(நா.தனுஜா)

சஜித் பிரேமதாஸ நாட்டின் தலைவராவதை எவ்விதத்திலும் விரும்பாத சிலர் இருக்கின்றார்கள். அத்தகைய கனவைக் கொண்டிருக்கும் தரப்பினர் எவ்வித நிபந்தனைகளுமின்றி தற்போது ஒன்றிணைந்துகொண்டிருக்கிறார்கள்.

தற்போதைய சூழ்நிலையில் அரசாங்கமே ரணில் விக்கிரமசிங்கவைப் பின்னிருந்து வழிநடத்துகின்றதா? என்ற சந்தேகமும் எழுகின்றது என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்தார்.

ஜனாதிபதி கொலைச்சதி விசாரணை அறிக்கை விரைவாக வெளியிடப்பட வேண்டும்: நளின்  பண்டார | Virakesari.lk

கொழும்பில் இன்று புதன்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துவெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். 

அங்கு அவர் மேலும் கூறியதாவது:

அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படும் தீர்மானங்கள் அவர்கள் மீது மாத்திரம் தாக்கத்தை ஏற்படுத்துமானால் நாம் எதுவும் கூறமாட்டோம்.

ஆனால் அவர்களின் தீர்மானங்கள் ஒட்டுமொத்த நாட்டின் மீதும் தாக்கங்களை ஏற்படுத்துகின்றன. உரத்தை உற்பத்தி செய்வதில் ஏற்படக்கூடிய வீழ்ச்சியின் காரணமாக அவசியமான உணவுப்பொருட்களின் உற்பத்தியில் பாதிப்பேற்படும் அதுமாத்திரமன்றி உணவுப்பொருட்களின் விலைகள் அதிகரிப்பதால் பொதுமக்கள் பாரிய நெருக்கடிகளுக்கு முகங்கொடுக்கவேண்டிய சூழ்நிலையேற்படும்.

இப்போது மக்களின் கைகளில் பணம் இல்லை. அதேபோன்று வியாபார மற்றும் வர்த்தக நடவடிக்கைகளில் பாரிய வீழச்சி ஏற்பட்டிருப்பதால் வியாபாரிகளும் பாரிய சவாலை எதிர்கொண்டுள்ளனர். நாட்டை பாரிய வீழ்ச்சிக்கு இட்டுச்செல்லும் நடவடிக்கைகளிலேயே அரசாங்கம் ஈடுபட்டிருக்கிறது.

கேள்வி - ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றத்திற்கு வருகைதருவதையிட்டு ஐக்கிய மக்கள் சக்தி அச்சமடைந்திருக்கிறதா?

பதில் - ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றம் வருவது தொடர்பில் மஹிந்தானந்த அளுத்கமகே தான் அதிகளவில் கருத்துக்களை வெளியிட்டார்.

இதுவே எமக்கு இருக்கின்ற பிரச்சினை. அரசாங்கம் தற்போது எதிர்கொண்டிருக்கும் நெருக்கடிக்கு முகங்கொடுப்பதற்கான ரணில் விக்கிரமசிங்கவை அமைச்சரவைக்கு அழைத்து, அவரது உதவியைப் பெற்றுக்கொள்வதற்கு திட்டமிட்டிருக்கிறதா என்று எமக்குத் தெரியவில்லை. 

இல்லாவிட்டால் ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றத்திற்கு வருகைதந்ததன் பின்னர் எதிர்க்கட்சி இரண்டாகப் பிளவுபடுமென கனவு காண்கிறார்களா என்றும் தெரியவில்லை.

எனவே ரணில் விக்கிரமசிங்கவின் உதவியைப் பெற்று எதிர்க்கட்சியை வலுவிழக்கச்செய்வதற்கான முயற்சிகளையே அரசாங்கம் முன்னெடுத்து வருகின்றது.

இராஜதந்திரத் தொடர்புகளும் அனுபவமும் உடைய ரணில் விக்கிரமசிங்கவை அரசாங்கம் அதன்பக்கத்தில் இழுத்துக்கொள்ளுமானால், அதில் எமக்கு எவ்வித பிரச்சினைகளும் இல்லை. எனினும் அவர் தனியொருவராவார். எதிர்க்கட்சியில் 50 இற்கும் மேற்பட்டோர் இருக்கின்றார்கள்.

ஆகையினால் எவ்வகையிலும் எதிர்க்கட்சி பலவீனமடையாது. மாறாக இங்கு காணப்படுவது வர்க்க வேறுபாட்டுப் பிரச்சினையாகும். வர்க்கப்பிரிவினைகளின் காரணமாக பல்வேறு சவால்களுக்கு மத்தியிலேயே பிரேமதாஸ இந்நாட்டின் தலைவரானார். அவர் பாரிய செல்வாக்கைக்கொண்ட உயர்மட்டக் குடும்பத்திலிருந்து வரவில்லை. 

ஆகவே இத்தகைய வர்க்கவேறுபாட்டை முன்னிலைப்படுத்துகின்ற, அதன் காரணமாக சஜித் பிரேமதாஸ நாட்டின் தலைவராவதை எவ்விதத்திலும் விரும்பாத சிலர் இருக்கின்றார்கள்.

ஆகவே அத்தகைய கனவைக் கொண்டிருக்கும் தரப்பினர் எவ்வித நிபந்தனைகளுமின்றி தற்போது ஒன்றிணைந்துகொண்டிருக்கிறார்கள். நேற்று  பாராளுமன்றத்தில் மஹிந்தானந்த அளுத்கமகேவின் உரையைப் பார்க்கும்பேர்து ரணில் விக்கிரமசிங்கவைப் பின்னிருந்து அரசாங்கம் வழிநடத்துகின்றதா? என்ற சந்தேகமும் எழுகின்றது.

எனினும் நாமனைவரும் சஜித் பிரேமதாஸவுடன் உறுதியாக நிற்கின்றோம். இத்தகைய பிரிவினைகளுக்கு இடமளிக்காமல், எதிர்காலத்திற்குப் பொருத்தமான சிறந்த நாடொன்றைக் கட்டியெழுப்புவதே எமது நோக்கமாகும்.

அதற்கான நாம் ஆரம்பித்த அரசியல் பயணத்திலேயே இப்போதும் தளர்வின்றிச் சென்றுகொண்டிருக்கின்றோம். சஜித் பிரேமதாஸவைத் தோற்கடிக்கும் நோக்கில் சில தரப்புக்கள் ஒன்றிணையலாம்.

அவர்களுக்கென்று ஒரு திட்டமும் காணப்படலாம். ஆனால் அது ஒருபோதும் வெற்றியடைக்கூடிய திட்டமாக அமையாது என்பதே எமது கருத்தாகும்.

கைதுசெய்யப்பட்டு சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டிருக்கும் ரஞ்சன் ராமநாயக்க, நாம் வாழ்வதற்கு வளங்கள் இருக்கவேண்டும் என்றே குறிப்பிட்டார்.

ஆனால் அதற்குத்தேவையான அனைத்து இயற்கை வளங்களும் தற்போது படிப்படியாக அழிந்துகொண்டுவருகின்றன. இன்னும் சிலகாலங்களில் இருப்பதற்கு நாடு கூட இல்லாத நிலையே ஏற்படும். துறைமுகநகரத்தை சீனாவிடம் கொடுத்துவிட்டார்கள். இப்போது கொழும்பில் மிகவும் பெறுமதிவாய்ந்த இடங்களை சீனாவிற்கோ அல்லது வேறு நாடுகளுக்கோ வழங்குவதற்கான நடவடிக்கைகள் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.