானம் பாதிக்கப்பட்டது. 

விளையாட்டரங்குகள், திரைப்பட மடுவங்கள், பொழுதுபோக்கிடங்கள், உல்லாசப் பயணத்துறை ஆகியவை பெரிதும் பாதிப்புக்குள்ளாகியது. பெருந்த்தொற்றுக்கு முன்னர் ஆண்டுக்கு சராசரியாக இரண்டு விழுக்காடு வளர்ச்சியடைந்த அபிவிருத்தியடைந்த நாடுகளின் பொருளாதாரம் 2020 இல் 8.5விழுக்காடு சரிவடைந்தது. 

நான்கு ஆண்டுகள் கட்டி எழுப்பியது ஓராண்டில் சரிந்தது. இந்தியாவின் பொருளாதாரம் 2020 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் 2021 ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரையிலான நிதியாண்டில் எட்டு விழுக்காட்டிற்கு மேல் சரித்திருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. 

கொவிட்-19 பெருந்தொற்று நோயில் இருந்து துரிதமாக விடுபட்டதாக கருதப்படும் சீனாவின் பொருளாதாரம் 2020 இல் 2.5 விழுக்காடு மட்டுமே வளர்ந்தது. 2019 ஆம் ஆண்டில் சீனாவின் பொருளாதார வளர்ச்சி 6.1விழுக்காடாக இருந்தது.

பெருந்தொற்று பொருளாதார மீட்சி

பெருந்தொற்றால் பாதிப்படைந்த பொருளாதாரத்தை மீட்டெடுப்பதற்கு உலகெங்கிலும் உள்ள அரசுகள் வித்தியாசமான அணுகு முறையைக் கடைப்பிடிக்க வேண்டி நிலையில் இருக்கின்றன. பெருந்தொற்றால் பெருமளவு மக்கள் வேலை இழந்து வாழ முடியாமல் துயரப்படும்போது அவர்களின் கைகளில் நேரடியாக பணத்தை க்கொடுத்தன. 

அரச நிதி நெருக்கடியை கவனத்தில் எடுக்க முடியாத நிலை உருவாகியுள்ளது. மக்களின் கைகளில் பணத்தையும் பொருட்களையும் இலவசமாகவும் இலகு கடனிலும் அரசுகள் திணித்தன. அதனால் நாட்டில் கொள்வனவு அதிகரித்து பொருளாதாரம் மீள வளர்ச்சியடையும் என அரசுகள் எதிர்பார்த்தன. 

ஆனால்,   உற்பத்தித் துறையில் பெரும்பகுதி மூடி இருந்ததால் மக்கள் வாங்க முன்வந்த பொருட்கள் சந்தையில் இல்லை. அதனால் விலைகள் அதிகரித்தன. உலகெங்கும் பணவீக்கம் தலைதூக்கியுள்ளது. பணவீக்கம் அமெரிக்காவில் 4.8%, ஐரோப்பிய ஒன்றியத்தில் 2%, பிரித்தானியாவில் 2.5%, இலங்கையில் 4.1%, இந்தியாவில் 5.2%, சீனாவில் 8.5% என 2021 ஆம் ஆண்டு ஏப்ரல்/மே மாதங்களில் இருக்கின்றன.

ஆபத்தான பணவீக்கமா?

பிரித்தானியாவின் நடுவண் வங்கியில் ஆளுநர் பணவீக்கத்தைதான் மிகக் கவனமாக அவதானிப்பதாகவும் ஆனால் அதையிட்டு கவலை கொள்ளவில்லை என்றார். பெரும்பாலான பொருளாதார நிபுணர்கள் கொவிட்-19 பெருந்தொற்றால் பாதிகப்பட்ட பொருளாதாரத்தை மீட்க அரசுகள் செய்யும் செலவுகளால் உருவான பணவீக்கம் தற்காலிகமானது எனக் கருதுகின்றனர். 

பணவீக்கத்தைக் கடுப்படுத்த அரசுகள் வட்டி விழுக்காட்டை அதிகரிப்பது வழக்கம். ஆனால் வட்டி விழுக்காடு அதிகரித்தால் பொருளாதார வளர்ச்சி பாதிப்படையும். 

உலகப் பொருளாதாரம் இன்னும் பல மாதங்களுக்கு அதிக பணவீக்கத்துடன் வாழப் பழகிக்கொள்ள வேண்டும்.