(நா.தனுஜா)
கொரோனா வைரஸ் தொற்றினால் மே மாதத்தில் களுத்துறை மாவட்டத்தில் அதிகளவான மரணங்கள் பதிவாகியிருப்பதுடன், தொற்றாளர்களினால்  சப்ரகமுவ மாகாணத்தில் அதிகளவான படுக்கைகள் நிரம்பியிருக்கின்றன. அதுமாத்திரமன்றி மே மாதம் 27 ஆம் திகதி 149 ஆகக் காணப்பட்ட  ஒட்சிசன் தேவைப்பாடுடைய தொற்றாளர்களின் எண்ணிக்கை ஜுன் மாதம் 6 ஆம்  திகதியாகும் போது 783 ஆக உயர்வடைந்திருக்கிறது. இவையனைத்தும் நோயின் தீவிரமும் பரவலும் அதிகரித்துவருவதையே காண்பிக்கின்றது என்று அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் மத்தியகுழு மற்றும் ஊடகக்குழு உறுப்பினரான வைத்திய நிபுணர் வாசன் ரட்ணசிங்கம் சுட்டிக்காட்டியுள்ளார்.

அவர் மேலும் கூறியதாவது, நாடளாவிய ரீதியில் கொரோனா வைரஸ் மிகத்தீவிரமாகப் பரவிவரும் நிலையில், அதனைக் கட்டுப்படுத்துவதற்கு நாமனைவரும் ஒன்றிணைந்து எம்மாலான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றோம். தற்போது கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை 2 இலட்சத்து 10 ஆயிரத்தை அண்மிக்கும் அதேவேளை, தொற்றினால் ஏற்பட்ட மொத்த மரணங்களின் எண்ணிக்கை 1800 ஐ அண்மிக்கின்றது.

 கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக கடந்த மே  மாதத்தில் சுமார் 793 மரணங்கள் நிகழ்ந்திருக்கின்றன. அந்த மரணங்களில் அதிகளவானவை களுத்துறை மாவட்டத்திலேயே பதிவாகியிருக்கின்றன. களுத்துறை மாவட்டத்தில் 123 மரணங்களும் கொழும்பு மாவட்டத்தில் 99 மரணங்களும் காலி மாவட்டத்தில் 96 மரணங்களும் கம்பஹா மாவட்டத்தில் 81 மரணங்களும் கண்டி மாவட்டத்தில் 70 மரணங்களும் பதிவாகியிருக்கின்றன. இதனடிப்படையில் நோக்குகையில் களுத்துறை மாவட்டமானது அபாயகரமான பிரதேசமாகக் காணப்படுகின்றது.

கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக கடந்த மே மாதத்தில் இடம்பெற்ற மரணங்கள் தொடர்பில் ஆராய்கையில், மொத்த மரணங்களில் சுமார் 17.4 சதவீதமானவை களுத்துறை மாவட்டத்தில் பதிவாகியிருப்பதுடன், அங்கு நாளொன்றுக்கு 38 மரணங்கள் வரையில்கூட இடம்பெற்றிருக்கின்றன. எனினும் உண்மையில் இந்த மரணங்கள் இடம்பெற்ற தினத்திலிருந்து சில தினங்களுக்குப் பின்னரேயே அம்மரணங்கள் தொடர்பில் அறிவிக்கப்படுகின்றன. நாளொன்றில் வெகுசில மரணங்களே இடம்பெற்றதாகக் கூறப்பட்டாலும், அந்நாளின் முடிவில் அதிக எண்ணிக்கையானோர் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்திருப்பதாகக் கூறப்படுகின்றது. ஆகவே இந்த மரணங்கள் முறையாகக் கணிப்பிடப்பட்டு, அறிவிக்கப்படவில்லை என்றே கருதவேண்டியிருக்கிறது.

இந்நிலையில் தற்போது களுத்துறை மாவட்டத்தில் அதிகளவான மரணங்கள் பதிவாகியிருப்பதன் காரணமாக, அங்கு மத்தியநிலையமொன்றை அமைத்து தொற்றாளர்கள் மற்றும் மரணங்கள் தொடர்பில் ஆராயவேண்டிய கட்டாயத்திலிருக்கின்றோம். அதேபோன்று நாளாந்தம் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படும் நோயாளர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகின்றது. 

மேலும், கடந்தகாலத்தில் பெரும்பாலும் மேல்மாகாணத்தில் வியாபித்திருந்த இந்தத் தொற்றுநோய், தற்போது ஏனைய மாகாணங்களுக்கும் பரவிச்செல்வதனை அவதானிக்க முடிகின்றது. எனவே நாடளாவிய ரீதியில் தற்போது விதிக்கப்பட்டுள்ள அதிதீவிர பயணக்கட்டுப்பாடுகளை பொதுமக்கள் முறையாகப் பின்பற்றுவதுடன் பொறுப்புணர்வுடன் செயற்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.