(நா.தனுஜா)
உலகளாவிய ரீதியில் தோற்றம்பெற்ற சந்தைப்பொருளாதாரக் கட்டமைப்பைத் தொடர்ந்து, அனைத்து வளங்களும் சூழலிலிருந்தே பெறப்படுகின்ற போதிலும் அவை மீண்டும் சூழலுக்குத் திருப்பிச்செலுத்தப்படுவதில்லை. இதன் காரணமாக பாரிய சூழல் மாசடைவை எதிர்நோக்க வேண்டியிருப்பதுடன் வளப்பற்றாக்குறையும் ஏற்பட்டுள்ளது என பாராளுமன்ற உறுப்பினரும் கோப் குழுவின் தலைவருமான பேராசிரியர் சரித ஹேரத் சுட்டிக்காட்டினார்.

இது குறித்து அவர் மேலும் கூறிகையில், 

சந்தைப் பொருளாதாரக் கட்டமைப்பினால் ஏற்பட்ட பிரச்சினைகளைத் தொடர்ந்தே 'பசுமைப்பொருளாதாரம்' என்ற எண்ணக்கரு தோற்றம்பெற்றது. ஏனெனில் எமது சுற்றுச்சூழலில் இருந்து பெறப்படும் பொருட்களை அடிப்படையாகக்கொண்டே சந்தைப்பொருளாதாரம் இயங்குகின்றது. ஆனால் சூழலில் இருந்து பெறுகின்ற விடயங்களை நாம் சூழலுக்குத் திருப்பிச்செலுத்துவதில்லை. தேவையான அனைத்தையும், தேவையான நேரத்தில் சுற்றுச்சூழலில் இருந்து பெற்றுக்கொள்ள முடியும் என்ற சிந்தனையொன்று இந்த சந்தைப்பொருளாதாரத்தின் ஊடாக ஏற்பட்டிருக்கின்றது. இவ்வாறு சூழலுக்கு மீளச்செலுத்தாமல், அதிலிருந்து வளங்களை எடுத்துக்கொண்டேயிருப்பதனால் தற்போது வளங்களில் பாரிய பற்றாக்குறை ஏற்பட்டிருக்கின்றது. அதேபோன்று சுவாசிப்பதற்கான தூயவளியைப் பெற்றுக்கொள்வதுடன் விஷமற்ற தூயநீரைப் பெறுவதும் நெருக்கடிக்குரிய விடயங்களாக மாறியிருக்கின்றன.

சூழல் பாதுகாப்பிற்கு முக்கியத்துவமளிக்காத வகையிலான அரசியல் கட்டமைப்பொன்று பலவருடங்களுக்கு முன்னரேயே உலகளாவிய ரீதியில் தோற்றம் பெற்றமையே இதற்கான காரணமாகும். ஆனால் இத்தகைய சூழல் பிரச்சினைகள் தனியொரு நாட்டை மாத்திரம் பாதிக்காது. மாறாக உலகின் அனைத்து நாடுகளையும் பாதிக்கும் என்பதைப் புரிந்துகொள்ளவேண்டும் என்றார்.