தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் சுயசரிதையைத் தழுவி, 'தலைவி' என்ற பெயரில் திரைப்படமொன்றை இயக்கியிருக்கும் இயக்குனர் விஜய் அடுத்ததாக ‘ஓக்டோபர் 31 லேடீஸ் நைட்’ என்ற பெயரில் புதிய படத்தை இயக்குகிறார்.

குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் கண்டு இரசிக்கும் வகையில் ஜனரஞ்சகமான - அழுத்தமான திரைப்படங்களை இயக்கி வரும் இயக்குனர்களில் இயக்குனர் விஜய்யும் ஒருவர். 

'சைவம்', 'லக்ஷ்மி', 'தேவி' என வெவ்வேறு ஜேனரில் திரைப்படங்களை இயக்கி வித்தியாசமான இயக்குனர் என்ற பெயரை சம்பாதித்து இருக்கும் இயக்குனர் விஜய், தற்போது 'ஓக்டோபர் 31லேடீஸ் நைட்' என்ற பெயரில் புதிய படத்தை இயக்கி வருகிறார். 

இதில் நடிகைகள் நிவேதா பெத்துராஜ், மஞ்சிமா மோகன், மேகா ஆகாஷ், ரெபா மோனிகா ஜோன் ஆகியோர் கதையின் நாயகிகளாக நடித்திருக்கிறார்கள். தெலுங்கின் இளம் நடிகர் ஒருவர் கௌரவத் தோற்றத்தில் நடித்திருக்கிறார். 

அகால மரணமடைந்தவர்களுக்கு நினைவஞ்சலி செலுத்தும் வகையில் கொண்டாடப்படும் ஹலோவீன் நிகழ்வை மையப்படுத்தி தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் தயாராகி இருக்கும் இந்த திரைப்படம் நேரடியாக டிஜிட்டல் தளத்தில் வெளியாகிறது. 

இப்படத்தின் படப்பிடிப்பை நிறைவு செய்திருக்கும் இயக்குனர் விஜய், தற்போது இறுதிக்கட்ட பணிகளில் ஈடுபட்டு வருகிறார். டிஜிட்டல் தளத்தில் வெளியாகும்‌ திகதி தொடர்பான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.