வயது மூப்பின் காரணமாக மரணமடைந்த திரைப்பட இயக்குனர் சொர்ணம் அவர்களின் உடலுக்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.

புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் நடித்த 'தாயின் மடியில்', 'நம்நாடு', 'கலங்கரை விளக்கம்', 'குடியிருந்த கோயில்', 'ஒளிவிளக்கு', 'என் அண்ணன்', 'குமரிக்கோட்டம்', 'இதயவீணை', 'ராமன் தேடிய சீதை', 'பட்டிக்காட்டு பொன்னையா: உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு வசனம் எழுதியவர் சொர்ணம். 

இவர் வசனகர்த்தாவாக பணியாற்றியதுடன் நடிகர்கள் சிவக்குமார், கமலஹாசன் இணைந்து நடித்த 'தங்கத்திலே வைரம்', நடிகர் முத்துராமன் நடித்த 'சீர்வரிசை', நடிகர் ஜெய்சங்கர் நடித்த 'ஆசை மனைவி' போன்ற படங்களையும் இயக்கி இயக்குனராகவும் பிரபலமானார்.

மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் கருணாநிதி கதை எழுதிய 'ஒரே ரத்தம்' என்ற படத்தை இயக்கியிருக்கிறார். இந்த படத்தின் மூலம் தற்போதைய முதல்வரான மு க ஸ்டாலின் நடிகராக அறிமுகமானார்.

88 வயதாகும் இவர் சென்னையின் புறநகர் பகுதியில் வசித்து வந்தார். முதுமையின் காரணமாக உடல்நலக்குறைவு ஏற்பட்டு உயிரிழந்தார். இவருக்கு தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் நேரில் சென்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.